spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?காஷ்மீர் யாருக்கு சொந்தம்?

காஷ்மீர் யாருக்கு சொந்தம்?

- Advertisement -

நேற்று வரை பலருக்கும் விடை தெரிந்த அதே நேரம் சிலரால் ஏற்கப்படாத இந்தக் கேள்விக்கு இன்று தெளிவான அரசியல் தீர்வு கிடைத்து விட்டிருக்கிறது.

படேல், அம்பேத்கர் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி மட்டுமல்ல இந்தியாவின் பிற மாநில மக்களைத் துளியும் கலந்தாலோசிக்காமல் காஷ்மீருக்கு என்று சிறப்பு சலுகையை நேரு தன்னிச்சையாக வழங்கினார்.

இன்று அந்த சலுகை திரும்பப் பெறப்பட்டுவிட்டிருக்கிறது.

ஒரு தேசத்தின் ஓர் அங்கமான காஷ்மீரில் அதே தேசத்தின் பிற அங்கங்களான பிற மாநிலத்தினர் நிலம் வாங்கவோ தொழில் தொடங்கவோ முடியாது என்பது தொடங்கி காஷ்மீருக்கு என்று தனி சட்டசபை; தனி கொடி; பாகிஸ்தானியருக்கு காஷ்மீரில் இருக்கும் சில உரிமைகள் கூட இந்தியர்களுக்குக் கிடையாது எனப் பல சலுகைகள் காஷ்மீருக்குத் தரப்பட்டதற்கு என்ன காரணம்?

உண்மையில் காஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா… பாகிஸ்தானுக்கா… அல்லது அது தனி நாடாக இருக்கவேண்டுமா? என்ற இந்தப் பிரச்னையின் தொடக்கப்புள்ளியைப்பற்றி எ மிஷன் இன் காஷ்மீர் (தமிழில்: காஷ்மீர் முதல் யுத்தம்) என்ற நூலை ஆண்ட்ரூ வொயிட்ஹெட் எழுதியிருக்கிறார்.

பி.பி.சி.யின் செய்தித் தொடர்பாளரான அவர் வெகு எச்சரிக்கையாக பி.பி.சி.க்கும் இந்தப் புத்தகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்கூட்டியே சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்கிறார். ஒருவகையில் இந்தப் புத்தகம் எழுதும் வாய்ப்பு அவருக்கு மிகவும் எதேச்சையாகவே கிடைத்திருக்கிறது. சுய ஆர்வத்தின் பேரிலேயே இதை எழுதியிருக்கிறார்.

பிரிவினையின் போது நடந்த சம்பவங்களைத் தொகுக்க காஷ்மீருக்கு வந்தவர், தான் பேட்டி எடுக்க வேண்டிய நபர் கிடைக்காமல் போகவே சோர்வுடன் திரும்பிப் போகும் வழியில் ஒரு மடாலயத்தைப் பார்த்துவிட்டு மெதுவாக உள்ளே நுழைந்திருக்கிறார். ஒரு புதியதொரு உலகத்துக்குள் எடுத்து வைத்த முதல் காலடி அது என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அந்த மடாலயத்தில்தான் காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் முதல் அத்துமீறலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஒருவர், கிட்டத்தட்ட அந்த வ்ரலாற்றைச் சொல்லிவிட்டு இந்த உலகில் இருந்து விடைபெற வேண்டும் என்று நினைத்ததுபோல், 91 வயதில் மரணத்தின் விளிம்பில் உயிரைக் கையில் பிடித்தபடி இருந்து வந்திருக்கிறார்.

அவர் சொன்ன விஷயங்களே ஆண்ட்ரூ வொயிட் ஹெட்டை இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியிருக்கின்றன. 1947 காலகட்டத்து காஷ்மீரின் சித்திரத்தை நம் மனக் கண் முன் கொண்டுவருவதில் கடும் சிரமத்தை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லைக்கோடு என்ற ஒன்றை பிரிட்டிஷார் வரைந்து கொடுத்தார்கள் என்றாலும் எந்த சம்ஸ்தானத்தையும் இந்தியாவுக்கு சொந்தம்… பாகிஸ்தானுக்கு சொந்தமென்று பிரித்துக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு சமஸ்தானமும் அதனுடைய விருப்பத்துக்கு ஏற்ப எந்த தேசத்தில் சேர வேண்டுமோ சேர்ந்து கொள்ளலாம். அல்லது சேராமல் தனித்தும் இருந்து கொள்ளலாம் என்றுதான் பிரிட்டிஷார் சொல்லியிருந்தார்கள்.

