செங்கோட்டைக் கல்! – ஒவ்வோர் ஊருக்கும் ஏதோ ஒன்று பிரபலமாக இருக்கும். ஊரின் பெயரில் ஒரு பொருள்! அது செங்கோட்டைக்கு தோசைக் கல்!
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே..என்று பாடினான் பாரதி! உருக்கி, அதனை எத்தனை எத்தனை வடிவங்களில் அடி கொடுத்து இப்படி தயார் செய்கிறார்கள்…! அடிக்கும் சுத்தியலும், எரியும் உலையும், செக்கச் சிவந்த உருக்கிய இரும்புக் குழம்பும், சுரீர் என காயும் நீரும்… எத்தனை வருடங்களாகப் பார்த்து வருகிறேன்!
சுத்தியலை எடுத்து ஓங்கி அடிக்க மூன்று புறங்களிலும் நின்று அதனைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கே… உடல் வலு எப்படி இருந்தாக வேண்டும்!?
இங்கே இரும்புப் பட்டறைகள் அதிகம்! விதவிதமான இரும்பு சாதனங்கள்… மரக் கதவுக்கு மாட்டும் சட்டம், கீல், கொண்டி… மாட்டு வண்டிக்கான அச்சு, ஆரம், அச்சாணி… வீட்டு உபயோகத்துக்கான நாழி, உழக்கு, தோசைக் கல், தேங்காய் உரிப்பான் என்று… இப்படிப் பலதும் செய்தாலும்… செங்கோட்டைக்கு என்று அமைந்துவிட்ட ஸ்பெஷல் ஐட்டம் – தோசைக்கல்தான்!
நடுவில் கனமாக, ஓரங்களில் லேசாக என்று கல், குழி தோசைக் கல், கைப்பிடியுடன் கூடிய கல் என்று வித விதமாய்! எடைக் கணக்கில்தான் விலை! ஒன்றரை கிலோவில் இருந்து பார்த்தால் நன்றாக இருக்கும். நீண்டநாட்கள் வரும் வகையில்! இன்றும் எங்கள் வீட்டில் உள்ள சேவை நாழி, முக்காலி நாழி எந்த சேதமும் இல்லாமல் நான் பார்த்திருக்க 25 வருடங்களுக்கும் மேல் நன்றாக உள்ளது. தோசைக் கல் ஐந்தாறு வருடங்கள் நன்றாக இருக்கும்.
சில வருடங்களுக்கு முன்னர் வரை, என்னிடம் தோசைக்கல் வாங்கிவரச் சொல்லிக் கேட்பவர்களுக்கு இங்கிருந்து வாங்கிக் கொண்டு போய், திருச்சி, சென்னையில் உள்ள உறவுகள்/நட்புகளுக்கு கொடுத்திருக்கிறேன்.
குற்றாலம் சுற்றுலா, சபரிமலை பயணம் என்று இங்கே வருபவர்கள், அப்படியே செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் போது, செங்கோட்டை காவல் நிலையம் கடந்து சற்று தொலைவில் உள்ள இந்தக் கடைகளில் (பட்டறைகளில்) வாங்கிச் செல்லலாம்! சில நாட்கள் கால அவகாசம் கொடுத்து ஆர்டர் செய்து வாங்கிச் செல்பவர்களும் உண்டு.
முன்னர் இரும்பு வார்ப்பு இயந்திரங்கள் வராத காலத்தில் சுமார் இருநூறு வருடங்களுக்கும் மேலாக இந்தத் தொழில் இங்கே கொடி கட்டிப் பறந்தது. கேரளத்தில் இருந்து வரும் மக்கள், மரக்கரி, இரும்பு சாதனங்கள், தோசைக்கல், அரிவாள், அரிவாள்மனை, மண்வெட்டி, கடப்பாரை என பலவும் இங்கே உள்ள பட்டறைகளில் இருந்து வாங்கிச் சென்று பயன்படுத்தியுள்ளனர்.
இப்போது வார்ப்பு இயந்திரங்களில் அடித்து விரைவில் தயாரித்து விடுகிறார்கள். இருந்த போதும், இங்கே கைகளில் அடித்து அளவு பார்த்து சின்னச் சின்னதாய் செதுக்கி வாங்கிச் செல்லும் தோசைக்கல்லுக்கு நிகர் வேறு இல்லைதான்!





