
கண்ணனைப் பிடித்தவர்களுக்கு ஆண்டாளையும் பிடிக்கும். கண்ணனையே கணவராக வரித்துக்கொண்ட ஆண்டாளின் பாடல்கள் வெறும் அலங்காரக் காவியம் இல்லை. அது ஜீவனை உருக்கும் பக்திப்பிரவாகம்.
கண்ணனையே கணவராக அடையவேண்டும் என்பதற்காக மார்கழி மாதம் பாவை நோன்பு கடைப்பிடிக்கும் ஆண்டாள்,
தினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தனது சக தோழியரையும் அழைத்துக்கொண்டு நீராடி, கண்ணனின் புகழ் பாடிப் பரவசம் கொள்கிறாள். விரதக் காலங்களில் கடுமையான நியமங்களையும் அனுஷ்டிக்கிறாள் ஆண்டாள்.
‘நெய்யும், பாலும் உண்ணமாட்டோம்; கண்களுக்கு மையிட்டு அழகு செய்யமாட்டோம்; செய்யத் தகாத செயல்களைச் செய்யமாட்டோம்; தீங்கு விளைவிக்கும் சொற்களைப் பேசமாட்டோம்’ என்றெல்லாம் நியமங்களை அனுஷ்டிக்கும் ஆண்டாள், அத்தகைய நியமங்களை நாமும் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறாள்.

பதினோராவது பாடல் முதல் வாயில் காப்போன், நந்தகோபன், யசோதை, பலராமன் என்று அனைவரையும் எழுப்பி 18-ஆவது பாடலில் கண்ணனுடன் துயிலிருக்கும் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பி 19 -22 பாடல்களில் கண்ணனைத் துயில் எழுப்புகிறாள்.
முதல் பாட்டு (பாவை) நோன்பு ஆரம்பிக்கும் முன் அதன் பலனை எடுத்துக் கூறுவது இரண்டாம் பாட்டு, நோன்பு விதிகளைக் கூறுவது அடுத்த எட்டு பாடல்கள் அஷ்டமஹா சித்திகளை எழுப்புவதுதான்.
23-ம் பாடல், கண்ணன் சிங்கம் போல எழுந்து வந்து சிங்காசனத்தில் அமர்ந்ததைக் கூறுகிறது. அப்படியானால் இனிமேல் கண்ணனைத் துயில் எழுப்பத் தேவையில்லை. சுப்ரபாதம் முடிந்துவிட்டது. கண்ணன் அலங்கரித்து வந்துவிட்டான். அவனை, நாம் வந்த நோக்கத்தை அவனே அறிந்து அருளும்படிப் பணிக்கிறாள், ஆண்டாள். 24-ம் பாடல், அர்ச்சனை (போற்றிகள்).

25-ம் பாடல், தூப-தீபம். நெருப்பை ஒளித்து வைத்தால் புகையும்; இந்த பாட்டில், கண்ணனை ஆயர் பாடியில் ஒளித்து வளர்த்தால் அவன், அங்கே ஒளிந்து கொள்ளாமல், கம்சன் வயிற்றில் நெருப்பாக மாறி ஒளிந்து கொண்டு விடுகிறான். அதுதான் தூப-தீபம். 26-ம் பாடல் வாத்திய முழக்கம். தூப-தீபம் முடிந்து நைவேத்யம் படைப்பதை அனைவருக்கும் அறிவிக்க மணி முதலிய வாத்தியங்கள் முழங்க வேண்டும்.
27-ம் பாடல் தான் நைவேதயம்; என்ன படைக்கிறார்கள் – பால்சோறு மூட நெய் பெய்து. அதை கண்ணன் முழங்கை வழிவாரக் கூடியிருந்து (வயிறு) குளிர உண்ண வேண்டுகிறாள்.
28-ம் பாடல் பிழைப் பொருத்தருள வேண்டுதல். சாதாணமாக பூஜைகளில் “யதக்ஷர பதப்ரஷ்டம்” ”மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஸுரேஸ்வர: யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே” என்ற ஸ்லோகத்தைக் கூறுவர். அதாவது மந்திரங்கள் சொல்வதில் ஏற்பட்ட குறைகளும் கிரியைகள் செய்வதில் ஏற்பட்ட குறைகளும், பக்தி ஈடுபாட்டில் ஏற்பட்ட குறைகளும் கடவுளை பூஜிப்பதால் பரிபூர்ணமாகட்டும் என்பதே அதன் பொருளாகும்.