பிரிட்டிஷாரால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்துஸ்தானானது பாகிஸ்தான், இந்தியா என்ற இரண்டு தேசங்களாகப் பிரிக்கப்பட்டதில் யாருடன் சேர்வது என்ற பிரச்னை படேலின் பொறுப்பில் விடப்பட்ட 500 சொச்சம் சமஸ்தானங்களில் சில மாதங்களிலேயே சுமுகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே ஒரு சமஸ்தானத்தைத் தவிர. அது நேருவின் கையில் விடப்பட்ட காஷ்மீர்.

காஷ்மீர் பிரச்னை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது… உண்மையில் என்னதான் நடந்தது என்பதை ஆண்ட்ரூ வொயிட் ஹெட் தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்திய ராணுவக் குறிப்புகளில் ஆரம்பித்து காஷ்மீர் மீதான பாகிஸ்தான் கூலிப்படைகளின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து கிடைத்த கடிதங்கள் வரை அனைத்து அதிகாரபூர்வ, அதிகாரபூர்வமற்ற ஆவணங்களைக் கொண்டு காஷ்மீர் பிரச்னை குறித்த ஒரு விரிவான சித்திரத்தை முன்வைக்கிறார்.

காஷ்மீர் தொடர்பாக மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகள் இந்தியா மீது வைக்கப்படுவதுண்டு. அவற்றுக்கு இந்த நூலில் தரப்பட்டுள்ள ஆவணங்கள் ஒரு தெளிவான பதிலைத் தருகின்றன.

1. காஷ்மீரின் மன்னரான ஹரிசிங்கைக் கட்டாயப்படுத்தி இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது.

2. காஷ்மீர் இந்தியாவுடன் சேர்வது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே இந்திய ராணுவம் காஷ்மீரில் கால்பதித்துவிட்டது. அதாவது, சட்டப்படிப் பார்த்தால் அது இன்னொரு நாடான காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்புதான்.

3. இந்தியாவுடன் சேர்வது தொடர்பான காஷ்மீர் மக்களின் எண்ணத்தை அறிந்துகொள்ளப் பொதுவாக்கெடுப்பு நடத்துவதாக வாக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், நடத்தப்படவில்லை.

ஆண்ட்ரூ வொயிட் ஹெட் தொகுத்துத் தந்திருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் மேலே சொன்ன குற்றச்சாட்டுகளை அலசிப் பார்ப்போம்.

ஒருவகையில் காஷ்மீர் பிரச்னையானது அன்று அதிகாரத்தில் இருந்த நான்கு பேரால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

மத அடிப்படையில் ஒரு தேசத்தை உருவாக்கிய ஜின்னா…

சுதந்தர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு…

காஷ்மீரின் முதல் அமைச்சர் ஷேக் அப்துல்லா…

காஷ்மீரின் அப்போதைய மன்னர் ஹரி சிங்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, 1947-ல் காஷ்மீர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தவேண்டும் என்ற ஜின்னாவின் வெறி நன்கு தெரியவருகிறது.

இந்தியாவுடன்தான் சேர வேண்டும். ஆனால், அதிகாரம் நம் வசமே இருக்க வேண்டும் என்ற மன்னர் ஹரிசிங்கின் விருப்பம் தெளிவாகப் புலனாகிறது (பதான் கூலிப்படையை காஷ்மீர் மீது ஜின்னா ஏவியதற்கு முக்கிய காரணமே ஹரிசிங் இந்தியாவுடன் சேர முடிவெடுத்ததுதான். சிலர் சொல்வதுபோல், பதான் கூலிப்படை தாக்கியதால் மன்னர் இந்தியாவுடன் சேர முடிவெடுத்திருக்கவில்லை. அவர்களின் தாக்குதலைப் பயன்படுத்தி இந்தியா வலுக்கட்டாயமாகவும் இணைத்துக் கொண்டிருக்கவும் இல்லை).

மன்னரின் அதிகாரம் பறிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதி ஒருவரிடம் தரப்பட வேண்டும் என்ற நேருவின் விருப்பம் விவரிக்கப்பட்டிருக்கிறது.

