தமிழகம் முழுதும்… விநாயக சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்!

Published:

vinayagar sengottai - 2026

தமிழ்க் கிழவி ஔவைப் பாட்டிக்கு அருள் செய்தவன், ஆதலால் விநாயகர் அகவல் தம் பேரில் பாடப் பெற்றவன்! ஞான முதல்வன், மூல முதல்வன், ஆற்றங்கரை அரச மரத்தின் அடியில் எல்லாம் வீற்றிருக்கும் எளிய பிள்ளை, விநாயகப் பெருமானின் விசேஷத் திருநாளாம் மகா சங்கட ஹர சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

வினை தீர்க்கும் விநாயகப் பெருமான் அவதரித்த நன்னாளாம் ஆவணி மாத வளர்பிறை நான்காம் நாளில் அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசி பரப்பி களிமண்ணால் செய்யப் பெற்ற விநாயகரை இல்லத்துக்கு வரவழைத்து, அருகம்புல் சுட்டி, மல்லிகைப்பூவும் எருக்கம்பூவும் அணிவித்து அழகு செய்து பூஜிக்கின்றனர்.

முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, அவல், பொரி, பழம் என நிவேதனம் செய்வித்து, விநாயகரை வழிபடுகின்றனர். இன்று விநாயகர் கோவில்கள் மட்டுமல்ல… தெருக்கள் பலவும் விநாயகர் திருமேனிகளால் நிறைந்திருக்கும். சிறப்பு வழிபாடுகள் செய்விக்கப் பெற்று மக்களின் மனம் உற்சாகம் அடைகிறது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

தென்னிந்தியாவில் விநாயகனுக்கு தெருக்கள் தோறும் திருமேனிகள்… ஆற்றங்கரை அரச மரத்தின் அடியில் எல்லாம் திருவுருவங்கள்… வட இந்தியாவில் அது போல் அனுமன் திருமேனிகள். ஆனைமுக நாயகன் தென்னிந்தியத் தெருக்களை நிறைக்கிறான். மந்தி முக நாயகன் அனுமன் வட இந்தியத் தெருக்களை நிறைக்கிறான். தேசத்தின் ஒற்றுமைத் திருவிழாவாய் விநாயக சதுர்த்தி நன்னாள் பலதரப்பட்ட மக்களாலும், கலாச்சாரப் பிணைப்புடன் கொண்டாடுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தி விழாவின் தனித்துவம்!

Related articles

Recent articles

spot_img