
இன்று ஐப்பசி திருவோணம் நன்னாள். பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள் எனப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் அடுத்தடுத்த நாட்களில் அவதரித்தனர்.
ஐப்பசி திருவோணத்தன்று திருவெஃகா (காஞ்சிபுரம்) யதோக்தகாரி பெருமாள் கோயில் அருகிலுள்ள குளத்தில் திருமாலின் சங்கின் அம்சமாக பொய்கையாழ்வார் அவதரித்தார். மூவரும் திருக்கோவிலூரில் ஒரே சமயத்தில் ஸ்ரீமன் நாராயணனின் கடாக்ஷத்தை பெற்றனர். அப்போது, நாலாயிர திவ்யபிரபந்தத்தில், ‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக’ எனத் தொடங்கும் முதல் திருவந்தாதி எனப்படும் 100 பாடல்களை பொய்கையாழ்வார் பாடினார்.
இப்பாடல்களில் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் ஆதிகேசவ பெருமாள் கோயில், திருக்கோயிலூர், திருவெக்கா, திருவேங்கடம், திருப்பாற்கடல் ஆகிய 6 திருத்தலங்களைப் பாடியுள்ளார். இதுபோல் மற்ற இருவரும் தலா 100 பாடல்கள் பாடினர்.இன்று ஐப்பசி திருவோணம் விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசயன பெருமாள் கோயில் உற்சவர் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்றது.
