சட்டப்பேரவையில் சுவாரஸ்ய கிரிக்கெட் விளையாடிய பொன்முடி, ஜெயக்குமார்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
Tamil Nadu Assembly EPS - 2026

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஒரு சுவாரசியம் நிகழ்ந்தது. அவையில் சிரிப்பொலியும் பரவியது. முதலமைச்சர் ஹாட்ரிக் சிக்சர் அடிப்பார் என செம்மலை கூறினார், ஆனால் மு.க.ஸ்டாலின் போடும் பால் ஆளுங்கட்சியை அவுட்டாக்கும் என்று சட்டசபையில் பொன்முடி பேச, ஸ்டாலின் போடும் பந்து நிச்சயம் நோ பாலாகத் தான் இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்ததால், சட்டப்பேரவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.

சட்டசபையில் இன்று பொன்முடி (தி.மு.க.) பேசுகையில், ஜி.எஸ்.டி.யால் தமிழகத்துக்கு நன்மையா? கெடுதலா? என்று உங்களால் சொல்ல முடியுமா? நாடாளுமன்றத்தில் நேற்று உங்கள் கட்சியில் பொறுப்பில் உள்ளவரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசும் போது, ஜி.எஸ்.டி.யால் தான் எல்லாமே முடங்கி விட்டது, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் சிறு-குறு தொழில் நிறைய மூடப்பட்டு விட்டதாக பேசி இருக்கிறார் என்றார்.

பொன்முடி மேலும் பேசும்போது, மத்திய பட்ஜெட்டை பாராட்டி முதல்வர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அதற்கு நேர்மாறாக தம்பிதுரை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறாரே இது அவரது தனிப்பட்ட கருத்தா? கட்சி கருத்தா? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மாநில அரசுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் பேசியிருக்றார். இதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் கூறிய பொன்முடி, நேற்று செம்மலை இங்கு பேசும்போது, முதலமைச்சர் சிக்சராக அடிக்கிறார். முதல் சிக்சர், 2-வது சிக்சர் என்று பேசினார். நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் எத்தனை சிக்சர் அடித்தாலும் மு.க.ஸ்டாலின் போடும் பந்தில் ஆளும் கட்சி கண்டிப்பாக கிளீன்போல்டு ஆகி விடும் என்றார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், நான் உறுதியாகச் சொல்கிறேன். அது “நோ-பால்” ஆகி விடும் என்றார். இதைத் தொடர்ந்து, கிரிக்கெட் விளையாடியது போலும் கமெண்ட்ரி கேட்டது போல், சட்டப் பேரவையில் ரசிகர்கள் கைத்தட்டல்கள் விண்ணைப் பிளப்பது போல் பலத்த சிரிப்பலை எழுந்தது!

இந்நிலையில் குறுக்கிட்ட அமைச்சர் தங்கமணி, கிரவுண்டுக்குள் வந்து பந்து போட்டால்தான் போல்டு ஆகும். கிரவுண்டுக்குள்ளேயே வேலை இல்லாதபோது பந்துக்கு என்ன வேலை என்று கூற, அடுத்தடுத்து எழுந்த சிரிப்பலையுடன் விவாதம் நடந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.