கல்வியில் சிறக்கலாம்: மன்னார்கோவில்

மன்னார்கோவில் ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் கோயில்…. பாற்கடல் சயனத்தில் பள்ளி கொண்ட பெருமான், ஸ்ரீவைகுண்டத்தில் அமர்ந்தபடி சேவை சாதிக்கும் பெருமான், அபயம் என சரணடைந்தோர்க்கு நின்ற கோலத்தில் அருளும் பெருமான்… இப்படி ஸ்ரீமகாவிஷ்ணு சேவை சாதிக்கும் மூன்று அர்ச்சாவதாரக் கோலங்களையும் தரிசிக்க ஆவல் கொண்டனர் ஸ்ரீபிருகு, மார்க்கண்டேய மகரிஷிகள். இருவரும் நெடுங்காலம் தவம் மேற்கொண்டனர். அவர்களின் தவத்துக்கு இரங்கிய பெருமாள், பொதிகைத் தென்றல் தவழும் வேதபுரியில் இருக்கச் சொன்னார். அதன்பின்னர் அவர்களுக்கு பெருமாள், நின்ற, இருந்த, கிடந்த கோலத்தைக் காட்டிக் கொடுத்தார். மனம் மகிழ்ந்த பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகள் இருவரும், அதன் அடிப்படையில், இங்கே பெருமாளின் சுதை வடிவிலான சிற்பங்களைச் செய்து, மூலிகை வர்ணம் கொடுத்து பிரதிஷ்டை செய்தனர். அவர்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்ததைக் காட்டும் வண்ணம், இங்கே பிருகு மற்றும் மார்க்கண்டேய மகரிஷிகள் கருவறையில் பெருமாளுக்கு அருகில் காட்சி தருகின்றனர். திருவரங்கம் எவ்வாறு காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் மத்தியில் அரங்கமெனத் திகழ்கிறதோ, அவ்வாறு மன்னார்கோவில் தலமும் தாமிரபரணி நதிக்கும் கடனாநதிக்கும் மத்தியில் திகழ்கிறது. இங்கே பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் காட்சி தருகிறார். சயனப் பெருமாள் அரங்கநாதரைப் போன்று திகழ்கிறார். மன்னார்கோவில் என்று அழைக்கப்படும் இந்தத் தலம் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு இன்னும் ஓர் சிறப்பு உண்டு. அது, குலசேகராழ்வாருடன் தொடர்புடையது. ஸ்ரீகுலசேகர ஆழ்வார். ஆழ்வார்கள் வரிசையில் நடுநாயகமாகத் திகழ்பவர். மாசி மாத சுக்லபட்ச திதியில் புனர்பூச நட்சத்திரத்தில், சேரநாட்டின் திருவஞ்சிக்களம் பகுதி அரசரான திடவிரதருக்கு திருமாலின் திருமாலையான கெüஸ்துப அம்சத்தில் அவதரித்தவர். சேர, சோழ, பாண்டியரை வென்று மாமன்னராக அரசாட்சியை நடத்திச் சென்றவர். ஸ்ரீவைணவரான அவர், ஸ்ரீராமபிரானின் மீது அளவற்ற காதல் கொண்டவர். ராமாயணத்திலும் ராமனின் நினைவுகளிலும் எப்போதும் தியானத்தில் இருந்த குலசேகரர், ஒரு கட்டத்தில் அரச வாழ்வைத் துறந்து, தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். பல்வேறு தலங்களுக்கும் சென்றுவிட்டு, இறுதியாக வேதபுரி என்னும் இந்தத் தலத்தை வந்தடைந்தார். இங்கே ஸ்ரீவேதநாராயணப் பெருமாளை தரிசனம் செய்தார். காட்சிக்கு ஸ்ரீரங்கப் பெருமானைப் போலவே திகழ்ந்த வேதநாராயணப் பெருமாளுக்கு கைங்கரியம் செய்து, இறுதியில் இந்தத் தலத்திலேயே பரமபதம் எய்தினார். ஆழ்வார் நித்தியத் திருவாராதனம் செய்து வந்த ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமணர் ஆகியோரது விக்கிரகங்கள் இந்தக் கோயிலில் இப்போதும் பூஜிக்கப்பட்டு வருவது சிறப்பம்சம். குலசேகரப் பெருமாள் பள்ளிப்படுத்தப்பட்ட திருவரசில், கொடிமரத்துடன் கூடிய தனி சந்நிதி இங்கே அமைந்துள்ளது. அதுவே இந்தக் கோயிலின் தனித்துவமான