சென்னை: மோடி எதிர்ப்பு அரசியலே தனக்கு கல்லா கட்டும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் இன்னமும் கொஞ்சம்கூட அறிவு வராத நிலையில் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் கண்டனக் கணைகள் தூள் பறக்கின்றன.
என்ன காரணமோ, என்ன முடிவு எடுத்தார்களோ… இருக்கும் கொஞ்ச நஞ்ச தொண்டர்களின் மனநிலைக்கும் விரோதமாக தமிழக பாஜக., தலைமை செயல்படுவதாக குமுறுகின்றனர் தொண்டர்கள். கருணாநிதி காவேரி மருத்துவமனையில் கிடந்த நாள் முதல், பாஜக.,வினர் பட்டுக் கொண்டு வந்த விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
திராவிட நாடு என்ற தென் மாநிலங்கள் நான்குக்கும் கூட போணியாகாத கருணாநிதியை, ஏதோ அகில உலகத் தலைவர் என்ற அளவுக்கு பாஜக.,வினர் எடுத்துச் சென்றனர். அதில் ஸ்டாலின் போட்ட ஸ்டன்ட் அரசியலில் அவர் வெற்றி பெற்றுவிட்டார். கருணாநிதி மறைவுக்காக நாடாளுமன்றத்தில் இரங்கல், அவை ஒத்திவைப்பு என்ற அளவுக்கெல்லாம் செல்வதற்கு, கருணாநிதி ஒன்றும் தேசியத் தலைவரோ, தேசியம் வளர்த்த தலைவரோ இல்லை. ஒவ்வொரு நாளும் தன் விஷமப் பேச்சால் திராவிடம் என்றார், தமிழ் என்றார். தேசத்தை கேவலப் படுத்தினார். மட்டரகமாக பேச்சால் தேசிய வாதிகளின் நெஞ்சைக் காயப் படுத்தினார்.
ஆனால், மாறி வரும் அரசியல் சூழலுக்காக பாஜக., கருணாநிதி விவகாரத்தில் அதிகமாகவே இரங்கி வந்து இறங்கியும் வந்து ஆட்டம் போட்டது. அதற்கு சூத்திர தாரி என்று தமிழிசையைக் கையைக் காட்டுகிறார்கள் கட்சியினர்.
இந்த நிலையில்தான், திமுக., தலைவர் ஆனதும் பேசிய ஸ்டாலின், மோடியை சாடினார். காவி அடிக்க நினைக்கும் அவரை தடுத்து நிறுத்துவோம் என்றார். இப்படி தங்கள் கட்சித் தலைவரை, ஒரு பிரதமரை கேவலமாகப் பேசும், அரசியல் ரீதியாக நேர் எதிர் கொள்கைகளைக் கொண்டவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டு பல்லிளிக்கும் அளவுக்கு தமிழக பாஜக., தரம் தாழ்ந்து விட்டது கண்டு உணர்வாளர்கள் பொங்குகின்றனர்.
இருபது வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையே பெறாத அந்தக் காலத்திலும் கூட தமிழகத்தில் பாஜக.,வுக்கு கிராமம் தோறும் கிளைகள் இருந்தது. ஓரளவுக்கு தொண்டர்களும் இருந்தார்கள். ஆனால் அண்மைக் கால அரசியல் தடுமாற்றங்களில் அது கொஞ்சம் கொஞ்சமாக மவுசை இழந்து வருகிறது.
இதற்கு, நவீன சமூக வலைத்தள பகிர்வுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. கருத்து பதிவு செய்தல், பகிரல், பரவல் என்பதில் தான் அரை நூற்றாண்டு திமுக., தன்னை இன்னும் உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கிறது. சினிமா மோகமும் மக்களின் சிந்தனையைச் சிதைக்கும் நச்சுக் கருத்துகளையும் கொண்டுதான் திமுக., தன்னை நிற்க வைத்துக் கொண்டது.
பாஜக.,வோ, தற்போது இருக்கும் சமூக தள ஆதரவு வாய்ப்பையும் கூட இழந்துவிடும் அவலத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று மனம் பொருமுகிறார்கள் பலர்.
அப்பனாலயே முடியலையாம்…இவரு நிமுத்த போறாராம்.. பாடம் யாருக்கு யார் புகட்ட போகிறார்கள் என காலம் பதில் சொல்லும்.. தமிழகத்தைப் பொறுத்தவரை மோடி எதிர்ப்பு அரசியல்தான் முன்னோக்கி செல்லும் என்பதை உணர்ந்து ஸ்டாலின் இந்த அணுகுமுறையை எடுக்கிறார். ஆனால் பாஜக,.?
நாகரிக அரசியல், அரசியல் பண்பாடு என்ற பெயரில் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளார்களை விட அதிகமாக கூவிக்கொண்டிருக்கிறது…எப்ப அவங்க மேடைக்கு அழைப்பார்கள் என எதிர்பார்த்து அங்கு சென்று அடுக்கு மொழி வசனங்களை உளறி கொண்டுள்ளது. இன்னும் தெளிவாக சொன்னால் “அவனுங்க தெளிவா இருக்கானுங்க”….நாம நாகரிகம் பண்பாடு என நம்மை நாமே ஏமாற்றி கொண்டுள்ளோம்…. இதில் கழகங்கள் இல்லா தமிழகமாம்….அட போங்க…!
– என்ற உளக்குமுறல் நிச்சயம் பாஜக., மேலிடத்துக்குக் கேட்காது! காரணம் மொழி! அதையே சாதகமாக்கி ஒரு தேசியக் கட்சியை தேய்த்துவிட்ட பணியை சிறப்பாகச் செய்திருக்கும் தமிழிசையின் காதுகளில் இது கேட்டாலும் கேட்டதாக இருக்கதுதான்!!




