spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்அப்பய்ய தீட்சிதர் காட்டிய ஆனந்த ஸாகரஸ்தவத்தின் அழகு!

அப்பய்ய தீட்சிதர் காட்டிய ஆனந்த ஸாகரஸ்தவத்தின் அழகு!

madurai meenakshi

” Goddess, you are what you are. Who can ever know, not to say describe, you as such ? I am such an ignoramus as does not know himself. Mother, i am ashamed to dedicate this poem to you. “

” தேவியே ! நீ எவ்விதமானவளோ அவ்விதமானவள். நீ இவ்விதமானவள், இப்படிப்பட்டவள் என அறிவதற்கும் சொல்வதற்கும் யார் சக்தியுடையவன் ? உன் ஸ்வரூபம் சொல்லுக்கும் அறிவுக்கும் எட்டாதது. என் ஸ்வரூபமே இன்னதென்றறியா அறிவீனனான நான் உன்னை அறிந்தவன் போல் ஸ்தோத்திரம் செய்து அந்த ஸ்தோத்திரத்தை உன்னிடத்திலேயே அர்ப்பணம் செய்வதற்கு வெட்கப்படுகிறேன். ” 

இத்துணை அடக்கமாக, தம்மையே தாழ்த்திக்கொண்டு தேவியிடம் இப்படி புலம்புவது யாரென்று தெரிகிறதா ? எவரின் கடாக்ஷங்களுக்கு சரஸ்வதி தேவியானவள் கூலியில்லா ஊழியக்காரி ஆகிறாளோ, அப்பேர்ப்பட்ட ஞான சமுத்திரமாகியவரும், வைராக்ய சதகம், சிவதத்வ ரஹஸ்யம், நள சரித்திரம், முகுந்த விலாசம், ரகு வீரஸ்தவம், கங்காவதரணம் ஆகிய அரும் பெரும் கிரந்தங்களை இயற்றியவருமான ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆவார். 

ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் அவர்கள் தன் மனோ நிலமையை தானே அறிந்துகொள்வதற்காக, ஊமத்தஞ்சாரைப் பருகிமயக்கத்தை அடைந்தார். அந்த நிலையில் தாம் பிதற்றுவதற்றை எழுதி வைக்கும்படி தம் சீடர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அவர் உன்மத்த நிலையில் பிதற்றியதே ” உன்மத்த பஞ்சாசத் என்ற ஆத்மார்ப்பண ஸ்துதி ” . இதில் தன்னையே ஈசுவரனுக்கு அர்ப்பணம் செய்து கொள்கிறார். இச்செய்தியை மையமாகக் கொண்ட ஓர் கட்டுரையை நாம் சில தினங்கள் முன்னர் வரைந்திருந்தோம். அத்தகைய மகானின் பரம்பரை வழி வந்தவரே நாம் மேற்கூறிய ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரே ஆவார். 

ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் அவர்கள் தம்மையே ஈசுவரனுக்கு அர்ப்பணம் செய்து கொள்கிறார். அவர் வழி வந்த நீலகண்ட தீக்ஷிதரோ ஸ்ரீ மஹாதேவியிடம் தம்மை ஒப்புவித்துவிடுகிறார். அதன் பின்ணனியில் உருவானதே ஸ்ரீ ஆனந்தஸாகரஸ்தவம் எனும் மதுரமான காவியம். அந்த ஸாகரத்தின் ஓர் துளியே நாம் ஆரம்பத்தில் பார்த்த வரிகள். இனி ஸ்ரீ ஆனந்தஸாகரஸ்தவம் உருவான வரலாற்று நிகழ்வைப் பார்ப்போம்.

மதுரை ஸ்ரீ மீனாட்சி கோவில் திருப்பணி, புதுமண்டப நிர்மாணம் ஆகியன 1626 இல் துவங்கப்பட்டு 1633 வரை நடந்து முடிவுபெற்றது. இந்த வேலையை நிறைவேற்றியவன் சிற்பசாஸ்த்திர நிபுணரான ” சுமந்திர மூர்த்தி ஆச்சாரி ” என்பவர்.

