சுபாஷிதம்: ஆறுவித சுகங்கள்!

ஆன்மிகக் கட்டுரைகள் சுய முன்னேற்றம் லைஃப் ஸ்டைல்
subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

19. ஆறுவித சுகங்கள்!

ஸ்லோகம்:

ஆரோக்யமான்ருண்யமவிப்ரவாச: சத்பிர்மனுஷ்யை: சஹ சம்ப்ரயோக:|
ஸ்வப்ரத்யயா வ்ருத்திரபீதிவாச: ஷட்ஜீவலோகஸ்ய சுகானி ராஜன்||

— மகாபாரதம்

பொருள்:

ஆரோக்கியம், கடன் இன்றி வாழ்வது, வயிற்றுப் பிழைப்புக்காக வெளிப் பிரதேசங்களுக்கு செல்லத் தேவை இல்லாமல் இருப்பது (இருக்கும் இடத்திலேயே பணிபுரிவது),  நல்லவர்களோடு சகவாசம், தன்னம்பிக்கையோடு வாழும் முறை, அச்சமின்றி வசிப்பது – இந்த ஆறும் மனிதனுக்கு சுகம் விளைவிப்பவை.

விளக்கம்:

சுகமாக வாழ வேண்டும் என்று நினைக்காவர் யார்? ஆயின், சுகம் என்றால் என்ன?  மனிதனுக்கு இருக்கக்கூடிய சுகங்கள் ஆறு என்று கூறிய விதுரநீதி இந்த ஸ்லோகம்.

ஆரோக்கியமே மகாபாக்கியம்! உடல்நிலை சரியில்லாத போதுதான் ஆரோக்கியத்தின் மதிப்பு தெரிய வரும். வியாசர் முதன்மையாக ஆரோக்கியத்தை குறிப்பிட்டுள்ளதை கவனிக்க வேண்டும்.

இனி, அடுத்து கடனில்லாத வாழ்க்கை. கடன் இல்லாதவனே பெரும் செல்வந்தன் என்பது பழமொழி. வரவுக்கு மிஞ்சிய செலவு செய்யாமல் இருப்பதே சுகம். நல்ல சகவாசம், நல்லவர்களோடு நட்பு ஒரு சுகம். அது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்.

அடிக்கடி செல்லும் பயணத்தால் ஆரோக்கியம், யோகாப்பியாசம் போன்றவை தடைப்படும். அதனால் அது குறித்துக் கூறியுள்ளார். வேலைக்காக குடும்பத்தை விட்டு தொலைவாக வசிப்பது, வயிற்றுப் பிழைப்புக்காக தொலைதூரப் பயணம் போன்றவை சுகத்தை அளிக்க மாட்டா. வேலையைப் பற்றிக் கூட இந்த ஸ்லோகத்தில் உள்ளது.

வாழ்க்கை வழிமுறை தன்னம்பிக்கையோடு கூடியதாக இருந்தால்தான் அது சுகத்தை அளிக்கும். அச்சமில்லாத வாழ்க்கைக்கு நம் வசிப்பிடம் தடையாக இருக்கக்கூடாது என்று இந்த ஸ்லோகம் அறிவுறுத்துகிறது. ஜன சஞ்சாரம் இல்லாத இடத்தில் இருக்கும் வீடு, ஆபத்துக்கு அருகாமையில் இருக்கும் வீடு போன்றவை வசிப்பதற்கு ஏற்றவையல்ல.

இவ்விதம் மனித வாழ்க்கைக்குத் தேவையான ஆறு சுகங்களை இந்த ஸ்லோகம் பேசுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.