October 27, 2021, 12:26 am
More

  ARTICLE - SECTIONS

  சுதந்திரம் 75: சுப்பிரமணிய சிவா!

  23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தன்னோட 41-வது வயசுல இந்த உலக வாழ்க்கையை விட்டுப் போனார்.

  freedom 75 1 - 1

  சுதந்திரப் போராட்ட வீரர்
  – சுப்பிரமணிய சிவா


  *
  வந்தே மாதரம்… தாயை வணங்குவோம்.. இதான் நம்ம நாட்டுல நடந்த சுதந்திரப் போராட்டத்தின் போர்க்குரல் அப்டின்னு சொல்லலாம். தாயை வணங்குவோம்னு சொல்லி ஒன்று சேர்ந்த நம் பாரதத் திருநாட்டை, பாரதத் தாய்னே வணங்கினாங்க. அந்த பாரத மாதாவுக்கு ஒரு கோயிலைக் கட்டினார் ஒரு தமிழர். அதுவும் நம்ம தமிழகத்துலதான்! அந்தக் கோயிலை நிறுவியவரின் கனவையும் தியாக வாழ்க்கையையும் பத்தி நாம தெரிஞ்சிகிட்டா, அவரோட உணர்வுகள் நம்மையும் ஆக்கிரமிச்சிக்கும்.

  **
  சரியா சொன்னீங்க.. அப்போ நம்ம நாடு ஆங்கிலேயர் ஆளுகையில இருந்தது. நாடு முழுக்க பரவின சுதேசிய போராட்டத்துல இந்த தமிழ்மண்ணும் முழு ஈட்பாட்டோட கலந்தது. இங்கதான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அதிகம் பேர் உருவானாங்க. அவங்களோட முதல் வேலையே, சாதாரண மக்கள்கிட்டே போய், நம்ம தேசத்தைப் பற்றியும், தேசியம், சுதேச சிந்தனை, சுயராஜ்யம் என்பது பத்தில்லாம் உணர்வூட்டுறதுதான். அவர்கள்ல வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதின்னு பன்முக ஆளுமை கொண்டவங்க அதிகம். அதுவும் நம்ம சுப்பிரமணிய சிவா, ரொம்ப சிறப்பானவர்னு சொல்லலாம். சுதந்திரப் போராட்ட வீரர், தீவிர சுதேசக் கிளர்ச்சியாளர், பத்திரிகை ஆசிரியர், புரட்சியாளர், ஒரு சன்னியாசி, சமூக சீர்திருத்தவாதின்னு தன்னை பல உருவங்கள்ல வெளிப்படுத்திக்கிட்டவராச்சே!

  *
  சரிதான். ஆனா அவரோட இளமைக் காலம் ரொம்ப வறுமையானதுதான். மதுரைக்கு பக்கத்துல இருக்கற வத்தலக்குண்டு தெரியுமில்லையா… அங்க ராஜம் ஐயர் நாகலட்சுமிங்கற தம்பதிக்கு, 1884 வது வருடம் அக்டோபர் 4 ஆம் தேதி சிவா பிறந்தார். சிவாவுக்கு ஞானாம்பாள், தைலாம்பாள்னு இரண்டு சகோதரிகள். வைத்தியநாதன்னு ஒரு சகோதரராம். சிவா, மதுரையிலதான் தன்னோட 12 ஆவது வயது வரைக்கும் படிச்சாராம். அதுக்குப் பின்னே திருவனந்தபுரத்துக்கு போயிட்டாராம்.


  ஆமா, திருவனந்தபுரத்துல ஊட்டுப்புரைன்ற உணவுக் கூடத்துல இலவச உணவோட தொடர்ந்து படிச்சாராம். பிறகுதான் அவர் கோயமுத்தூருக்கு வந்திருக்காரு. அங்க, நுழைவுத் தேர்வுக்காகப் படிச்ச காலத்துலதான், தேசபக்தி அவரை ஆக்கிரமிச்சதாம். அப்போதான் தென்னாப்பிரிக்காவுல நடந்த போயர் யுத்தம், அந்த மக்களின் வீரச் செயல்கள்னு ஆங்கிலத்துல கவிதைகள்லாம் எழுதினாராம்…


