கரூர்: தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழாவினை முன்னிட்டு பெருமாள் கருட வாகன புறப்பாடு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது! பெருமாளுக்கு சிறப்பு மஹா தீபாராதனை நடைபெற்றது.
தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலையில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலின் புரட்டாசி திருவிழா வரும் 13 ம் தேதி துவஜாரோஹணம் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
இந்நிலையில் நேற்று (10-09-18) இரவு பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக கருட வாகனத்தில் உத்ஸவர் வடிவில் அலங்கரிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி, பல்வேறு வண்ண மலர்களாலும், பல வகை நகைகளாலும், அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் தோளில் தாங்கியவாறு, கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்னர், கோயிலுக்கு வந்த உத்ஸவர் ஸ்ரீ அருள்மிகு வெங்கட்ரமண சுவாமிக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாள் அருள் பெற்றனர்.
வரும் 13 ம் தேதி துவஜாரோஹணம், 15 ஆம் தேதி வெள்ளி அனுமந்த வாகனம், 16 ஆம் தேதி வெள்ளி கருட சேவை, 19 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம், 21 ஆம் தேதி திருத்தேர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.




