கோடி உடுக்கும் நாள்
கறைபடா தொளிசேரும் ஆதிவா ரந்தனிற்
கட்டலாம் புதிய சீலை;
கலைமதிக் காகாது; பலகாலும் மழையினிற்
கடிதுநனை வுற்றொ ழிதரும்;
குறைபடா திடர்வரும்; வீரியம்போம், அரிய
குருதிவா ரந்த னக்கு;
கொஞ்சநா ளிற்கிழியும், வெற்றிபோம் புந்தியில்;
குருவார மதில ணிந்தால்,
மறைபடா தழகுண்டு, மேன்மேலும் நல்லாடை
வரும்; இனிய சுக்கி ரற்கோ
வாழ்வுண்டு, திருவுண்டு, பொல்லாத சனியற்கு
வாழ்வுபோம், மரணம் உண்டாம்;
அறைகின்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்
கமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
கூறப்படுகின்ற மறைவடிவாகவும் ஆகமவடிவாகவும் விளங்கும் தூயவனே!,
அருமை தேவனே!, ஞாயிற்றுக்கிழமையில் புதிய ஆடை உடுக்கலாம். (அவ்வாறு உடுத்தால்) (ஆடையிற்) கறை பிடிக்காது; தூயதாக ஒளிதரும், கலைகளையுடைய திங்களுக்குத் தகாது,
(கட்டினால்), பல முறையும் மழையில் நன்றாக நனைந்து கிழிந்துபோம், நன்மைக்கு ஆகாத செவ்வாய்க்கிழமையில் மிகுந்த துன்பம் உண்டாகும; ஆண்மையும் நீங்கும்,
புதன்கிழமையிற்
சிலநாளிலே கிழிந்துவிடும்; வெற்றியும் நீங்கும்,
வியாழக்கிழமைகளில் உடுத்தினால் நீங்காத அழகு உண்டாகும்; மேலும்
மேலும் நல்ல ஆடைகள் கிடைக்கும், வெள்ளிக்கிழமையில் உடுத்தால் நல்வாழ்வும் செல்வமும்
உண்டாகும், தீய
சனிக்கிழமையில் உடுத்தினால் வாழ்வு சிதையும்; இறப்பும் உண்டாகும்.