புதிய மக்கள் சக்தியாக உருவெடுத்திருந்த நேஷனல் கான்ஃப்ரன்ஸ் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா, இந்தியாவுடன் சேர்வதுதான் காஷ்மீருக்கு நல்லது என்று கருதியது தெரியவருகிறது.

இந்த நால்வரில் காஷ்மீர் இந்தியாவுடன் சேரவேண்டும் என்ற முடிவையே ஜின்னா தவிர மூவரும் தன்னிச்சையாக எடுத்திருக்கிறார்கள் என்பது ஆண்ட்ரூ வொயிட் ஹெட் தொகுத்த ஆவணங்களில் இருந்து புலனாகிறது.

பாகிஸ்தானுடன்தான் காஷ்மீருக்கு நிறைய வர்த்தகத் தொடர்புகள் இருக்கின்றன. காஷ்மீரில் முஸ்லீம்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். எனவே, பாகிஸ்தானுடன்தான் சேர அதிக வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் எதிர்பார்த்ததாக அவர்கள் தொடர்பான ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது.

ஆனால், மவுண்ட்பேட்டன் இந்தியாவுடன் சேர்வதுதான் காஷ்மீருக்கு நல்லது என்ற தொனியில் பேசியதாகவும் தெரியவருகிறது.

மன்னரைக் கட்டாயப்படுத்தி காஷ்மீரை இந்தியாவுடன் சேர்த்துக் கொண்டதாக பொதுவாகச் சொல்லப்படுவதை இந்த நூலில் தரப்பட்டிருக்கும் ஆவணங்கள் வெகுவாக மறுக்கின்றன.

காஷ்மீரின் அன்றைய பிரதமராக இருந்த ராமசந்திர கக் என்பவர் மன்னர் ஹரிசிங்கிடம் பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், மன்னர் ஹரி சிங்கோ முதல் வேலையாக அவரை பணி நீக்கம் செய்துவிட்டு இந்தியச் சார்பாக இருக்கும் மெஹர் சந்த் மஹாஜனைப் பதவியில் அமர்த்தி இருக்கிறார் (மெஹர் சந்த் மஹாஜன், பஞ்சாபைப் பிரிக்கும் எல்லை வரைவுக் குழுவில், இந்தியாவுக்குச் சாதகமாக அதிகப் பகுதியை வென்றெடுக்க காங்கிரஸ் தரப்பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்).

இந்தியத் தலைவர்களை காஷ்மீருக்கு வரும்படி ஹரிசிங் பலமுறை அழைத்திருக்கிறார். ஜின்னா காஷ்மீருக்கு வர விருப்பம் தெரிவித்தபோது வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.

காஷ்மீர் ராணுவத்துக்குத் தலைவராக இருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவரை விலக்கிவிட்டு அந்தப் பொறுப்பை இந்தியர் ஒருவருக்குத் தந்திருக்கிறார். இந்திய அரசிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை வாங்க விரும்பியிருக்கிறார். பிரிட்டிஷ் அரசு அதற்கு அனுமதி தரவில்லை என்பதால் அது முடியாமல் போய்விட்டிருக்கிறது.

மக்களாட்சி தொடர்பான சீர்திருத்தங்களைக் கொஞ்சம் தள்ளிப் போடும்படி நேருவிடம் ஹரிசிங் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இவையெல்லாம் பாகிஸ்தானின் கூலிப்படைகள் காஷ்மீர் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக, இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி மன்னரிடம் இந்தியா கேட்பதற்கு வெகு முன்பாகவே நடந்தவை என்பது ஆண்ட்ரூ வொயிட் ஹெட் தொகுத்த ஆவணங்கள் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிய வருகின்றன.

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மன்னர் ஹரி சிங்குக்கு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் முழு விருப்பம் இருந்திருக்கிறது. ஷேக் அப்துல்லாவை முன்னிலைப்படுத்துவதுதான் பிடிக்கவில்லை. அதனால்தான் நேருவிடம் கூட அவர் கொண்டு வர விரும்பிய மக்களாட்சி சார்ந்த சீர்திருத்தங்களைக் கொஞ்சம் தள்ளிப் போடும்படி மறைமுகமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவருகிறது.