  படிப்பை முடிச்ச சிவா, அடுத்து வேலைக்கு போகணும்னு கட்டாயம் வந்தது. குடும்ப பாரத்தை சுமக்கணுமே! அதனால சிவகாசியில் போலீஸ் துறையில் குமாஸ்தா வேலைக்கு சேர்ந்தாராம். ஆனா அதுக்கு மறுநாளே அந்த வேலைய விட்டுட்டாராம். அவரு பாத்த முதலும் கடைசியுமான வேலை இதுதானாம். அதுவும் ஒரு நாள்! சிவாவுக்கு 1899 ல, மீனாட்சியம்மைங்கறவங்களோட திருமணம் நடந்துச்சு. இல்லறத்தில் ஈடுபட்டாலும் கூட, அவர் தேசப் பணியை மறந்துடல. திரும்பவும் திருவனந்தபுரம் அவரை இழுத்தது. அங்கேயே அவர் வசிக்கத் தொடங்கினாராம்.
  *
  ஆனா… திருவனந்தபுரத்துல அப்படி என்ன சிறப்பு? அங்கதான் சுதந்திரப் போராட்டக்காரங்கள்லாம் வெளில அதிகம் தெரியாம கூடுவாங்களாம். ஏன்னா அது திருவாங்கூர் சமஸ்தானத்தோட ஆளுகைல இருந்தது. அந்த மன்னர்கள், ஆங்கில ஆட்சிக்கு அடங்கியே இருந்தாங்கன்னாலும், ஆங்கிலேயருக்கு எதிரா கிளர்ச்சி எதுவும் தங்களோட சமஸ்தானத்துல நடக்காம பாத்துக்கிட்டாங்களாம். அதையும் மீறி, அங்கதான், ஆங்கிலேயரின் அதிகாரத்துக்கு எதிரா போராட்ட சூழல் உருவாச்சாம். அதனாலயே அங்க போன சிவா, தன்னையும் அதுல இணைச்சுக்கிட்டார்.
  **
  திருவனந்தபுரத்துலதான் சதானந்த சுவாமிகள்ங்கிற யோகியை சிவா சந்திச்சார். அதுதான், சிவாவின் வாழ்க்கையையே மாற்றிச்சாம். சதானந்த யோகி கொஞ்ச காலத்துக்கு ராஜயோகம் பத்தி சிவாவுக்கு சொல்லிக் கொடுத்தாராம். சொல்லப் போனா, சிவாவுக்கு இந்த புகழ்பெற்ற பேர் வர்றதுக்கு காரணமா இருந்தவரும் அவர்தானாம். அதுவரைக்கும் ‘சுப்பிரமணிய சர்மா’ அப்படின்னுதான் அவருக்கு பேரு. ஆனா, சதானந்தர்தான், ‘சுப்பிரமணிய சிவம்’ன்னு பேர மாத்தினாராம். அந்தப் பேரு தான் தமிழகம் முழுக்க புகழ் பெற்ற பேர் ஆச்சு.


  திருவனந்தபுரத்துல இருந்தப்போ, அரசியல் போராட்டங்கள்ல சிவம் ஈடுபட்டார். அந்த நேரத்துல, அதாவது 1906, 1907ல வங்கப் பிரிவினை, அரவிந்தர், திலகர் இவங்க மீது பிரிட்டிஷார் தொடுத்த வழக்குகள், லாலா லஜபதி ராய் நாடு கடத்தப்பட்டதுன்னு, இந்தியா முழுக்க ஒரே பரபரப்பு ! அப்பதான், ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த சந்திர வர்மாங்கிறவர், நாடு முழுக்க சுற்றி, சுயராஜ்ய பிரசாரம் செய்து வந்தார். திருவனந்தபுரத்துக்கு வந்த அவரோட உணர்ச்சிகரமான பேச்சு, சிவாவையும் ரொம்பவே கவர்ந்ததாம். அப்போதான் இந்த நாட்டின் விடுதலைக்காக அனைத்தையும் அர்ப்பணம் செய்வேன்னு சபதம் எடுத்தாராம் சிவா.

  freedom fighter Subramania Siva SECVPF
  freedom fighter Subramania Siva SECVPF

  ‘தர்ம பரிபாலன சமாஜம்’ – இதான் சிவா துவங்கின சங்கம். அந்த சங்கத்தோட கூட்டங்கள் அவரோட வீட்டிலேயே நடந்தது. தேசிய உணர்வூட்டும் பத்திரிகைகளை வரவெச்சி, எல்லாரையும் படிக்க வெச்சார். வெளியிடங்கள்ல பொதுக் கூட்டங்களை கூட்டி அதுல உணர்ச்சிகரமா பேசினார். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக மக்களைத் திரட்டினார். அப்போதான் அவருக்கு அங்கே சிக்கல் வந்துச்சு. திருவாங்கூர் சமஸ்தானம் பிரிட்டிஷாரோட ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது. அது என்னன்னா, அவங்க சமஸ்தானத்துல யாராவது பிரிட்டிஷாருக்கு எதிரா போராடினாங்கன்னா, அவங்களை பிடிச்சு பிரிட்டிஷார்கிட்டே ஒப்படைக்கணும்கிறதுதான் அது. அதனால சிவாவும் ஒரு கட்டத்துல திருவனந்தபுரத்துலேர்ந்து வெளியேறினார்.


  அதுக்குப் பிறகு அவர் வந்தது திருநெல்வேலிக்கு! சிவா ஒரு சிறந்த சொற்பொழிவாளர். அவர் பேச்சைக் கேட்டு இளைஞர்கள் கூட்டம் கூட்டமா சுதந்திரப் போராட்டத்துல இணைஞ்சாங்க. இளைஞர்களும், தொழிலாளர்களும்தான் தங்களோட சுதேசியத் திட்டத்துக்கு பக்க பலமாக இருப்பாங்கன்னு பலமாக நம்பின சிவா, அவங்களுக்காகவே போராட்டங்கள்ல ஈடுபட்டாராம். திருநெல்வேலில வ.உ.சி.க்கு நல்ல செல்வாக்கு இருந்துச்சி. சிவாவோட பொதுக்கூட்டங்கள கேட்ட வ.உ.சி., சிவாவை பாராட்டி தன்னோட சேர்த்துக்கிட்டார். இவங்க ரெண்டு பேரும் இணை பிரியா போராட்ட வீரர்களா அப்போ வலம் வந்தாங்க…


  அப்போதான், மகாகவி பாரதியாரும் இவங்களோட இணைஞ்சார். இந்த மூன்று பேரோட நட்பு, தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வெச்சுது. இவங்க மூணு பேரையும் “தமிழகத்தின் தேசிய மும்மூர்த்திகள்” அப்டின்னே அழைச்சாங்களாம். வ.உ.சி., சுப்பிரமணிய சிவம்லாம், திலகர் குழுவைச் சேர்ந்தவங்க. ஆனா திலகரின் மறைவுக்குப் பிறகு, தீவிரவாத அரசியல்லேர்ந்து ஒதுங்கிக்கிட்டு, போராட்டத்தை வேறு பார்வையில் கொண்டு போனாங்க…
  **
  ‘தேச பக்தன்’ பத்திரிகைல திலகரோட கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்து வந்ததுக்காக, அதனோட ஆசிரியர் திரு.வி.கல்யாண சுந்தரத்தை சிவா அடிக்கடி பாராட்டுவாராம். ஆனா, அதுல அன்னிபெசன்ட் அம்மையாரை ஆதரிச்சி அவர் எழுதறத கண்டிப்பாராம். ”அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறணும்னு நாம வேலை செய்யறோம். அதுக்கு ஒரு அன்னியப் பெண்ணோட உதவியை நாடுவது பொருந்துமா? அது நம்ம சுய கௌரவத்துக்கு குறைச்சல் இல்லியான்னு திருவிக., வை கேள்வி கேட்பாராம்.


  சிவாவோட கொள்கைகள்லாம் ரொம்பவே தீவிரமானதா இருந்திருக்கு. சமூகம் சார்ந்த நோக்கு, அதன் வழியே ஆன்மிகத் தேடல் அப்டின்னு இருந்தாக் கூட, அவரோட பேச்சு, செயல் எல்லாமே ரொம்ப மிடுக்கோட இருக்குமாம்! ’வீரச் செயல் செய்யாதவன் ஆண் மகனில்லை’, ‘பலவீனமானவனுக்கும் எளியவனுக்கும் அபயம் கொடுத்து உதவணும்’, ‘மூடனையும் மூர்க்கனையும் பலத்தாலேயே வெல்லணும்’ … இந்த மாதிரி கொள்கையிலேயே வாழ்ந்தவர் நம்ம ‘சுப்பிரமணிய சிவா’


  வ.உ.சி.,யும் சுப்பிரமணிய சிவாவும் சேந்து, திருநெல்வேலியை தேசியப் போராட்டக் களமா மாத்தியிருந்தாங்க. ”ஆங்கில ஆட்சிக்கு எதிராக போரிடும் இரட்டைக் குழல் துப்பாக்கி” அப்டின்னு மக்கள் அவங்கள பேசினாங்க. இதனால ஆட்சியாளர்கள் கோபம் அடைஞ்சாங்க. இருவர் மேலயும் ஏதாவது வழக்கு போட்டு சிறையில் தள்ளிடனும், திருநெல்வேலி மக்களோட போராட்ட குணத்தை மட்டுப்படுத்தணும்னு நினைச்சாங்க. ஏன்னா, கட்டபொம்மன், ஊமைத்துரை தொடங்கி ஆண்டாண்டுகளா இயல்பிலேயே சுதந்திர தாகத்தோட இருந்தாங்க திருநெல்வேலி மக்கள்! எரியிற கொள்ளில எண்ணெய் விட்டதுங்கிறது மாதிரி, வ.உ.சியும் சிவாவும் செய்த பிரசாரத்துல, திருநெல்வேலி கொந்தளிப்பா இருந்தது.


  ஆமா… நாட்டுப் பற்று இல்லாதவங்களை, ஆங்கிலேயருக்கு வால் பிடிச்சவங்களை புழு மாதிரி பாத்தாங்க. அந்த மாதிரி ஆளுங்கள வண்டிக்காரங்க தங்களோட வண்டிகள்ல ஏத்திக்க மாட்டாங்க. சலவைத் தொழிலாளர்கள், சவரம் செய்யறவங்க, அவங்களுக்கு சேவை செய்யமாட்டாங்க. தையல்காரங்க துணி தைச்சுக் கொடுக்க மாட்டாங்க. கடைக்காரங்க பொருள்கள் எதுவும் கொடுக்க மாட்டாங்க. சுதந்திரப் போர் வேகத்தில, வங்கத்தையும் விஞ்சி நின்னுது திருநெல்வேலி. இந்த அளவு மக்கள்கிட்டே வெறி வரக் காரணமா இருந்தாங்க வ.உ.சி.,யும் சிவாவும்!


