பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக 41நாள் மண்டல பூஜை இன்று நிறைவடைந்தது.அபிஷேக ஆராதனை பூஜை வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து கும்பாபிஷேக மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கும்பாபிஷேக மண்டல பூஜை இன்றுடன் நிறைவுபெறுகிறது.
இதையொட்டி நேற்று மாலை 6.30 மணிக்கு பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, கலசபூஜை, 1,008 சங்காபிஷேகம், பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி இன்று காலை 2-வது காலபூஜை, பாராயணம் நடைபெற்றது. நண்பகல் 11 மணிக்கு பூர்ணாகுதி நடத்தி அதைத்தொடர்ந்து உச்சிகால பூஜையில் சங்காபிஷேகம், கலசாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்படுகிறது.