இவர் நிர்மாணத்தின் ஆரம்பத்தில் *** ஏகபாதமூர்த்தியின் சிலையை செதுக்கிய ஒரு கல் தூணை ஸ்தாபிக்க வேலை முடித்து ஒரு சுபமுகூர்த்தம் பார்த்து வைத்திருந்தார். ( நீலகண்ட தீக்ஷிதரின் அறிவுறுத்தலின் பேரிலேயே ஏகபாதமூர்த்தியின் சிற்பம் அங்கு நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிகிறது. அதேபோல் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரருக்கு ஆண்டுதோறும் நடக்கும் உத்ஸவாதிகளும் நீலகண்ட தீக்ஷிதரால், ஸ்ரீ ஹாலாஸ்ய மஹாத்தை அனுசரித்து ஆரம்பிக்கப்பட்டது என்றும் அறியப்படுகிறது. ) அந்த மூர்த்தி பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனிடம் இருந்து உண்டானார்கள் என்று காண்பிப்பதால், அதை விரும்பாத வைஷ்ணவ பண்டிதர்கள் அக்காலை நாட்டக்கூடாதென்று ஆட்சேபனை செய்து அரசனிடம் மனு கொடுத்தனர்.

அரசனும் நடுநிலை வகித்து ஏகபாதமூர்த்தியின் தத்துவத்தைப் பற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டான். சைவர்களும் வைஷ்ணவர்களும் தங்கள் தங்கள் பிரமாண கிரந்தங்களைத் திரட்டிக் கொண்டு விவாதத்திற்கு தயாரானார்கள். ஆறு மாத காலம் இந்த விவாதம் நடந்தது. சைவர்களுக்கு அய்யா தீக்ஷிதர் எனும் நீலகண்ட தீக்ஷிதரும் வைஷ்ணவர்கள் சார்பாக அப்பா தீக்ஷிதரும் தலைமை செய்தனர். விவாதத்தின் இறுதியில் சிவோத்கர்ஷம் ஸ்தாபிக்கப்பட்டு, ஏகபாதமூர்த்தியின் ஸ்தம்பமும் நாட்டப்பட்டது. இன்றைக்கும் புதுமண்டபத்தின் வாயிலில் அந்த ஸ்தம்பத்தைப் பார்க்கலாம். புதுமண்ட நிர்மாணம் நடந்து வந்தது. புது மண்டபத்தில் நடுவரிசை தூண்களில் மதுரை நாயக்கர்களின் சிலைகள் அமைக்கப்பட்டன. அவைகளில் ஒரு தூணில் தம் ஏழு பத்தினிகளுடன் திருமலை நாயக்கர் அமைக்கப்பட்டார்.

கல்தச்சன் அரசனின் மனைவியருள் மூத்தவளான பட்டத்து அரசியின் சிலையை உருப்படுத்திக் கொண்டிருந்தான். அவ்வுருவத்தின் இடது துடையில் சில்லுப்பெயர்ந்து விட்டது. சிலை பின்னமாகிவிட்டது எனக் கருதி, சிற்பி வேறு சிலை செய்ய முடிவு செய்தான். அப்போது நீலகண்ட தீக்ஷிதரும் அங்கு வேலைகளை மேற்பார்வையிடுவதற்காக வந்திருந்தார்.

சிற்பியின் முகம் வாடியிருப்பதைக் கவனித்தவர் அவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். அவன் தான் எவ்வளவு கவனமாகச் செதுக்கியும் சிலைக்கு பின்னம் ஏற்படுவதையும் அதனால் தான் வேறு சிலை செய்ய முற்பட்டதையும் சொன்னான். தீக்ஷிதர் அவர்கள் சற்று யோசித்துவிட்டு, ” அப்பா ! நீ இனி எவ்வளவு சிலைகள் அடித்தாலும் இப்படியே நேரும், ஏனெனில் இதில் கடவுளின் அருள் இருக்கிறது.

உன் பக்தி மிகுதிக்கும், உன் அந்தரங்க சுத்தத்திற்கும், பிரசன்னமாகி ஈசுவரன் உனக்குத்தெரியாத அம்சங்களைக்கூட உள்ளபடி இருக்கச் செய்து உன் சிற்பத்தை சிறப்பிக்க நினைக்கிறார் போலும். உத்தமஸ்த்ரீ லட்சணம் பொருந்திய மஹாராணிக்கு சாமுத்ரிக லட்சணத்தின் படி அவ்விடத்தில் ஓர் மச்சம் இருக்க வேண்டும். ஆகையால் நீ அப்படியே வைத்துவிடு ” என்றார். இன்றைக்கும் அச்சிலையில் உள்ள பின்னத்தை பார்க்கலாம்.