  அப்போதான் ஒரு சோதனை வந்தது. வங்காளத்துல அரவிந்த கோஷ் மேல ஒரு பொய் வழக்கு போட்டாங்க பிரிட்டிஷ்காரங்க. அதுக்கு அரசுத் தரப்பு சாட்சியா விபின் சந்திர பாலை வற்புறுத்தி கூப்டாங்க. ஆனா, தீவிர போராளியான விபின் சந்திரபால் அதுக்கு மறுத்துட்டாரு. அதனால, ஆத்திரமடைஞ்ச ஆங்கிலேய அரசு அவருக்கு ஆறு மாசம் சிறை தண்டனை கொடுத்தது. ஆறு மாசத்துக்குப் பிறகு சிறையில் இருந்து வந்த விபின் சந்திரபாலை வரவேற்று, அப்போ நாட்டில் பல இடங்கள்ல விழா நடத்தினாங்க. அந்த விழாவை தூத்துக்குடியில கொண்டாடணும்னு வ.உ.சியும் சிவாவும் நினைச்சாங்க. ஆனா, அதுக்கு மாஜிஸ்டிரேட் அனுமதி கொடுக்கலை. ஆனாலும், நாங்க விழா எடுக்கிறதை யாரும் தடுக்க முடியாதுன்னு சொல்லி, அப்போ சின்ன ஊரா இருந்த தூத்துக்குடில பத்தாயிரத்துக்கும் மேல மக்களைக் கூட்டி, விழா எடுத்தார் வ.உ.சி.
  **
  ஆமாம். அதான் ஆங்கிலேய அரசுக்கு வெறுப்பை வர வெச்சிது. ரெண்டு பேரையும் வஞ்சகமா திருநெல்வேலிக்கு கூப்பிட்டார் அப்போ கலெக்டரா இருந்த விஞ்ச் துரை. ஆனா ரெண்டு பேரையும் கைது செய்து சிறையில அடைச்சாங்க. இதனால அப்போ திருநெல்வேலில பெரிய கலவரமே உருவாச்சு. துப்பாக்கிச் சூடு நடந்தது. கொஞ்ச நாட்கள்ல கலவரம் அடங்கின பிறகு, வ.உ.சி., சிவா ரெண்டு பேர் மேலயும் குற்றச்சாட்டு பதிவு செஞ்சி, மாவட்ட நீதிபதியா இருந்த பின்ஹே முன்னாடி வழக்கு நடந்தது.

  Subramanya Siva baratmata horz
  Subramanya Siva baratmata horz

  அப்போ சிவாவுக்கு எதிரா சில புகார்களை தெரிவிச்சாங்க.. “சந்நியாச தர்மத்தை ஏத்துக்கிட்டவங்க, நாட்டு விஷயங்கள்ல, அதுவும் அரசியல் விஷயங்கள்ல ஈடுபடுவது தவறு”ன்னு ஒரு போலீஸ்காரர் புகார் தெரிவிச்சார். திருவனந்தபுரத்திலிருந்து திருநெல்வேலிக்கு வந்த சிவா, வ.உ.சியோட வீட்டுலதான் தங்கியிருந்தார். அது வர்ணாசிரம தர்மத்துக்கு எதிரானது; அவர் சாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டியவர்னு இன்னொருத்தர் புகார் தெரிவிச்சார். இதை எல்லாம் கேள்விப் பட்ட மகாகவி பாரதியார், ’சந்நியாசமும் சுதேசியமும்’ அப்டின்னு, சிவாவை ஆதரிச்சி பத்திரிகைல எழுதினார்.


  இந்த வழக்கு விசாரணை அப்போ, நீதிபதிகிட்டே சிவா கொடுத்த வாக்குமூலம், அவரது நோக்கத்தை வெளிப்படுத்திச்சி…
  ”நான் ஒரு சந்யாசி. எனக்கு எதிலும் பற்றில்லை. பக்தி மார்க்கத்துல ஈடுபட்டு ஆன்மாவை பந்தங்கள்ல இருந்து விடுவிச்சி முக்தி அடையச் செய்வதுதான் என் நோக்கம். எல்லாவித வெளி பந்தங்கள்ல இருந்தும் விடுவித்துக் கொள்வதுதான் ஆத்மாவுக்கு முக்தி. அதே மாதிரி, ஒரு தேசத்துக்கு முக்கியமானது – அந்நிய நாடுகளின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வது; பரிபூர்ண சுதந்திரம் அடைவது. அதைத்தான் நான் எந் நாட்டு மக்களுக்கு போதிக்கிறேன். அதாவது, சுதந்திர லட்சியம், அதை அடையும் மார்க்கம், சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்கும் எதையும் சாத்வீக முறையில் எதிர்ப்பது, சுதேசக் கல்வி… இவ்வளவுதான்.” அப்டின்னாரு.


