ஆயற்குடி (ஆய்க்குடி) படி பாயாச பிரசாதம்!
மூலவர்:பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர் )
உற்சவர்:முத்துக்குமாரர்
தல விருட்சம்:பஞ்சவிருட்சம்
( அரசு,வேம்பு மாவிலங்கு,மாதுளை, கறிவேப்பிலை )
இந்த ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்குரியதாகக் கருதப்படுகிறது.
அரசு-சூரியன்
வேம்பு-அம்பிகை
கறிவேப்பிலை-மகாதேவன்
மாதுளை-விநாயகர்
மாவிலங்கு-விஷ்ணு.
தீர்த்தம்:அனுமன் நதி
ஆகமம்/பூஜை:வைதீகம்
ஊர்:ஆய்க்குடி
மாவட்டம்:திருநெல்வேலி
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:அருணகிரிநாதர்
பதிகம் : திருப்புகழ்
ஆலயம் திறந்திருக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும்,மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்.
போன் :91 4633 267636.
திருவிழா:கந்தசஷ்டியின் போது 6 நாட்கள், சித்திரைப்பிறப்பு, வைகாசி விசாகம், புரட்டாசியில் சிறப்பு அபிஷேகம், தை மாதத்தில் பாரிவேட்டை, தைப்பூசம் மற்றும் திருக்கார்த்திகை.
தல சிறப்பு:மூலவருக்கு வலப்புறம் மகாதேவன், மகாவிஷ்ணு, அம்பிகை, கணேசரும் இடப்புறம் சூரியனும் உள்ளனர். பஞ்ச தேவர்கள் சூழ பஞ்ச விருட்சங்களின் கீழ் மூலவர் அமைந்துள்ளார்.
இக்கோவிலில் அரச இலையில் திருநீற்றுப் பிரசாதம் வழங்கப்படுகிறது
சித்திரை மாதப் பிறப்பு முதல் சில தினங்களுக்கு உதய சூரியனது கிரணங்கள் மூலவர் மீது விழுவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வி, கேள்வி, ஞானம், சங்கீதத்தில் சிறக்க, நோய்கள், துன்பங்கள் நீங்கிட, ஆயுள் பலம் பெருக, கல்வி, அறிவு செல்வம் பெருக இங்கு
வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
இங்கு பாலசுப்பிரமணியப் பெருமானிடம் வேண்டிக் கொண்ட செயல்கள் நிறைவேறிட விசேஷ அர்ச்சனை மற்றும் அபிஷேகங்கள் செய்து படிப்பாயசம் வைத்து, காவடி, பால்குடம் எடுத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும், லட்சார்ச்சனை செய்தும் நேர்த்திக்கடன்கள் செலுத்துகிறார்கள்.
அன்னதானம் மற்றும் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும், வெள்ளியிலான சுவாமியின் உறுப்பு வடிவங்களை காணிக்கையாக செலுத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
தலபெருமை: சைவ, வைணவ ஒற்றுமை கருதி ராமபக்தர்களும் இத்தலத்து முருகனை வணங்க ஆரம்பித்தனர்.
எனவே இங்குள்ள பாலசுப்பிரமணியர் “ஹரிராமசுப்பிரமணியர்’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள நதிக்கு அனுமன் நதி என பெயரிடப்பட்டது.
ஆலய அமைப்பு: மூலவர் பாலசுப்பிரமணியர், இடப்புறம் திரும்பிய மயில் வாகனத்தின் மீது குழந்தை வடிவில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.இந்த பாலமுருகனை காண கண்கோடி வேண்டும், அத்துனை அழகு,
இங்கு சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, கணபதி ஆகிய பஞ்ச தேவதையர்கள் குடியிருக்கும் அரசு,வேம்பு, மாவிளக்கு, மாதுளை, கறிவேப்பிலை எனும் பஞ்ச விருட்சங்கள் இக்கோயிலில் உள்ளன.
இங்கு ராமர் வந்து சென்றதாக கூறப்படுவதின் அடிப்படையில், மூலவருக்கு வைதீக ஆகமமுறையிலும், உற்சவருக்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடத்தப்படுகிறது.
இங்குள்ள அனுமன் நதி கடுங்கோடையிலும் வற்றாத ஜீவநதியாக உள்ளது.
இங்கு வந்து பாலசுப்பிரமணியரை வணங்கி வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறப் பெற்றவர்கள் பாயசத்தை நைவேத்யமாகப் படைத்து அதனை அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி (படிப்பாயசம்) சிறுவர்களுக்கு கொடுப்பதுடன் அவர்களும் அந்த படிபாயசத்தை சாப்பிடுகின்றனர்.
சிறுவர்களின் வடிவில் சுவாமியே நேரே வந்து பாயசத்தை பருகுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தல வரலாறு:
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு கிழக்கே மல்லிபுரம் எனும் பகுதியில் குளம் ஒன்று இருந்தது. ஒரு சமயம் அக்குளத்தை மக்கள் தூர்வாறியபோது, அதனடியில் பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில் அழகிய சுப்பிரமணியர் சிலை ஒன்று கிடைத்தது.
அச்சிலையை எடுத்துக்கொண்ட பக்தர் ஒருவர் தமது வீட்டின் பின்புறத்தில் இருந்த ஆட்டுத் தொழுவத்தில் வைத்து பூஜை செய்துவந்தார். ஒர்நாள் அவரது கனவில் தோன்றிய பாலசுப்பிரமணியர், அரசும், வேம்பும் இணைந்திருந்த இடத்தில் தன்னை பிரதிஷ்டை செய்து அவ்விடத்தில் ஆலயம் எழுப்பி வழிபடும்படி கூறினார்.
சுப்பிரமணியர் கூறியதைப்போன்ற இடம் தனக்கு தெரியாது என அவர் கூறவே, அவரது தொழுவத்தில் இருக்கும் செம்மறி ஆடு சென்று நிற்கும் இடத்தில் தன்னை பிரதிஷ்டை செய்யும்படி கூறி அருளினார். அதன்படி, இவ்விடத்தில் ஆடு நிற்கவே சிறிய அளவில் பாலசுப்பிரமணியருக்கு ஆலயம் எழுப்பி வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டிப் பல கோவில்களுக்குச் சென்று, இறுதியாக ஆய்க்குடிக் கோவிலுக்கு வந்து பாலசுப்பிரமணிய சுவாமியைத் தனக்குக் குழந்தை பிறந்தால் முருகனுக்கு வைரவேல் சாற்றுவதாக வேண்டிக் கொண்டார்.
அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது. ஆனால் அவர் தனது வேண்டுதலை மறந்து போனார். முருகன் வணிகரின் மனைவியின் கனவில் தோன்றி வேண்டுதலை மறந்து போனதை நினைவுறுத்தினார்.
தன் மறதிக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கோரிய வணிகர் தன் வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக, வைரவேலை முருகருக்குச் சாற்றி ஆண்டுதோறும் படிப்பாயசம் நிவேதனம் செய்தார். இன்றும் இக்கோவிலில் பக்தர்கள் வேண்டிக்கொண்டு படிப்பாயசம் நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது.
ஆலயத்திற்கு எப்படி செல்வது?தென்காசி – சுரண்டை செல்லும் பாதையில் கடையநல்லூர் வட்டத்தில் ஆய்க்குடி பேரூராட்சி ஊர் உள்ளது.
திருநெல்வேலியிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்த ஆய்க்குடிக்கு வடக்கில் அனுமான் ஆறும், கிழக்கில் சுரண்டையும், தெற்கில் தென்காசியும், மேற்கில் செங்கோட்டையும் உள்ளது
மிகவும் பிரபலமான திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடி பாலமுருகன் ஆலயத்தில் சுவாமிக்கு நேவேத்தியம் செய்த படி பாயாசத்தை இங்குள்ள அனுமன் நதிக்கரையில் உள்ள படித்துறையில் இடுவதையும் , அதை பல பிரார்த்தனைகளோடு பக்தர்கள் அமிர்தமாக கருதி அருந்தும் அற்புதம். (எல்லோருக்கும் இந்த படி பாயசத்தை சாப்பிடக்கூடிய பாக்கியம் அமையாது, இதற்கு முன்னமே அனுமதி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)