ஒன்று. குலசேகராழ்வார், பெருமாள் திருமொழி என்னும் பிரபந்தத்தையும், முகுந்தமாலை எனும் சமஸ்கிருத நூலையும் வழங்கியுள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயம் இது. அரசர்கள் பலர் தங்களால் ஆன திருப்பணிகளைச் செய்துள்ளனர். சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் பலரும் கோயிலுக்கு நிலங்களை வழங்கியுள்ளனர். அதன் பின்னர் நாயக்க மன்னர்கள் காலத்தில் இந்தக் கோயில் பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ளது. மன்னார்கோவில் தலம் இன்னொரு வகையிலும் புகழ்பெற்றுள்ளது. ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களுக்கு பன்னீராயிரப்படி எனும் வியாக்யான உரை செய்த வாதிகேசரி அழகியமணவாள ஜீயர் அவதரித்த தலம் இதுவேயாம். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி- அம்பை சாலையில், கடையத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ளது இந்தக் கோயில். அண்மைக் காலத்தில்தான் கோயில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. எனவே, சாலையில் செல்லும் போதே, வண்ணம் குலையாத கோபுரம் நம்மை ஈர்க்கிறது. அழகிய முன்மண்டபம், கொடிமரம் ஆகியவற்றைக் கடந்து உள்ளே சென்றால், பெருமாளின் சந்நிதி மூன்று தளங்களுடன் திகழ்கிறது. கீழ்த்தளத்தில் பெருமாளின் திருநாமம் ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் என்பது. வர்ணகலாபத் திருமேனி. இவருடைய சந்நிதியை ஒட்டி குறுகிய படிக்கட்டுகளுடன் சிறிய பாதை விமானத்துக்குச் செல்கிறது. அதில் ஏறிச் சென்றால், இரண்டாவது, மூன்றாவது தளங்களில் பெருமாளின் வீற்றிருந்த கோலத்தையும், சயனக் கோலத்தையும் தரிசிக்கலாம். உற்ஸவர் ஸ்ரீராஜகோபால சுவாமி. தாயார் ஸ்ரீகோதை நாச்சியார். உற்ஸவருக்கு அருகிலேயே ஸ்ரீபட்சிராஜன் கருடன் உள்ளார். இது போன்ற அமைப்பு ஸ்ரீவில்லிபுத்தூரில்தான் உள்ளது. இங்கே தனிக்கோயிலில் ஸ்ரீவேதவல்லி, ஸ்ரீபுவனவல்லித் தாயார்கள் சேவை சாதிக்கின்றனர். ஸ்ரீ வேதவல்லித் தாயார் சந்நிதிக்கு அருகில் ஸ்ரீயோக நரசிம்மரும், தசாவதார சந்நிதியும் உள்ளன. ஸ்ரீபுவனவல்லித் தாயார் சந்நிதிக்கு அருகே பரமபதவாசல் அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கு எதிரில் பிள்ளைத் தொண்டுப் பாதை உள்ளது. சிறிய துளை போன்ற இந்தப் பாதையில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் நுழைந்து, பெருமாளைப் பிரார்த்தித்தால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள மண்டப விதானத்தில், 12 ராசிகளுக்கு உரிய கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் விஷ்ணு ஆலயங்களில் நவகிரக வழிபாடோ, அமைப்போ கிடையாது. ஆனால், அதற்கு பதிலாக இங்கே அமையப் பெற்றுள்ள இந்த 12 கட்டங்களையும் தரிசித்து, பிரார்த்தனை செய்தால் கிரக தோஷங்கள் விலகும் என்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் வேதம் மீட்டவர். வேதத்தை வகுத்தளித்தவர். எனவே இவரை வழிபட்டால் கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7-11, மாலை 5-8 மேலும் தகவலுக்கு: 04634 252874

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.