திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், நேற்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு சேவையில் பங்கேற்க தனது மனைவியுடன் வந்திருந்தார் இலங்கை அதிபர் சிறீசேனா. அப்போது ஏழுமலையான் கோவிலின் மூலவர் அறையில் உள்ள தங்கக் கதவை கோவில் ஊழியர்கள் சாவி போட்டு வழக்கம்போல் திறக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக சாவி உடைந்து பூட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டது. இதனால் மூலவரின் அறையைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வேறு வழியின்றி, பூட்டை உடைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். தொடர்ந்து கோவில் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு மூலவரின் தங்கக் கதவுப் பூட்டு உடைக்கப்பட்டு,, கதவு திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஏழுமலையான் சந்நிதியில் நடந்த சுப்ரபாதம் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறீசேனா கலந்து கொண்டார். காலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து பின்னர் தேவஸ்தான துணை செயல் அலுவலர் ரமணா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘ஏழுமலையான் கோவிலில் நேற்று வழக்கம்போல் ஏகாந்தசேவை முடிந்து அதிகாலை கதவு அடைக்கப்பட்டது. பின்னர் அதிகாலை 2.15 மணி அளவில் அர்ச்சகர்கள் சுப்ரபாத சேவைக்காக கதவைத் திறக்க முயன்றனர். அப்போது அதன் சாவி உடைந்தது. இருப்பினும் ஊழியர்கள விரைந்து வந்து பூட்டை அறுத்து திறந்தனர். அதன்பிறகு வழக்கம்போல சுப்ரபாத சேவை நடந்தது. சந்நிதி சாவி உடைந்ததால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாது. எனவே, பக்தர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை’ என்றார். ஆனால், இது குறித்து பக்தர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். தங்கக் கதவின் பூட்டு இதுவரை இவ்வாறு தகராறு செய்ததில்லை. பூட்டும் இதுவரை உடைக்கப் பட்டதும் இல்லை. எனவே, கதவின் பூட்டுச் சாவி உடைபட்டு மாட்டிக் கொண்டதும், பூட்டு உடைக்கப்பட்டதும் மிக மோசமான அறிகுறி என்றும், அதனால் சந்நிதியில் பரிகாரங்கள் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் தற்போது பக்தர்கள் மத்தியிலும் தேவஸ்தான ஊழியர்கள் மத்தியிலும் சர்ச்சை வெடித்துள்ளது.
திருமலை சந்நிதி கதவின் பூட்டு உடைப்பு: மோசமான அறிகுறி என வெடிக்கும் சர்ச்சை
Popular Categories