அதே போல் ‘சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே’ – கண்ணன் சீறுவது கூட ஆண்டாளுக்கு அருள்தான் – என்று பொறுத்தருள வேண்டுகிறாள்.
30-வது பாடல் பலச்ருதி – அதாவது பூஜையினால் அடைந்த/அடையும் பலன்களைக் கூறுவது. என்ன பரிசு – ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் – என்று அவன் அருளைத் தவிர பெரிய பரிசு தனக்கு எதுவுமில்லை என்று மீண்டும் உறுதி செய்கிறாள் ஆண்டாள்.
பலவாறாக தன்னை வருத்திக்கொண்டு அந்த கோவிந்தனை அடைய பூஜிக்கிறாள். பக்தர்களை ரட்சிக்கும் அந்த பரந்தாமன், தீந்தமிழால் தன்னை பூஜிக்கும் கோதைப்பிராட்டியை கைவிடுவானா? மேலும் மேலும் பாக்களை வடிக்க அவளுக்கு அருள் செய்கிறான்.

26 நாட்கள் கடுமையான விரதம் இருந்த ஆண்டாள், கண்ணனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில்
“கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்”

என்று பாடி பரவசம் கொள்கிறாள். அதுமட்டுமா? கோவிந்தனால் அளிக்கப்பட்ட சூடகம், தோள்வளை, தோடு, செவியில் அணியும் கொப்பு, கால் தண்டை உள்ளிட்ட பலவகை அணிகலன்களை அணிந்து, புத்தாடை புனைந்து, அலங்கரித்துக்கொண்டு அரங்கனை எண்ணி அகமகிழ்கிறாள்.
மேலும் அக்காரவடிசல் எனும் நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்து தானும் உண்டு 26 நாள் கடுமையான நோன்பை ஆண்டாள் முடித்தாள். அந்த நாளில் தான் அரங்கன், ஆண்டாளை ஏற்றுக்கொள்வதாக வரமளித்த திருநாள்.
இந்த பாடலைக்கேட்ட கோவிந்தன் உடனே மயங்கி ஆண்டாளை திருவரங்கத்தில் மணந்துகொள்வதாக வாக்களித்தான். எத்தனை மகத்தான பொன்னாள் இந்த கூடாரவல்லி நாள்.

திருமகள் மானுடப்பெண்ணாக தோன்றி மாதவனையே மணாளனாக பெற்றநாள் அல்லவோ இன்று (12-01-2020). கூடாரை என்றால் வெறுப்பவர், விலகிச் சென்றவர், கருத்து வேறுபாடு கொண்டவர், வெறுப்பவர் என்றெல்லாம் பொருள் சொல்லலாம். உங்களுக்கு எதிராக இருக்கும் எல்லோரையும் விரும்பச் செய்யும் ஆற்றல் கொண்டது இந்த கூடாரவல்லி தினம்.
திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும். ஆண்டாளின் வாரணமாயிரம் பாசுரம் மக்கட்பேற்றை வழங்கக் கூடிய பாசுரம்.
வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான். 1
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர் சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால் நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர் வில்லிபுத்தூர் வேதக் கோனூர் பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு
திருவாடி பூரத்து செகதுதித்தாள் வாழியே..
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே..
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே..
பெரும்புதூர் மாமுனிக்கு பின்னனால் வாழியே..
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே..
உயரரங்கர்க்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே..
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே.. வண் புதுவை நகர் கோதை மலர் பதங்கள் வாழியே..
ஆண்டாள் திருவடிகளே சரணம்.