  ஆனாலும், சிவாவுக்கு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டு, பிரிவ்யு கவுன்ஸில் தலையீட்டால அது ஆறு ஆண்டா குறைக்கப்பட்டதாம். இந்தத் தீர்ப்புக்குப் பின்னாடி, அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போ அவருக்கு உரோமம் அடிக்கிற வேலையை சிறையில் கொடுத்தாங்க. இதனால் அவரோட உடல்நலம் பாதிக்கப்பட்டு, அங்கேயிருந்து கோவை, சேலம்னு சிறைகள்ல மாத்தப்பட்டார். ஆனா அவருக்கு தொழுநோய் தொற்றி, அவரோட உடலை உருக்குலைச்சிடுச்சாம்.


  சிறையிலிருந்து வெளில வந்த சிவா சென்னைல குடியேறினார். பிரபஞ்ச மித்ரன் அப்டின்னு ஒரு வாரப் பத்திரிகையும், ’ஞானபானு’ ங்கிற மாசப் பத்திரிகையும் தொடங்கினார். ஞானபானு-ல பாரதியார் தொடர்ந்து எழுதினார். பாண்டிச்சேரில இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திரப் போராட்ட ஆயுதமாகவே இருந்துதுன்னு சொல்லலாம்.


  சுப்பிரமணிய சிவாவோட சென்னை வாழ்க்கை ஒரு நெருக்கடிலதான் கழிஞ்சுது. இருந்தாலும் ஊர் ஊரா போயி மக்களுக்கு தேச உணர்வு ஊட்டுறதை அவர் விடவே இல்லை. பொதுக் கூட்டமா நடத்தாம, மக்கள் எங்கெல்லாம் கூட்டமாக சேர்ந்திருந்தார்களோ அங்க போயி பேசினார். பிறகு 1919-ல் இந்திய தேசாந்திரி-ன்னு ஒரு பத்திரிகையைத் தொடங்கினார்.


  சுப்பிரமணிய சிவாவுக்கு தொழிலாளர் பேர்ல ரொம்ப அக்கறை இருந்தது. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு சங்கம் வைத்து ஒவ்வொரு செயல்லயும் ஒற்றுமையோட செயல்படணும்னு நினைச்சார். தொழிலாளர் குறிக்கோளை அடைய இரண்டு வழிகள் இருக்கு. ஒன்ணு, இயந்திரங்களை சேதப்படுத்தி நஷ்டப் படுத்துவது, ரெண்டாவது தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வது. இதுல ரெரண்டாவது வழியைத்தான் நாம பின்பற்றணும்னு சொல்லி வந்தார். அவரோட பேச்சால, 1920-ல் சென்னைல ட்ராட் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தபோது அதுல நேரடியா ஈடுபட்டார்.


  சிவாவுக்கு காந்தியின் போராட்டத்தோட தாக்கமும் இருந்தது. தமிழ்நாடு பத்திரிகைல திலகர் – காந்தி தர்சனம் அப்டின்னு ஒரு நாடகத்தையும் சிவா எழுதினார். காந்தீயம் பேர்ல அவர் மனசு போனாக்கூட, இயல்புல இருந்த தீவிரவாத தன்மை மட்டும் குறையவே யில்லை. சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தினதால இந்த முறை 1921-ல இரண்டரை வருட கடுங்காவல் சிறை தண்டனை கொடுத்தது. ஆனா, 2 வாரங்கள்ல விடுதலை செஞ்சிட்டாங்க. அதுக்குப் பிறகும் கூட, 27-11-1922ல ஒரு வருட சிறை தண்டனை கொடுத்தாங்க. அந்தக் கொடுமையான சிறை வாழ்க்கையால சிவாவுக்கு தொழுநோய் முற்றியதாம்.


  சென்னைல, திருவல்லிக்கேணி கடற்கரைக்கு திலகர் கட்டம் அப்டின்னு பெயர் சூட்டியவர் சிவா! அங்க, தன்னோட அரசியல் குருவான திலகரின் பிறந்த தின விழாவ சிறப்பாக நடத்திட்டு வந்தார். அப்பப்போ வெளியூர்களுக்கெல்லாம் போயி, உடம்பு சரியில்லாத நிலையிலயும் பேசிட்டு வந்தார். சிவாவோட நோய்க்கு சிகிச்சை எடுக்கணும்னா, அவரால அதுக்கு செலவு செய்து மாளாதுன்னு தெரிஞ்சிருந்த டாக்டர் நஞ்சுண்ட ராவ், சிவாவுக்கு இலவசமாவே சிகிச்சை அளிச்சி வந்தாராம். அதனால, சுப்ரமணிய சிவா தன்னோட வாழ்நாள் முழுக்க, மனிதாபிமானமும் நாட்டுப்பற்றும் கொண்டிருந்த டாக்டர் நஞ்சுண்ட ராவை மறக்கவேயில்லையாம்.


