October 15, 2024, 2:14 AM
25 C
Chennai

காரடையான் நோன்பு: தீர்க்க சுமங்கலி, தம்பதியர் ஒற்றுமையும், அன்பும் பெருக..!

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்.

காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்.

கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். இந்த நோன்புக்காக தயாரிக்கப்படும் காரடைதான் விஷேசம். விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜை அறையில் மா கோலமிட வேண்டும். அதன் மீது நுனி வாழை இலை போட்டு, அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம்கள் வைக்க வேண்டும். அதன் மீதே நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். அதன் முன் அமர்ந்து, இலையைச் சுற்றி நீர் தெளித்து நிவேதனம் செய்ய வேண்டும்.

ALSO READ:  ஏடகநாதர் ஆலயத்தில் ஏடு எதிரேறிய திருவிழா கோலாகலம்!

பின்னர் நோன்பு சரடை பெண்கள் தாங்களாகவே தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். அம்பாளின் படங்களுக்குச் சாற்ற வேண்டும். பிரசாதத்தை அனைவரும் உண்ணலாம். காரடையான் நோன்பு தினத்தன்று பெண்கள் மோர் சாப்பிடக் கூடாது.

மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி.

மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார்.

ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக... சபரிமலை நடை திறப்பு!

சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார்.

சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள்.

இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார்.

ALSO READ:  மகாளய பட்சம் எனும் மகத்தான நாட்கள்! என்ன செய்ய வேண்டும்?!

எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என கேட்டாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார்.

சரடு அணியும் நேரம்: இன்று இரவு 11.36க்கு மாசி பங்குனி கூடும்வேளை.

ஸ்லோகம்:

உருகாத வெண்ணைய்யும் ஓர் அடையும் எடுத்து வைத்தேன். ஒருகாலும் என் கணவர் பிரியாதிருக்க..!

தோரம் க்ருண்ஹாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்.
பர்த்துராயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா,

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week