October 19, 2021, 11:55 pm
More

  ARTICLE - SECTIONS

  திருப்புகழ் கதைகள்: தமிழ் இலக்கிய வரலாறு (தொடர்ச்சி)

  திருமங்கை ஆழ்வார் மிகுந்த பக்தியால் இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் பாவித்து மடலேறுவதாகக் கூறுவதாக அமைந்துள்ளன.

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ்க் கதைகள் 117
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  படர்புவியின் – திருச்செந்தூர்
  தமிழிலக்கிய வரலாறு (தொடர்ச்சி)

  இதன் பின்னர் இந்தத் திருச்செந்தூர்த் தலத்துத் திருப்புகழான ‘படர்புவியின்’ எனத் தொடங்கும் திருப்புகழில் திருவள்ளுவ தேவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மனிதர்களில் விலங்கு உண்டு; மனிதர்களில் மனிதர் உண்டு; மனிதர்களில் தேவர் உண்டு; ஆசையுள்ளம் படைத்தவன் விலங்கு; அன்பு உள்ளம் படைத்தவன் மனிதன்; அருள் உள்ளம் படைத்தவன் தேவன்.

  திருவள்ளுவர் அருள் உள்ளம் படைத்தவர். 1330 திருக்குறள் அமுதத்தால் உலகில் உள்ள மன்பதைகளை வாழச் செய்தார். அதனால் அவர் மனித உலகில் தேவர். இதனை

  தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
  மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
  திருவா சகமும் திருமூலர் சொல்லும்
  ஒருவா சகமென் றுணர்.

  என்னும் ஔவையார் பாடலால் நாம் அறிய முடிகிறது. திருவள்ளுவர் பாடியருளிய திருக்குறள் எப்போதும் மாறுபாடு-அழிவு இல்லாத ஒரு பெரிய சத்தியமறை அல்லது பொய்யா மொழி எனப்படும்.

  அடுத்ததாக அருணகிரியார் ‘பல்சந்த மாலை’ என்று 96 பிரபந்தவகைகளில் ஒன்றான மாலை வகை நூல்களைக் குறிப்பிடுகிறார். பல்சந்த மாலை, பண்மணிமாலை, மணிமாலை, புகழ்ச்சிமாலை, பெருமகிழ்ச்சிமாலை, மெய்க்கீர்த்திமாலை, காப்புமாலை, வேனில் மாலை, வசந்த மாலை, தாரகை மாலை, உற்பவமாலை, தானை மாலை, மும்மணி மாலை, தண்டகமாலை, வீரவெட்சிமாலை, நாமமாலை, நான்மணிமாலை, நவமணிமாலை, இணைமணிமாலை, இரட்டைமணிமாலை, அநுராக மாலை எனப் பல மாலைகள் உண்டு. ஒவ்வொரு மாலை நூலும் அதனதற்குரிய விதிப்படி பாடப்படவேண்டும்.

  இதன் பின்னர் பாடலில் ‘மடல்’ பற்றிக் குறிப்பிடப்படுகிறது. மடல், ஊர்வது பற்றிப் பாடும் நூல். உலாமடல், வளமடல் என்பன. மடல் ஊர்தல் என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம்.

  thirumangaialwar
  thirumangaialwar

  காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது.

  எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. என்ன நிலை சேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை.

  ஆனால் பக்தி பாவத்தில் தங்களைப் பெண்களாய்த் எண்ணிப் பாடிய ஆழ்வார்கள் சிலர், பெண்டிர் மடலேறியதாய்ப் பாடி உள்ளனர். ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.

  தன்னை விரும்பாத பெண்ணுக்காக மடலூர்வேன் என்று தலைவன் சொன்னால், அது கைக்கிளை ஒழுக்கம். மடலூர்ந்து வந்து ஒருத்தியைப் பெறுவது பெருந்திணை ஒழுக்கம். மடலூர்தல் என்பது தலைவனும் தலைவியும் விரும்பி, பெற்றோர் பெண்ணைத் தர மறுக்கும்போதும் நிகழ்வது.

  மடலேறுதலைப் பாடும் நூல் மடல் எனப்படுகிறது. தமிழில் மடல் வகை சிற்றிலக்கியங்களின் முன்னோடியாக உள்ளவை திருமங்கை ஆழ்வாரால் இயற்றப்பட்ட பெரிய திருமடலும் சிறிய திருமடலும் ஆகும். இவை பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி, திருமங்கை ஆழ்வார் மிகுந்த பக்தியால் இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் பாவித்து மடலேறுவதாகக் கூறுவதாக அமைந்துள்ளன.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,566FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-