
வைணவ பெரியோர்களில் மிக்கப் புகழுடைய எம்பார் என்பவர் திருப்பெரும்பூதூரின் அருகில் உள்ள மழலைமங்கலத்தில் (தற்போதைய மதுரமங்கலம்) கிபி 1026 ஆம் ஆண்டு தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் கமலநயன பட்டர் என்பவருக்கும் ஸ்ரீதேவி அம்மாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார்.
ஸ்ரீதேவி அம்மாள் வைணவ மகாசாரியனாகிய இராமானுசருக்கு சிற்றன்னையாவார். தாய் மாமனான திருமலை நம்பி இவருக்கு இட்ட பெயர் கோவிந்தபட்டர். திருப்புட்குழியில் தன் அண்ணனாகிய இராமானுசருடன் யாதவ பிரகாசரிடம் கல்வி பயின்றார். பின்னாளில் எம்பார் என வைணவர்களால் புகழப்பெற்றவர் இவரே.

கண்ணொளி வழங்கும் கருணைக்கடல்!
ஸ்ரீ எம்பார் முக்தக ஸ்லோகங்கள்.
ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வா நபாயிநீ |
ததா யத்தத்ஸ்வருபா ஸா ஜீயாந்மத்விச்ரமஸ் த வீ ||
ஹ்ருதி நாராயணம் பச்யந் நாப்யகச் சத்ர ஹஸ்ஸதா |
யஸ்ஸ்வதாரரதெள சாபி கோவிந்தம் தமுபாஸ்மஹே ||
புஷ்யே புனர்வசுதினே ஜாதம் கோவிந்த தேசிகம் |
ராமானுஜ பதாம்போஜ ராஜஹம்சம் சமாஸ்ரயே ||
மங்களம் தேசிகேந்த்ராய மங்களம் குணசிந்தவே |
மங்களம் கோவிந்தார்யாய நித்யஸ்ரீர் நித்ய மங்களம் ||
இந்த எம்பார் சுவாமிகளின் ஸ்லோகம் தினமும் சொல்லி வருவதால் கண் குறைபாடுகள் நீங்கும் என்பது ஐதீகம்..
மதுர மங்கலத்தில் எம்பாரையும், கூரத்தில் கூரத்தாழ்வாரையும் வணங்க கண் பார்வை கிட்டும் அற்புதம் நிகழ்ந்து வருகிறது..
அன்று தன் ஆச்சரியரைக் காப்பாற்ற தன் கண்ணை இழந்தார், இன்று பலருக்கு கண்ணொளி வழங்குகின்றார்.
நெய் விளக்கு ஏற்றி வேண்டிக்கொண்டும், மதுர மங்கலத்திலும், கூரத்திலும் கர்ப்பகிரகத்தில் விளக்கேற்ற நெய் கொடுத்து வருவதும் பிரார்த்தனைகளாகும்..

தன்னுடைய கண்ணை இராமானுஜ தரிசனத்திற்காகக் கொடுத்தவர் … தன்னை வேண்டியவர்களுக்குக் கண் பார்வையைக் கொடுப்பவர் … ‘கண் கொடுத்த கூரேசர்’..
இராமாவதாரத்தில் ஆதி சேஷன் தம்பியாக இலக்குவணாக அவதரித்து சேவை செய்ததற்காக, கிருஷ்ணாவதாரத்தில் பெருமாள் கிருஷ்ணராகவும் ஆதிசேஷன் பலராமராகவும் அவதாரம் எடுத்தனர்.
பின்னர் கலியுகத்தில் பெருமாள் கூரத்தாழ்வராகவும், ஆதி சேஷன் இளையாழ்வாராகவும் அவதரித்து நம்மை உய்வித்தனர் என்பது ஐதீகம். ஒரு பிறவியில் செய்த சேவைக்காக பல் பிறவிகள் எடுத்து பதில் சேவையாற்றும் எம்பிரானின் எளிமை.
பெருமாளின் அம்சமாக பிறந்த கூரேசர் பெருமாளின் மார்பில் உள்ளது போலவே மறு பெற்றிருந்ததால் ஸ்ரீவத்சாங்கமிச்ரர் என்று வடமொழியிலும், திருமறுமார்பினர் என்று தமிழிலும் திருநாமம் பெற்றார்.
ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியர்களுள் ஒருவரான எம்பார் திரு நக்ஷத்திரம், தை புனர்வசு. சதா சர்வ காலமும் தமது ஆசார்யரது (உடையவர்) நிழலாக வாழ்ந்தவர் எம்பார் ஸ்வாமிகள் என்று துறவற நாமம் பெற்ற கோவிந்தப் பெருமாள்.
இவர் அவதரித்த ஊர் ஸ்ரீ பெரும் புதூருக்கு அருகில் இருக்கும் மதுர மங்கலம் என்னும் ஊர். முதலில் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டிருந்த எம்பாரை ஸ்ரீவைஷ்ணவத்தை, குலாசாரத்தினை பின்பற்ற வைத்த பெருமை பெரிய திருமலை நம்பிகளைச் சாரும்.. பெரிய திருமலை நம்பிகளுடன் வாழ்ந்து எல்லா சாஸ்திரங்களையும், திவ்யப்ரபந்தங்களையும் கற்றார் எம்பார்..
சிறு வயதில் யாதவப் பிரகாசரது குருகுலத்தில் உடையவருடன் கல்வி கற்றவர் கோவிந்த பெருமாள். அப்போது உடையவருக்கு தீங்கு விளைவிக்க முயன்றபோது, அதிலிருந்து காப்பாற்றியவர்.
பிற்காலத்தில் உடையவரை விட்டகலாது, நிழல் போல் தொடர்ந்ததால் இவருக்கு ‘ராமானுஜ பதச்சாயா’ அதாவது ராமனுஜரின் நிழல் என்று போற்றப்படுகிறார். எப்போதும் ஆசார்யரது திருவடியில் வைராக்கியத்தை அறிந்த உடையவர், கோவிந்தப் பெருமாளுக்கு துறவறம் அளித்து தனது பெயரைச் சுருக்கி ‘எம்பார்’ என்று துறவற நாமம் கொடுத்தாராம்.
இவர் எப்போதும் ஆசாரியானே சர்வம் என்றும், பெருமாளது லீலாவிபூதிகளே வாழ்க்கை என்று காட்டியிருக்கிறார். எம்பெருமானாரின் பவித்ரம் கூரத்தாழ்வார் என்பது ஐதீகம்..
செல்வம் அல்ல உய்யும் வழி, உடையவர் திருவடிகளே உய்யும் வழி “என்று தனது சொத்து பத்துக்களையெல்லாம் கூரத்திலே விட்டு விட்டு அன்பு மனையாள் ஆண்டாளம்மாளுடன் திருவரங்கம் வந்து இராமனுஜருக்கு ஒரு பிரதான சீடராய் கூரேசர் தொண்டு செய்து வந்தார்..

உளங்கைக் கொணர்ந்த நாயனார்!
யாதவ பிரகாசரிடம் கல்வி பயின்றபோது குருவின் கருத்துக்களோடு இராமானுசருக்கு பலமுறை கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் விளைவு குருவுக்கு எதிரியானார். அதன் தொடர்ச்சியாக யாதவ பிரகாசர் தன் சீடர்குழாமோடு இராமானுசரை கொலைபுரியும் திட்டத்தோடு கங்கை யாத்திரை மேற்கொண்டபோது அக்குழுவில் இருந்த கோவிந்தபட்டரால் உண்மை அறியப்பட்டு இராமானுசர் காப்பற்றப்பட்டார்.
பின்னர் கங்கை கரையில் நீராடுகையில் கோவிந்தப்பட்டரின் கையில் சிவலிங்கம் எதிர்படவே அதனை திருக்காளத்தி (தற்போதைய காளஹஸ்தி) தலத்தில் நிலைப்பெற செய்தார். இச்சம்பவத்தால் “உளங்கைக் கொணர்ந்த நாயனார்” என சைவர்களால் அழைக்கப்பட்டார்.
மீண்டு(ம்) வந்தார்!
பெரிய திருமலை நம்பிகள் மூலம் வைணவத்திற்கு திரும்பிய இவர், இராமானுசர் திருமலைக்கு வரும்வரை நம்பிகளுக்கு சீடராயிருந்தார். இராமாயணம் பயில்வதற்காக இரண்டாம் முறை திருமலைக்கு வந்த இராமானுசருக்கு திருமலை நம்பிகளின் பரிசாக கோவிந்தபட்டர் உடன் அனுப்பட்டார். அப்போதிருந்து தன் இறுதிமூச்சுவரை எம்பெருமானாருக்காகவே தன்னைப் பணித்துக்கொண்டார்.
பெயர்க்காரணம்!
இவரின் குண நலத்தால் “எம்பெருமானார்” என்ற இராமானுசரின் பெயரையே அடியார்கள் இவருக்கு இட்ட போதும், ஆச்சாரியன் மீது கொண்ட அளவுக்கடந்த பக்தியினால் ஏற்பட்ட அடக்கத்தின்பால் எம்பார் என தன் பெயரை சுருக்கிக்கொண்டார்.
எம்பார் குண விசேஷங்கள்!
உடையவரின் தம்பியும் எம்பார் என்கின்ற மறுபெயரையும் உடைய கோவிந்தப் பெருமாள் தமக்குத் தாய் மாமனும், ஆசார்யருமான பெரிய திருமலை நம்பிக்கு எல்லாவித ஊழியங்களையும் செய்து கொண்டிருந்தார். ஒருநாள், ஆசார்யருக்குப் படுக்கை அமைத்து அதில் முதலில் தாம் படுத்து உறங்கி எழுவதை உடையவர் கண்டார். இதனை நம்பிகளிடம் விண்ணப்பஞ்செய்தார். நம்பிகள் கோவிந்தப்பெருமாளை, “இப்படிச் செய்யலாமோ! இதற்குப் பலன் என்ன தெரியுமோ?” எனக் கேட்டார். கோவிந்தப் பெருமாளும் “படுக்கையில் ஏதேனும் உரித்தல், ஊறுதல், கடித்தல் முதலானவற்றால் தேவரீரின் தூக்கத்துக்கு ஊரு விளையாமல் இருக்கவேண்டும் என்பதே அடியேனுடைய குறிக்கோள். அதனால் அடியேன் செய்த செயலுக்கு பலன் நரகம் தான் என்றாலும் அது அடியேனுக்கு விருப்பமே என்று பதில் கூறினார். இந்த பதிலைக் கேட்டு உடையவர் வியப்புக்கு உள்ளானார்.
மற்றொரு நாள் உடையவர் நந்தவனத்தில் குளிர நோக்கி வருகையில், கோவிந்தப் பெருமாள் ஒரு பாம்பின் வாயில் கையிட்டு வாங்கித் தீர்த்தமாடி வந்ததைக் கண்டார். என்ன காரணம் என்று உடையவர் வினவ, “பாம்பு நாக்கை நீட்டிக்கொண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்தது; அதன் நாவில் முள் இருந்தது; அதை எடுத்துவிட்டு நீராடினேன்” என்று பதில் கூறினார். அது கேட்டு உடையவர், “என்னே இவரின் பூததயை (மற்ற ப்ராணிகளிடம் கருணை)! என்று உலங்கனிந்தார்.
ஸ்ரீ இராமாயண காலக்ஷேபம் முடிந்ததும் உடையவர் “திருவரங்கம் புறப்படுகிறேன்; விடை தரவேணும்” என்று திருமலை நம்பிகளிடம் வணங்கி வேண்டினார். நம்பிகள் “இத்தனை தூரம் வந்து செல்லும் உமக்கு நாம் ஒன்றும் கொடுக்க முடியவில்லையே” என்று குறைபட்டார். உடனே உடையவர், “அப்படியானால், அடியேனுடைய எண்ணப்படியே திருத்திப் பணிகொண்ட கோவிந்தப்பெருமாளை தந்தருள வேணும்” என்று வேண்டினார். நம்பிகளும் கோவிந்தப் பெருமாளை அழைத்து, “நம்மைப் போலே இவரையும் நினைத்திருப்பீராக!” என்று நியமித்து, தாரை வார்த்து தத்தம் பண்ணி எம்பெருமானாரோடு அனுப்பி வைத்தார்.
உடையவரும் கோவிந்தப்பெருமாளை அழைத்துக் கொண்டு சோளசிங்கபுரம் என்கிற திருக்கடிகையில் அக்காரக்கனி பெருமாளையும் திருப்புட்குழியில் போறேற்றம்பெருமானையும் திருவடி தொழுது காஞ்சிபுரம் வந்து சேர்ந்து திருக்கச்சி நம்பிகளை வணங்கியிருந்தார். அவ்வளவில், கோவிந்தப் பெருமாள் ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிந்த துயராலே உடல் மெலிந்து முகம் வெளுத்துப் போனார். இந்நிலையை அறிந்த உடையவர், “வாரீர்! கோவிந்தப் பெருமாளே! திருமலை சென்று பெரிய திருமலை நம்பியை சேவித்து வாரும்” என்று கூறி இரண்டு சிஷ்யர்களுடன் அவரை அனுப்பி வைத்தார்.
அவரும் பேராவலுடன் திருமலை சென்று நம்பிகளை வணங்கி நிற்க, நம்பிகள் முகம் கொடாமல், “பித்தனைப் போகச் சொல்லுங்கோள்” என்று வெறுத்துக் கூறினார். இது கேட்ட நம்பிகளின் தேவியார், “இதென்; இத்தனை தூரம் இளைத்து வந்தவரை அழைத்து முகம் காட்டித் தீர்த்த ப்ரஸாதங்களும் கொடுத்து அனுப்பவேண்டாவோ” என்ன “விற்ற பசுவுக்கு புல் இடுவாருண்டோ?” என்று கடிந்து முகம் கொடாதேயிருந்தார் நம்பிகள்.
கோவிந்தப் பெருமாளும் திருமாளிகை வாசலில் தண்டனிட்டு காஞ்சிக்கு திரும்பி உடையவரை தண்டனிட்டு நின்றார். உடன் வந்தவர்கள் நடந்த விவரங்களைச் சொல்ல, எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியின் எல்லாம் உணர்ந்த நிலையை எண்ணி மகிழ்ந்தார். பிறகு, கோவிந்தப்பெருமாளுடன் புறப்பட்டு திருவரங்கம் சென்றடைந்தார்.
உடையவரின் கோஷ்டியில் கலந்து உடையவரின் எளிமை, நீர்மை முதலான குணங்களால் ஈர்க்கப்பட்டு கோவிந்தப்பெருமாள் உடையவரை விட்டகலாது தொண்டு பூண்டு, ஞான பக்தி வைராக்யங்கள் வெளித்தோன்ற வாழ்ந்து வந்தார். ஒருநாள் உடையவரும் ஸ்ரீவைஷ்ணவர்களுமாகக் கூடியிருக்கையில் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் சேர்ந்து கோவிந்தப்பெருமாளின் ஞானம், பக்தி, வைராக்யம், ஆசார்யனே தனக்கு எல்லாம் என்ற உயர் குணங்களைக் கொண்டாடினர்.
இப்படி தன் குணங்களைத் தானே கொண்டாடிக்கொள்வது ஆணவத்தைக் காட்டுமதாயிருக்கையாலே உடையவர் “எல்லாரும் உம்மைப் புகழ்ந்தால், நீர் உம்முடைய தாழ்மையை அன்றோ சொல்லிக்கொள்ள வேணும்; அதை விடுத்து நீரே உம்மை புகழ்ந்துக் கொண்டு தற்பெருமையைக் காட்டலாமா?” என்று கோவிந்தரைக் கேட்டார்.
அதற்கு அவர், “ஐயோ! இந்த குணங்களை எல்லாம் அடியேனிடம் தோற்றுவித்தது தேவரீர் ஆகையாலே இந்த புகழெல்லாம் தேவரீருக்கேயாம். அடியேனைக் கொண்டாட வேண்டுமென்றால் அடியேன் காலஹஸ்தியில் இருந்த நிலையை அல்லவோ சொல்லவேண்டும்?” என்று பதில் கூறினார்.
இது கேட்டு எல்லோரும் அவரது நிலையை வியந்து கொண்டாடினர். எம்பெருமானார், “நல்லீர்! இந்த உம்முடைய குணங்களெல்லாம் எமக்கும் உண்டாகும்படி உம்முடைய நன்நெஞ்சாலே அனைத்துக்கொள்ளீர்!” என்று வாரி அணைத்துக்கொண்டார்.
அருகில் உள்ள கோவில்கள் :
- நீர்வள்ளுர் (சுமார் 8 KM ) – ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள்
- நரசிங்கபுரம் ( சுமார் 15 KM ) . மப்பேடு கூட்டு ரோட்டிலிருந்து இடது புறம் திரும்பி பேரம்பாக்கம் சாலையில் சென்று கோவிலை அடையலாம்
- திருவள்ளூர் (சுமார் 28 KM ) – ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்
- ஸ்ரீ பெரும்புதூர் ( சுமார் 20 KM ) – ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோவில்