அடுத்த விஷயத்துக்கு வருவோம்.
காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதாக காஷ்மீர் மன்னர் எப்போது கையெழுத்திட்டுக் கொடுத்தார்? அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பிறகு இந்திய ராணுவம் அங்கு கால் பதித்ததா…. அல்லது அதற்கு முன்பாகவே களமிறங்கிவிட்டதா?

இந்த அட்சர லட்சம் பெறும் கேள்வியை மிகவும் விரிவாக அலசியிருக்கிறார்.

ஆண்ட்ரூ வொயிட் ஹெட்டின் கூற்றுப்படி பார்த்தால், 1947, அக் 27 அன்று காலை 9 மணி அளவில். இந்திய ராணுவம் காஷ்மீர் மன்னர் கேட்டுக் கொண்டதன் பேரில் காஷ்மீரில் இறங்கியது. இந்தியாவுடன் இணைவது தொடர்பான ஒப்பந்தம் அதற்கு முன் கையெழுத்தாகவில்லை. அநேகமாக சில மணி நேரங்கள் கழித்துத்தான் கையெழுத்தாகி இருக்கவேண்டும். ஆனால், அக்-26-லேயே கையெழுத்தானதாக தேதியை திருத்தி எழுதிவிட்டார்கள் என்று சொல்கிறார்.

ஒருவகையில் இந்திய ராணுவம் அக்-27-ல் கால் பதித்தாலும் அக்-28 அன்றுதான் இந்திய துப்பாக்கியில் இருந்து முதல் தோட்டா சீறிப் பாய்ந்திருக்கிறது. அதாவது முறையான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான் அது தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. எனினும் இந்திய ராணுவம் எப்போது காஷ்மீரில் கால் பதித்தது என்ற கேள்வி முக்கியமான ஒன்றுதான்.

அக்-24 லேயே மஹாராஜா தன் கைக்குக் கிடைத்த ஒரு காகிதத்தில் அரசாங்க முத்திரையிட்டு கையெழுத்தும் போட்டு, இணைப்புக்கு சம்மதம், ராணுவ உதவி தாருங்கள் என்று ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். அதைப்பற்றி அக் 24-ல் நேரு, வானொலியில் ஆற்றிய உரையில் தெளிவாகக் குறிப்பிட்டும் இருக்கிறார்.

ஆனால், இந்திய அரசு, சம்ஸ்தானங்களின் இணைப்பு தொடர்பாக தயாரித்த அதிகாரபூர்வ விண்ணப்பத்தில் மன்னர் கையெழுத்து போட்ட தேதிதான் சந்தேகத்துக்கு இடமானது என்று ஆண்ட்ரூ வொயிட் தெரிவிக்கிறார்.

அந்தவகையில் பார்க்கும்போது காஷ்மீரில் இந்திய ராணுவம் முதலில் கால் பதித்த விஷயம் சட்டரீதியில் விவாதத்துக்கு உரியது. தர்மத்தின் அடிப்படையில் எந்தக் குழப்பமும் அதில் இல்லை.

கோப்பை கொடுக்கும் நிகழ்வு நடந்து முடிந்தால்தான் அதிகாரபூர்வ சாம்பியன் ஆக முடியும் என்பது உண்மைதான். ஆனால், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அல்லது விக்கெட் எடுத்து முடிப்பதோடே ஒரு அணியின் வெற்றி உறுதியாகிவிடுகிறது. அதன் பின் நடக்கும் கோப்பை வழங்கும் விழா என்பது வெறும் ஒரு சடங்குதான்.

அதுபோல்தான் ஹரி சிங் இந்தியாவுடன் இணைய தனது சம்மதத்தை ஒரு கடிதத்தில் எழுதிக் கொடுத்துவிட்டார். அதிகாரபூர்வ கையெழுத்து ஓரிரு நாட்கள் கழித்து போடப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.

அடுத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவென்றால், காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால், அது பின்னர் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான்.

இந்தப் புத்தகத்துக்கு வெளியில் இருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்த்தால் இந்த விஷயம் பற்றிய முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கும்.

பாகிஸ்தானிய பதான் படைகள், தாம் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும்; அதன் பிறகே பொது வாக்கெடுப்பு நடக்கவேண்டும் என்பது ஐ.நா. தீர்மானத்தின் முக்கிய நிபந்தனை. பாகிஸ்தான் அந்தப் பகுதியில் இருந்து இன்று வரை வெளியேறவில்லை. அதனால், இந்தியா பொது வாக்கெடுப்பை நடத்த முடிந்திருக்கவில்லை.