நாயக்கரும் பத்தினிகளும் உள்ள தூண் வேலைகள் முடிந்ததும் அதைப் பார்வையிட அரசர் அங்கு வந்தார். மூத்தராணியின் சிலையில் உள்ள பின்னத்தைக் கண்ட அரசர் அதன் விவரம் கேட்க சிற்பியும் நடந்தன அனைத்தையும் விவரமாக கூறினான். தீஷிதர் அவர்கள் மஹாராணிக்கு சாமுத்ரிக லட்சணத்தின் படி அவ்விடத்தில் ஓர் மச்சம் இருக்க வேண்டும் என்று கூறி அதனாலேயே பின்னம் ஏற்பட்டது என்றும் அதில் தோஷமேதுமில்லை என்று கூறி சமாதானம் செய்ததையும் கூறினான்.

இதைக் கேட்ட அரசனுக்கு கண்கள் கலங்கியது, தலை கிருகிருத்தது, மீசை துடித்தது. ஏதும் பேசாமல் அங்கிருந்து விலகி அரண்மனை அடைந்த அரசன் யாரோடும் ஏதும் பேசாமல் மனம் குழம்பியிருந்தான், இரவுநேரத்தில் மிக்க யோசனையில் ஆழ்ந்தான். மறுநாள் காலை ஓர் முடிவெடுத்தவனாய் அரண்மனை அதிகாரி ஒருவனை அழைத்து, ” ஸ்ரீ தீக்ஷிதர் அவர்களை உடனே பார்க்கவேண்டும் என்று கூறி உடனே அழைத்து வா ” என உத்தரவிட்டான்.

தீக்ஷிதர் அவர்கள் பூசையில் இருந்த சமயம் அரசனின் உத்தரவு அவருக்கு அறிவிக்கப்பட்டது. இவ்விதம் அழைப்பது அவருக்கு புதிது என்பதால் அவர் அரசனின் வரைமுறை மாறியதற்கு என்னகாரணம் என்று ஊகித்துப்பார்த்தார். தேவியின் அருளால் ஞானசக்திபெற்ற அவருக்கு, அரசன் மூடத்தனத்தால் தன்பேரில் விபரீத எண்ணம் கொண்டு கடும்கோபத்துடன் தம்மை அழைத்திருப்பது உணர்ந்தது. மனம் வருந்தினார்.

ஐஸ்வர்யவான்களின் பேதமை இதுவே என்று மனம் நொந்து வெறுத்தார். இந்த நிலையில் அரசனை பார்ப்பது உகந்தது அல்ல என்பதை உணர்ந்த தீக்ஷிதர், அம்பிகையிடம் தம் கவலையை தெரிவித்துவிட்டு, கற்பூர ஆராத்தி செய்து அந்தக் கற்பூரத் தீயினாலேயே தம் இரு கண்களையும் அவித்துக் கொண்டார். ” அரசன் எமக்கு விதிக்க எண்ணியிருக்கும் தண்டனையை நாமே எமக்கு விதித்துக் கொண்டதாய் சொல்லிவிடு ” என்று கூறி வந்தவனுக்கு விடைகொடுத்தனுப்பினார்.

கண்கள் அவிந்து பார்வையற்ற நிலையில் பரமேசுவரனின் பத்தினியான பரமேசுவரி தாய் மீனாட்சியின் திவ்யமங்கள சொரூபத்தை பாதம் முதல் சிரசு வரை தியானம் செய்துகொண்டு ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்தார் தீக்ஷிதர். இவர் ஸ்தோத்திரம் செய்யும்போது பாதம் முதல் சிரசு வரை தேவியின் அந்தந்த அவயவங்கள் கிரமமாக இவருக்கு பிரத்யக்சமாயின. 

எந்தக் கண்ணினால் உன் சரணகமலத்தை நான் பார்ப்பேன் ? என்று உருகினார். ஸ்தோத்திரத்தின் முடிவில் இவர் பரிபூரணமாக கண் ஒளியைப்பெற்றார். இந்த ஸ்தோத்திரமே நாம் ஆரம்பத்தில் பார்த்த ஸ்ரீ ஆனந்தஸாகரஸ்தவம் ஆகும். ஸ்ரீ தீக்ஷிதர் அவர்களுக்கு கண் கொடுத்த பரதேவதை இதில் பிரசன்னமாகிறாள்.

அரசன், தாம் செய்த தவறால் தீக்ஷிதர் கண்களை இழந்ததையும் பின் தேவியின் அருளால் அவற்றை அவர் மீளப்பெற்றதையும் சாரர்கள் மூலம் அறிந்துகொண்டு மிகவும் பச்சாத்தாபமடைந்து ஸ்ரீ தீக்ஷிதர் அவர்களின் சன்னிதிக்கு ஓடி வந்தான். அவர் பாதங்களை அடைந்து மன்னிக்குமாறு வேண்டினான்.

