chandrababu naidu - 2026

பிரதமர் கனவில் எத்தனை பேர் இருப்பார்களோ? இப்போது அந்தக் கனவினாலேயே சந்திரபாபு நாயுடுவுடன் வைத்திருந்த தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொண்டுள்ளது.

கடந்த வாரம் கோல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு! அப்போது அவர் பேசியவை பெரும் விமர்சனங்களைச் சந்தித்தன. ரஃபேல் குறித்துப் பேசியபோது ஜெட் விமானம் என்று மாற்றிப் பேசி உளறினார். அவர் கொடுத்த தகவல்கள் எல்லாம் மேடையில் இருந்தவர்களையே நெளியச் செய்தது. எல்லாம் தனக்கும் பிரதமர் கனவு இருக்கிறது என்பதைக் காட்டத்தான்.

குறிப்பாக, மாநிலக் கட்சிகளுடன் தேசியக் கட்சியான காங்கிரஸ் கூட்டணி வைக்கும் போது, ஒவ்வொரு மாநிலத்திலும், குறைந்தபட்சம் மொத்தத் தொகுதிகளில் பாதி அளவாவது பெற்று வெற்றி பெற யோசிக்கிறது. ஏற்கெனவே நாடாளுமன்ற மக்களவையில் மொத்த தொகுதிகளில் பத்து சதத்துக்கும் குறைவான இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தும் இழந்து தவிக்கும் காங்கிரஸ், இம்முறை அதிக தொகுதிகளில் போட்டியிட்டால்தான், ஆட்சி அமைப்பதற்கான கனவு சாத்தியப் படும்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

ஆனால், மம்தா, மாயாவதி, சந்திரபாபு நாயுடு என அனைவருமே தாங்கள்தான் பிரதமர் வேட்பாளர் என்று கருதிக் கொண்டு, அவரவர் மாநிலங்களில் அதிக இடங்களில் போட்டியிட்டு, அதிகபட்ச தொகுதிகளைக் கைப்பற்றினால்தான், கூட்டணி ஆட்சி வரும் போது, தங்களுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணுகின்றார்கள்.

இந்த நிலையில், காங்கிரஸுக்கு மிகக் குறைந்த தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி, கூட்டணியை நீட்டிக்க விரும்பும் நாயுடு, மம்தா ஆகியோருடன் கூட்டணியை தொடர வேண்டுமா என காங்கிரஸ் யோசிக்கிறது. காரணம், ராகுலை பிரதமர் வேட்பாளர் ஆக்க முன் வராமல், கூட்டணிக் கட்சியினரே மட்டம் தட்டுவதும், மாநிலங்களில் அவர்கள் வெற்றி பெறும் தொகுதிகளைக் காட்டிலும் குறைவான தொகுதிகளே தேசியக் கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் விரும்புவதும்தான் காங்கிரஸுக்கு இப்போது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அறிவித்ததைப் போல், இப்போது ஆந்திரத்திலும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் 119 தொகுதிகளில் காங்கிரசுக்கு 19 இடங்கள் ஒதுக்கப் பட்ட போதும் தெலுங்குதேசத்தால் இரண்டே இரண்டு இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது.

எனவே, ஆந்திரத்தைப் பொருத்த வரை ஜெகன்மோகன் ரெட்டியும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் சந்திரசேகர ராவும் கூட்டணி போட்டுக் கொண்டதால், காங்கிரஸ் தெலுங்குதேசம் கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்காது என்றும், குறைந்த பட்ச தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுவதால் எதையும் சாதிக்க முடியாது என்றும் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துவிட்டது. அதனாலேயே, ஆந்திர தேர்தலில் 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் 25 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக ஆந்திராவுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து, பிரதமர் கனவு ஆசையால் வெளியேறிய சந்திரபாபு நாயுடுவுக்கு இது ஆப்பசைத்த குரங்கின் கதையாக ஆகிப் போனதுதான் மிச்சம்!

காங்கிரஸை பலமாக எதிர்த்துதான் தெலுகு தேசம் கட்சி தொடங்கப் பட்டது. அதையும் மறந்து கூட்டணி வைத்தார் நாயுடு. ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அபார வளர்ச்சி பெற்று வருகிறார். அண்மையில் அவர் நடத்திய யாத்திரையில் மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்தது. இப்போது நாயுடு பெரும் யோசனையில் ஆழ்ந்திருக்கிறார்!

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending