- ஜெயஸ்ரீ எம். சாரி, நாந்தேட்.
மானிடராய் பிறப்பதே அரிது எனக் கூறப்படும் போது பிறக்கையில் எவ்வித குறையுமின்றி பிறப்பதும் அதைவிட அரிதாய் கருதப்படுகிறது.
மஹாராஷ்டிர மாநிலத்தில் நாந்தேட் என்னும் இடத்தில் தான் பிறந்த பத்தாம் வயதில் போலியோவினால் பாதிக்கப்பட்ட கோலக்கலைஞர் கோதாவரி ஜங்கில்வாட் தன் கோலங்களின் மூலமாக பக்தி, மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு, கொண்டாட்டங்கள் என பல்வேறு வாழ்வியல் நெறிகளை விளக்குகின்றார்.
பாரத தேசத்தில் பக்தியை வெளிப்படுத்த பல்வேறு வழிகளை, முறைகளை பக்தர்கள் பரம்பரையாக கடைப்பிடித்து, கையாண்டு வருகின்றனர்.
மனதில் பக்தி இருந்தாலே அதன் வெளிப்பாடே பல்வேறு விதங்களில் உதாரணமாக கோயில்களை தூய்மை செய்வது, நந்தவனத்து பூக்களை பறித்துக் கொடுப்பது, மாலைகள் கட்டுவது, கோலங்கள் போடுவது, பக்தர்களுக்கு உதவுவது முதலியவையே.
அவ்வாறே, கோதாவரி ஜங்கில்வாட் மஹாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற பத்து நாள் கண்பதி உற்சவம், கோகுலாஷ்டமி, தசரா கொண்டாட்டம், மஹா சிவராத்திரி போன்ற விழாக்களில் கணபதி, விட்டல் – ருக்மிணி, தேவி பராசக்தி, பரமசிவன் – பார்வதி என தெய்வங்களை தன் கோலங்களில் வரைந்து தன் பக்தியை வெளிப்படுத்துகிறார்.
ஒருமுறை லவன்-குசன் தோற்றங்களை கோதாவரி ரங்கோலியில் வரைந்து இருந்ததைப் பார்த்தவுடன் நம் தமிழில் லவன்-குசன் பாடுவதாய் வரும் ‘ஜகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே’ – பாடலே என் நினைவில் வந்தது.
சக்கர நாற்காலியிலேயே முடங்கி விடாமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இயற்கையை பாதுகாத்தலின் பயன், பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டியதன் அவசியம் எனபனப் போன்ற பல கருத்துகளை தன் கோலங்கள் மூலமாக வலியுறுத்துகிறார், கோதாவரி.
மாற்றுத்திறனாளியான தனக்கு சமுதாயம் கொடுக்கும் ஆதரவினால் கோதாவரி பல குழுக்களில் சேர்ந்து மரம் நடுதல், அனாதையான குழந்தைகளுக்கு தனக்கு தெரிந்த கலைகளை கற்று தருதல், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி எனப் பல சமுதாயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
பெற்றோர்களை கோதாவரி சந்திக்கும் போதெல்லாம் குழந்தைகளுக்கு தகுந்த வயதில் போட வேண்டிய தடுப்பூசிகளை போடுமாறு கேட்டுக் கொள்வதுடனும், குழந்தைகள் விரும்பும் கலைகளை கற்றுக் கொள்ள அனுமதி கொடுக்குமாறும் வலியுறுத்துகிறார்.
தன்னுடைய கால்களில் பலத்தினை இழந்தாலும், கோதாவரி தன் தாயுடன் நாந்தேட் நகரில் தன்னம்பிக்கையுடன் தனக்கான வேலைகளை தானே செய்து கொண்டு வருகிறார்.
சஞ்சய் காந்தி நிராதார் யோஜனாவின் மூலம் மிகவும் குறைவான தொகையையே அரசாங்கத்திடம் இருந்து உதவிபெறும் இந்தக் கோலக்கலைஞருக்கு மக்கள் கொடுக்கும் வாய்ப்பினால் வரும் வருமானமே மூலதனமாக உள்ளது.
தன் முகத்தில் புன்னகையை நிரந்தரமாக கொண்ட கோதாவரியோ தன் வாட்ஸ்அப் வாசகமாக மராட்டியில் ‘ ஹே ஜீவன் சுந்தர் ஆஹே’, (இந்த வாழ்க்கை மிகவும் அழகானது) என வைத்துள்ளார்.
கோதாவரி ஜங்கில்வாட் கோதாவரி நதி பாயும் நாந்தேட் நகரின் ஒரு அரிய கலைப் பொக்கிஷம் என்று கூறினால் மிகையாகாது.