ஆடிச் சிறப்பு அம்மன் வழிபாடு: செங்கோட்டையில் அருள் பாலிக்கும் வண்டிமறிச்சி அம்மன்!

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஆலயங்கள்

vandimarichiamman - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகரில் புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில், வண்டிமறிச்சி அம்மன் கோயில். இந்த அம்மனுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது, இந்தக் கோயில் எப்படி வந்தது..?

150 ஆண்டுக்கு முன் அம்மன் நிகழ்த்திய திருவிளையாடல் இது.  செங்கோட்டையில் இருந்த ஆதி சுமை தாங்கிக் கல் அருகில் பூலாவுடைய தலைவனாரும், அவரது மகன் பாண்டியத் தலைவனாரும் பேசிக் கொண்டிருந்தனர். இந்த இடம் இன்றும் மேடையிட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அருகே 11 வயதுச் சிறுமி நீண்ட நேரமாக நின்றிருந்தாள்.

பூலாவுடைய தலைவனார், யாரம்மா நீ? ரொம்ப நேரமா நிக்கிறியே! என்னம்மா வேணும்? என்றார்.

அவள், இங்க யார் வீட்டுலயாவது ஏதாவது வேலை செஞ்சு பொழச்சிக்கலாம்னு வந்தேன் என்றாள்.

மலர்ந்த முகத்துடன், தாயி! எங்க வீட்டுக்கு வாரியா? எம் மவளைப் போல பாத்துக்கறேன் என்றார் தலைவனார்.

அவளும் ஒப்புக்கொண்டு வேலை செய்தாள். ஒருநாள், தலைவனார்  அவளிடம் மாடியை மெழுகச் சொன்னார். குழந்தையும் மாடிக்குப் போனாள். சற்று நேரத்தில் அங்கு பெண்கள் குலவை இடும் ஓசை மட்டும் எழுந்தது.

தலைவனார் ஆச்சரியத்துடன் மாடிக்குச் செல்ல அங்கே நறுமணம் கமழ்ந்தது. மெல்லிய புகைப்படலம் தெரிந்தது. குழந்தையைக் காணவில்லை.

அப்போது அசரீரியாய் ஒரு குரல் ஒலித்தது. பக்தா! நான் தேவலோக தெய்வம். ஒரு முறை பிரம்மன் ரதத்தில் சென்ற போது சக்கரத்தின் அச்சு முறிந்தது. நான் என் கை விரலால் தேர் நிலை குலையாது காத்தேன். ரதம்  நின்று கீழ் இறங்கிய பிரம்மா… தேவி! என் ரதம் கீழே சரியாது காத்த உனக்கு வரம் தருகிறேன். நீ பூலோகம் செல். உனை பக்தர்கள் வணங்கித் தொழுவர். வண்டிமறிச்சி அம்மன் என்ற பெயருடன் பூலோகத்தில் உனை வந்து வணங்கும் அன்பர்களுக்கு அருள் புரிந்து தெய்வமாகத் திகழ்வாய் என வாழ்த்தினார்.

அதற்காக பூவுலகில் இறங்கிய போது, அன்பும் கருணையும் நிறைந்த உன்னிடம் ஒன்றும் அறியாத சிறுமியாக  முன் நின்றேன். எனக்குரிய ஆகாரத்தை படைத்து விட்டு சிறிது நேரம் கழித்து வா! எனக் கூறினாள்.

அசரீரி கேட்ட தலைவனாரும் படையல் இட்டுச் சென்றார். அதை ஏற்ற அம்பிகை நேரில் காட்சியளித்தாள். இங்கேயே எனக்கு ஒரு கோயில் கட்டி வழிபடு. வேண்டும் வரம் அளிப்பேன். ஒரு கிணறு தோண்டு. அதன் நீர் இளநீராய் இனிக்கும் என்று கூறி மறைந்தாள்.

அதன்படி வண்டிமறிச்சி அம்மனுக்கு ஒரு கோயில் எழுப்பப்பட்டது. செங்கோட்டை நகரில் புகழ்சேர்க்கும் அம்மனாக அம்பிகை இன்று எழுந்தருளி அருள் பாலிக்கிறாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.