அடுத்ததாக, புதிதாகப் பதவி பெற்ற ஷேக் அப்துல்லா அடுத்து நடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் இந்தியாவுடன் தான் சேரவேண்டும் என்று சொல்லியவர்தான். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த அவருடைய கட்சிக்கு ஒட்டு மொத்த காஷ்மீர் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் இந்தியாவுடன் சேர்ந்ததை அவர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

அதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அரசு சட்டசபையில் இந்தியாவுடன் காஷ்மீர் சேர்ந்ததை அங்கீகரித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்தவகையில் காஷ்மீர் யாருடன் சேர வேண்டும் என்ற பெயரில் தனியான வாக்கெடுப்பு நடக்கவில்லையே தவிர அந்த விஷயத்துக்கு ஆதரவான மனநிலையில்தான் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதே புலனாகிறது.

அதன் பிறகு அங்கு சர்வ தேசக் கண்காணிப்பின் கீழ் இந்தியா ஏராளமான தேர்தல்களை நடத்தியிருக்கிறது. அனைத்திலும் மக்கள் வரிசையில் நின்று பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். எனவே இனியும் அவர்கள் யார் பக்கம் என்ற கேள்விக்கே இடமில்லை.

இந்த நூலை முடிக்கும்போது ஆண்ட்ரூ வொயிட் ஹெட் மிகுந்த கரிசனத்துடன் ஒரு விஷயம் சொல்கிறார். என்ன ஆனாலும் ஒரு பகுதியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் அவர்களிடமே விடப்பட வேண்டும் என்று முடிக்கிறார். இதை உலகை அடிமையாக்கி, அஸ்தமிக்காத சூரியனால் சுட்டெரித்த மேதகு விக்டோரியா மகாராணியாரிடம் யாராவது எடுத்துச் சொல்லியிருந்தால் உலகம் எவ்வளவோ முன்னேறியிருக்கும்.

இவையெல்லாவற்றையும்விட முக்கியமான இரண்டு விஷயங்கள் என்னவென்றால், ராஜ ஹரிசிங்கோ, ஷேக் அப்துல்லாவோ இந்தியாவுடன் சேரவேண்டுமானால் எங்களுக்கு விசேஷ சலுகை தரவேண்டும் என்று கேட்டிருக்கவே இல்லை. நேரு தாராளமாகத் தூக்கிக் கொடுத்த துயரம் அது.

அடுத்ததாக, பாக்-பதான் படைகள் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது, ராணுவ தளபதி, ஒரு வார கால அவகாசம் கொடுங்கள்; அந்த ஆக்கிரமிப்பாளர்களை இந்திய எல்லையைவிட்டு விரட்டிவிடுகிறோம் என்று கெஞ்சிக் கேட்டிருக்கிறார். நேருவோ அதைக் கேட்காமல் தானாகவே போர் நிறுத்தம் அறிவித்ததோடு விஷயத்தை ஐ.நா.வுக்கும் கொண்டுசென்றுவிட்டார்.

சீன விஷயத்திலும் இப்படித்தான், நம்மால் வெல்லவே முடியாது என்று ராணுவ தளபதிகள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் முறையான தயாரிப்புகள் எதுவுமே இல்லாமல் சீனாவுடன் போரை ஆரம்பித்து தேசத்தைத் தோற்கவைத்தார்.

உண்மையில் அவர் இந்திய பாக் எல்லையில் காட்டிய அதிகப்படியான நிதானத்தை சீன எல்லையில் காட்டியிருக்கவேண்டும். சீன எல்லையில் காட்டிய அதி சாமர்த்தியத்தை பாக் எல்லையில் காட்டியிருக்கவேண்டும். என்ன செய்ய தேசம் மக்கள் தலைவரின் கையில் வந்து சேர்ந்திருக்கவில்லை. ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டவரின் கைக்குப் போய் சேர்ந்துவிட்டது.

அன்று தொடங்கிய அந்த ஆங்கில-காலனியமயமாக்கத்தில் இருந்து விடுபட நாம் செய்யவேண்டிய முக்கியமான விஷயங்கள் பல இருக்கின்றன என்றாலும் ஆர்டிகிள் 370 நீக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றே.

Battle is won; The War should go on.

  • கட்டுரை: – பி.ஆர்.மகாதேவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe