நெல்லை ஸ்ரீகாந்திமதியம்மன் திருக்கல்யாண உத்ஸவம் கோலாகலம்!

Published:

nellai gandhimathiamman temple - 2026
நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலம். Photos : Kayilaikannan Venkataraman

நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்மனுக்கு ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும் தொடர்ந்து இன்று திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி நகருக்குப் பெருமை சேர்க்கும் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் காந்திமதி அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

நேற்று முன்தினம் இரவு 11.30க்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து காந்திமதி அம்மன் தவக்கோலத்துடன் தங்க முலாம் பூசப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினார். அம்மன் திருவீதி உலா, தெற்கு ரதவீதி, பேட்டை ரோடு வழியாக நடைபெற்றது.

நேற்று காலை 6 மணிக்கு கம்பாநதியில் காந்திமதி அம்மன் தவக்கோலத்தில் காட்சி தந்தார். 8.30க்கு காந்திமதி அம்மனுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். அவருடன் நெல்லை கோவிந்தரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளினார்.

nellai gandhimathiamman kalyanam2 - 2026
நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலம். Photos : Kayilaikannan Venkataraman

நெல்லை பேட்டை சாலையில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் திருஞானசம்பந்தருக்கு, நெல்லையப்பரும், நெல்லை கோவிந்தரும் காட்சி அளித்தனர். தொடர்ந்து நெல்லையப்பர், நெல்லை கோவிந்தர், திருஞானசம்பந்தர் மூவரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

மதியம் 12.25க்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு, ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கும், காந்திமதி அம்மனுக்கும் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

தீபாராதனை நடைபெற்ற போது, கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். பெண்கள் குலவையிட்டனர். வானத்தில் கருடன் வட்டமிட்டதை பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

nellai gandhimathiamman kalyanam - 2026
நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலம். Photos : Kayilaikannan Venkataraman

தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் மாலை 4.30க்கு சுவாமி-அம்பாள், நெல்லை கோவிந்தர், திருஞானசம்பந்தர் வீதி உலாவும் நடைபெற்றது.

பேட்டை சாலையில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் வைத்து திருஞானசம்பந்தருக்கு, ஞானப் பால் ஊட்டும் வைபவம் நடைபெற்றது.

தொடர்ந்து சனிக்கிழமை இன்று காலை 5 மணி அளவில் அம்மன் சந்நிதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் 9.30க்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் (பட்டிணப்பிரவேசம்) வீதி உலா நடைபெற்றது. இன்று முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை அம்பாள் ஊஞ்சல் விழா நடக்கிறது. 29-ஆம் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு – பட்டிணப்பிரவேசம் – வீதி உலா நடைபெறும்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Related articles

Recent articles

spot_img