  அந்தக் காலத்துல தொழுநோயாளிகள ரொம்பவே கொடுமையா நடத்தியிருக்காங்க. சிவாவை ரயில்ல பயணம் செய்யக் கூடாதுன்னு அரசு தடைவிதிச்சது. ஆனாலும் சிவா மனம் கலங்கலை. கட்டை வண்டிலயும், நடந்தும் போயி, கூட்டங்களை நடத்தினாராம். அப்போதான் சிவாவுக்கு பாரத மாதா கோயில் பத்தி மனசுல தீப்பொறி எழுந்திருக்கு…


  ஆமா, சாதி மத பேதம் இல்லாம, பாரத நாட்டு மக்கள் எல்லோரும், பாரத சாதியினர் அப்டின்னும், பாரத மாதாவே நாம் வழிபடும் தெய்வம் அப்டின்னும் மக்கள்ட்ட போதிச்சார். பாரத மக்கள் அனைவரும் அவங்க அவங்க விரும்பின படி, பாரத மாதாவை வணங்கணும்னு , ”பாரதாஸ்ரமம்” நிறுவ நினைச்சார். அதன் மூலம் இளைஞர்களிடையே ஒற்றுமை உணர்வையும் தேச பக்தியையும் ஏற்படுத்த முடியும்னு உறுதியா நம்பினார். அதற்கு நிதி திரட்ட கிளம்பினார். துறவுக்கோலம் கொண்டிருந்ததால், தன்னோட பெயரை ‘சுதந்தரானந்தர்’ அப்டின்னு வெச்சிக்கிட்டார். ஆனா, மக்களோ இயற்பெயரான சுப்பிரமணிய சிவாவை சொல்லித்தான் கூப்பிட்டாங்களாம்…


  பாரதாஸ்ரமத்துக்குத் தேவையான நிதி திரட்ட, முதல்ல கும்பகோணம் போனார். அங்க மகாமகம் நடந்தது. மக்கள் நிறையப் பேர் அங்கே குவிஞ்சிருந்தாங்க. அவங்க மூலமா 500 ரூபாய் வரை சேர்ந்ததாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பொருள் திரட்டி பாரதாஸ்ரமத்தை நிறுவிடணும்னு கனவோட இருந்தார். அதுக்காக கூட்டங்கள்ல பேசினார்.


  அப்போ அஹிம்சைக் கொள்கை தீவிரமா பரவிச்சி. ஆனா, ஹிம்சை அஹிம்சை பத்தி, சிவா கிட்டே ஒரு தெளிவு இருந்தது. திருவல்லிக்கேணி கடற்கரைல நடந்த கூட்டத்தில அவர் பேசினப்போ… சுயராஜ்ஜியம் அடைய வேண்டுமென்று ஒரு அடி எடுத்து வைத்து விட்டோம். அதிகாரிகள் நம் மார்பின் மேல் கை கொடுத்துப் பின் தள்ள முயலுகிறார்கள். நாம் அவர்களைப் பின்தள்ளி முன்னே செல்ல வேண்டுமென்று விரும்பவேண்டும். ஏதோ ஒரு திட்டத்தைப் போட்டு விட்டு அது ஒரே வழிதான் உள்ளது என்று கூறுவது, அது என்னுடைய சிற்றறிவிற்கெட்டிய வரை சரி என்று தோன்றவில்லை. சுயராஜ்ஜியம் எந்த வழியில் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்று நான் கூறுவேன்.

  ஹிந்துக்களுள் க்ஷத்திரிய ஜாதி என்று ஒன்று இருக்கிறது. தர்மராஜன், ராமர் போன்ற அரசர்கள் இருக்கவில்லையா? அவர்களில்லை என்று நாம் மறுக்க விரும்புகிறோமா? ஆகையால் ஹிம்சையும் ஒரு கொள்கை என்று நான் உணராமலில்லை. சிலர் ஒரே பிடிவாதமாக அஹிம்சை ஒன்றுதான் வழி என்று சொல்கின்றனர். அதை நான் ஒப்புக்கொள்ளவில்லை.

  தேச வெறி பிடித்தலைய வேண்டும். இந்த முறையில் வேலை செய்தால் சுயராஜ்ஜியம் சீக்கிரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த அரசாங்கத்தை எந்தெந்த சந்து பொந்துகளில் தாக்கக்கூடுமோ அந்தந்த சந்து பொந்துகளில் எல்லாம் தகுந்த முஸ்தீபுகளுடன் சென்று தாக்கி சிம்மாதனத்தைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது கொள்கை.

  சூழ்ச்சியும் கபடமுமுள்ள இந்தக் கவர்ன்மெண்டாரிடம் யோக்கியமான முறையில் காரியம் நடக்க முடியுமா? நான் பலமுறையும் கூறியிருப்பது போல் எந்தச் சந்தர்ப்பத்திலே எந்த இடத்திலே எது கிடைத்தாலும் அதைக்கொண்டு அடிப்பேன். கல்லும் மண்ணும் கிடைத்தாலும் அதை எடுத்து அடிப்பதுதான் முறையாகும். எதிரி ஒருவன் கத்தி எடுத்துக் குத்த வரும்பொழுது, நானும் கத்தி கிடைக்கும் வரை காத்துக் கொண்டிருக்க முடியுமா? இப்படி இருக்கப் பட்ட ஆங்கில அரசாங்கம் உயிரற்றும் வெட்கம்கெட்டும் ரோஷமின்றியும் இருக்கின்றது. இதிலிருந்து இவர்கள் உலகத்தவரது அபிப்பிராயத்திற்கு பயப்படமாட்டார்களென்று நினைக்கிறேன்.

  தேச ஜனங்களுள் ரோஷம், அஹங்காரம், கோபம், அதிருப்தி முதலியவற்றை உண்டாக்கி லாபமடைய ஒரு யோசனை கூறுகிறேன். அந்நிய நாட்டார் இங்கே வியாபாரம் என்று சொல்லிக் கொண்டு அரசாங்கத்தைக் கைப்பற்றி நடத்துகிறார்கள். அதனை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணம் ஜனங்களுடைய மனதில் பதியும்படி செய்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. – அப்டின்னு பேசினார்.


  சிவாவின் இந்தக் கருத்துக்கள்லாம் ராஜ நிந்தனைக்குரியதுன்னு சொல்லி, சென்னை அரசாங்கம் சிவா மீது வழக்குத் தொடர்ந்தது. வழக்கம்போல் சிறை.

  சிறையிலிருந்து வெளில வந்த சிவா, இந்த முறை ஆங்கில அரசுக்கு எதிரா வித்தியாசமான தாக்குதலைத் தொடுக்க நினைச்சார். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட களம் தான், கிராம பஞ்சாயத்து சபைகள். சின்னஞ்சிறு கிராமங்கள்ல ஏற்படுற சிறிய வழக்குகளுக்குக் கூட அப்பாவி மக்கள், வெள்ளையர் ஏற்படுத்தின நீதிமன்றங்கள்ல கால்கடுக்க நிக்கிறதைப் பார்த்து சிவா வெறுத்தார். அதனால மக்கள் அவங்களுக்குள்ளேயே பேசி பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளணும்னு, ‘இந்துஸ்தான் பஞ்சாயத்து சபை’ அப்டின்னு ஓர் அமைப்பை நிறுவினார். அதன் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்தார். அவருடைய திட்டம் மக்கள் கிட்ட அமோக ஆதரவப் பெற்றதாம். இதன் மூலமா அந்தந்த கிராமங்கள்ல வர்ற வழக்குகள்லாம் அந்த மன்றங்களிலேயே பேசித் தீர்த்துக்கிட்டாங்க. இதனால, ஆங்கில அரசுக்கு சிவா பேர்ல ரொம்பவே கோபம் வந்தது. இது, கிராமங்கள்ல ஒருவகை இணை ஆட்சியை நிறுவுவதற்கு சமம்னு சொல்லி, அவருக்கு பிடியாணை அனுப்பியது.


  ஏற்கெனவே இருமுறை கொடுமையான சிறைவாசம் அனுபவிச்சதால இந்த முறை சிவா வித்தியாசமாக யோசிச்சார். இனி ஒருதடவை சிறைக்குப் போனா, உயிரோடு திரும்ப முடியாதுன்னு நினைச்ச சிவா, ‘இனி நான் இதுபோன்ற விஷயங்களில் தலையிடமாட்டேன்’ அப்படின்னு எழுதிக் கொடுத்துட்டு, சிறைத் தண்டனையிலிருந்து தப்பி வந்தார். ஆனா அவரோட திட்டம் இப்போ பாரதாஸ்ரமத்தை நிறுவுறதுல இருந்தது. பாரதமாதா கோயில் பற்றி பிரசாரம் செய்து தமிழகத்துல பல இடங்கள்ல பயணம் செய்தார்.


  அப்போ கொங்குநாட்டில் சிவாவோட கருத்துக்கு பெரிய வரவேற்பு இருந்தது. மக்கள் அவரை பணிஞ்சு வணங்கினாங்க. பாப்பாரப்பட்டிங்கிற ஊர்ல இருந்த சிவாவொட நண்பர் சின்னமுத்து முதலியார், சிவாகிட்டே சொன்னார்…. ”நீங்க பாப்பாரப்பட்டிக்கே வந்து தங்குறதா இருந்தா, மக்களின் உதவி பெற்று பாரதமாதா கோயில் நிர்மாணிக்கவும் பாரதாஸ்ரமம் நிறுவவும் நான் உதவி செய்யறேன். நீங்க சென்னையிலிருந்து பாப்பாரப்பட்டிக்கு வந்துடுங்க” அப்படின்னாராம்.


  தன்னோட கனவு நனவாகணும்னா இது சரியான வழின்னு யோசிச்ச சிவா அதுக்கு ஒப்புதல் கொடுத்தாராம். சின்னமுத்து முதலியாரும் தாம் சொன்னபடி, பாப்பாரப்பட்டி கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுல, ஏழு ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தை வாங்கி பாரதாஸ்ரமம் கட்டக் கொடுத்தார். சிவா, அந்த இடத்துக்கு பாரதபுரம்னு பெயரிட்டு, பாரதாஸ்ரமத்தை நிறுவினார். அப்போ அங்க சுற்றுப்பயணம் வந்த சித்தரஞ்சன் தாஸை வெச்சி, பாரத தேவி கோயிலுக்கு அடிக்கல் நாட்டச் செய்தாராம்.


  பாரதாஸ்ரமம் பத்தி நவசக்தி இதழ்ல ஒரு அறிக்கை வெளியிட்டார் சிவா. அதன் முகப்பில், ஓம், வந்தேமாதரம், அல்லாஹு அக்பர் அப்டின்னு வணக்கத்தைத் தெரிவிச்சாராம். இந்த பாரதமாதா ஆலயத்தில் அர்ச்சகருக்கு வேலை இல்லை. ஆலயத்தின் பணத்தை வெச்சி, ஏழைகளுக்கு உதவ தொழிற்சாலைகள் நிறுவப்பெறும் அப்டின்னு புரட்சிகர அம்சங்களை முன்னிறுத்தி சிவா அறிக்கை வெளியிட்டார்.

  அந்த அறிக்கையில அவர் சொன்னது.. ஒரு மாபெரும் புரட்சிதான்…


  நமது தேசத்து இப்பொழுதைய நிலைமையில் இப்பொழுது வழங்கப்படும் நாணயமானது ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அடிக்கடி பயன்பட்டுக்கொண்டே இருக்கும்படியான மாதிரியில் உபயோகிக்கப்பட வேண்டுமே தவிர ஓரிடத்தில் பொன்னாலோ வெள்ளியாலோ கல்லாலோ கட்டடமாகவே குவிந்து கிடக்கும்படி விட்டு விடுவது அவ்வளவு நன்றன்று என்பது என் அபிப்பிராயம்.

  ஆகையால் இவ்வாலயத்துக்கு பக்த கோடிகளால் பண்புடன் வழங்கப்படும் பணமானது கல்விச் சாலைகளோ கைத்தொழிற்சாலைகளோ நம் ஏழைச் சகோதரர்களுக்கு இப்பொழுதைய நிலைமையில் உபயோகப்படும்படியான வேறு எந்த ஸ்தாபனங்களோ ஏற்படுத்துவதற்கு உபயோகப்படும். ஸ்ரீபாரத தேவியின் ஆலயத்தில் ஒரு லக்ஷம் ஆபரணங்களாகக் குவிந்து சொத்தாயிருப்பதைவிட ஒரு லக்ஷம் ரூபாய் மூலதனத்துடன் ஏதேனும் ஒரு கைத்தொழிற்சாலை நடந்து வரும்படி செய்தால் அது ஆலயத்துக்கு ஸ்திர சொத்தாகவும் இருக்கவும் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு வேலை கொடுத்து அவர்கள் பிழைப்பதற்கு ஒரு வழியாகவும் ஏற்படுமாகையால் இது சிறந்ததல்லவா?

  இன்னும் இந்த ஆலயத்தில் அன்னைக்கும் அவருடைய புத்திரர்களுக்கும் இடையில் மத்தியஸ்தமோ அல்லது சிபார்சையோ செய்வதற்கு அர்ச்சகர் என்ற பெயருடன் எவரும் இருக்க மாட்டார்கள். அவரவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதாவை பூஜித்துக் கொண்டு போகலாம்.


  இப்படி தேசத்தையே தெய்வமா வணங்கினா, சமய வேறுபாடு கடந்து மக்களை ஒருங்கிணைக்க முடியும் அப்டின்னு சிவா நினைச்சார். ஆனா அவரோட பாரதமாதா ஆலயங்கிற கனவு நனவாகாமலேயே போனது. பெரிய அளவில் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை! அவருடைய புரட்சிக் கருத்துகளை பலரும் சரியா புரிஞ்சுக்கலைன்னே சொல்லலாம்.


  தன் கனவு முழுமையா நிறைவேறாத நிலைல, மனசு சஞ்சலப்பட்டுக்கிட்டிருந்த சிவா, பல ஊர்களுக்கும் பயணம் செய்தார். ஆனாலும் அவருக்கு நோய் முற்றிப் போச்சு. அந்த நிலைல தம் கனவுக் கோயிலான பாரதாஸ்ரமத்திலேயே உயிரை விட்டுடணும்னு நினைச்சார். பாப்பாரப் பட்டிக்கே வந்தார். 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தன்னோட 41-வது வயசுல இந்த உலக வாழ்க்கையை விட்டுப் போனார். சிவா வாழ்ந்தது 40 வருடங்கள்தான். ஆனா, அதற்குள் 400 வருட சாதனைகளைச் செய்து முடிச்சார்.


  சிவாஜி நாடகம் மூலமா தேச பக்தியைப் பரப்பினார். ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பேர்ல ஆழ்ந்த பற்று வெச்சிருந்தார். அவர்களோட நூல்களை மொழிபெயர்த்தார். இப்படி பன்முகத் திறமை கொண்டிருந்த பேரறிவாளர்களோட தியாகத்தால்தான், இன்று சுதந்திர நாட்டில் நாம் வாழ்ந்திட்டிருக்கோம். அதை உணர்ந்து, அவர்களின் தியாக வாழ்வைப் போற்றி நாம் அஞ்சலி செலுத்தணும்…!

  • கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீராம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-