ஸ்ரீ தீக்ஷிதர் அவர்கள் அரசனுக்கு சமாதானம் சொல்லிவிட்டு அரச சேவையை விடுத்து, மதுரையை விட்டு அகன்று தாமிரபரணி அருகாமையில் உள்ள பாலாமடை என்ற கிராமத்தில் சிலகாலம் வசித்து பின்னர் துறவறம் பூண்டு, அங்கேயே சித்தியடைந்தார் என்று அறியப்படுகிறது. பாலாமடை கிராமத்திற்கு இதன் காரணமாகவே ” நீலகண்ட சமுத்திரம் ” எனும் பெயரும் உண்டானது. 

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் ஆனந்தஸாகர ஸ்தவத்தில் தேவியிடம் தன்னை ஒப்புவித்து விடுகிறார். இவர் புத்திபூர்வமாக ஆத்மார்ப்பணம் செய்வதால், சாஸ்த்திரங்களில் கூறியுள்ள மோட்ச சாதனங்களை ஆராய்ச்சி செய்து எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் என்று நிரூபித்து, சரணாகதியே கதி என்று முடிவு செய்து அதையே அனுஷ்டிக்கிறார்.

இந்த உத்தமர் சாஸ்த்திர ஞானத்தையும் கரைகடந்து, லௌகிகப் பெருமையின் உன்னத சிகரத்தையும் அடைந்து, அனுபவித்து, மனம்தெளியாமல் கவிதையில் ஆச்வாஸத்தையும், தேவியிடம் சரணாகதியில் க்ருதக்ருத்யதையையும் முடிவான தத்துவங்களாகக் கண்டுகொண்டார் என்பது நம்போன்ற ஜீவராசிகள் இவருடைய வரலாற்றிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய பொருள்.

இவருடைய சூடரான ஸ்ரீராமபத்ர தீக்ஷிதர், அவரை அம்பிகையின் அவதாரமேன்றே சொல்லுகிறார். அதேபோல் அவருடைய ஸ்ரீ ஆனந்தஸாகரஸ்தவம் பற்றிக் குறிப்பிடும்போது, ” இதற்கும் தேவி பிரத்யக்ஷமாகவில்லை என்றால், தேவியே இல்லையென்று சொல்லிவிடலாம் ” என்று கூறுவர். இக்கவிதையின் முற்பாதியில் கவி, தான் ஆயுள்முழுவதும் கற்றதும் ஆசரித்ததும் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லை என்று கூறிவிட்டு, தனக்கு தேவியிடம் சரணாகதியே கதி என்று உணர்த்துகிறார்.

துக்கத்தையும், அழுகையையும், ஆடம்பரத்தையும், அஹம்பாவத்தையும், சந்தேகத்தையும் கடந்து ஆனந்த சாகரத்தில் மூழ்கி மிதந்து விளையாடுகிறது இந்த பரிபூர்ண ஆத்மா என்பதை இக்கவிதையின் ஆனந்த ஸாகரஸ்தவம் என்ற அழகிய பெயரும், அதனுள் துலங்கும் ரத்தினங்கள் போன்ற தெய்வீக ஒளிவீசும் கருத்துக்களும் நன்கு விளக்குகின்றன. யாம் பலமுறை கூறியுள்ளதையே இங்கும் கூற இயம்புகிறோம் அது ” திருநாம பாராயணம் ” என்பதே.

இக்காலத்தில் நமக்கு இறைவனின் அருளைப் பெற இருக்கும் மிகச்சிறந்த மற்றும் எளிய வழி யாதெனில் அது இறைவனின் நாமத்தை பாராயணம் செய்வதும் அவன் புகழைப் பாடுவதுமே. நமக்காகத்தான் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் போன்ற உத்தம சீலர்கள் பல ஸ்தோத்திரங்களை படைத்து காலத்தின் கையில் கொடுத்துச் சென்றுள்ளனர் போலும். நாம் புதிதாக எதையும் படைக்கவேண்டாம் முடிந்தவரை இருக்கும் செல்வத்தை பயண்படுத்தி நாம் நலம் பெறுவதோடு நம் அடுத்த தலைமுறைக்கும் அதை எடுத்துச் செல்லலாமே !

ஸ்ரீ ஆனந்த ஸாகரஸ்தவம், ஸ்ரீ காமகோடி க்ரந்தாவளி – 12, ஸ்ரீ ய. மஹாலிங்க சாஸ்திரிகள், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், கும்பகோணம். [ 05 / 1944 ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe