பாரதியைப் படம் பிடித்த அன்பர்… கவிமாமணி தேவநாராயணன்!

கவிமாமணி தேவநாராயணன் (2007ல்) மயிலாப்பூர் சீனிவாச சாஸ்திரி அரங்கில் பாரதியின் பாடலைப் பாடியது...

மயிலாப்பூர் இல்ல வாசமும், மஞ்சரி இதழ் சுவாசமும் என் வாழ்வில் இனிமை கூட்டச் செய்திருந்தது உண்மை! கையிருப்புக் குறைவு ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஆனால் மனம் நிறைந்திருந்தது. 
அப்போதெல்லாம் மாலை வேளைகளில் மயிலாப்பூரின் சபாக்கள், அரங்குகளில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வமுடன் காத்திருப்பேன். பல நிகழ்ச்சிகளில் மேடையை நானும் அலங்கரித்ததுண்டு. 

அப்படி ஒரு நிகழ்ச்சியில்…. 
மயிலாப்பூர் சீனிவாச சாஸ்திரி ஹாலில்தான் இந்த நிகழ்ச்சி நடந்தது. என் கையில் டிஜிட்டல் கேமரா இருந்தது. வெறுமனே ‘க்ளிக்’கிக் கொண்டிருந்தேன். அப்போது தேவநாராயணன் சார் பேச வந்தார். வழக்கம்போல் அவரையும் க்ளிக்கிக் கொண்டேன். அதற்காக கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன். 

எனக்கு கவிமாமணி தேவநாராயணன் சார் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் உண்டு. மயிலாப்பூரில் அவரது இல்லத்துக்கு பல முறை சென்றிருக்கிறேன். தேச பக்தி நிறைந்தவர். அவரது சினிமா துறை, நாடகம் உள்பட பல அனுபவங்களைச் சொல்லியிருக்கிறார். 
தேவநாராயணன் சார், ஏவிஎம்மின் `ராம ராஜ்யம்’ படத்தின் மூலம் கதை-வசன கர்த்தா, பாடல் ஆசிரியர், பாடகர், டப்பிங் கலைஞர் என பட உலகில் தடம் பதித்தவர். ராமானந்த் சாகரின் ராமாயணம், ஸ்ரீகிருஷ்ணா தொடர்களுக்கு தமிழில் வசனம் எழுதியுள்ளார். புராணப் படங்களுக்கு வசனம் எழுதுவதில் சமர்த்தர்.

பாரதி கலைக் கழகத்தின் தீவிர உறுப்பினர். அதன் ‘கவிமாமணி’ இவர் பெயரை அலங்கரித்தது. மயிலாப்பூரைச் சுற்றி நடக்கும் அந்த அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தேவநாராயணன் சாரையும் பார்த்து நலம் விசாரித்து ஓரிரு வார்த்தை பேசுவது எனக்கு வழக்கமாக இருந்தது.

2001-ல், விஜய பாரதம் தீபாவளி மலர் கட்டுரை தொடர்பாகத்தான் முதல் முதலில் அவரது வீட்டுக்குச் சென்றேன். சமுதாயத்தை சீர்திருத்திய செம்மல் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை அளித்தார். பாரதி, ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் என சிலரின் வாழ்க்கையைக் குறிப்பிட்டு, இவரது அனுபவத்தை அதில் சொல்லியிருந்தார்.

அப்போது அவரிடம் ராமாயண, மகாபாரத டிவி தொடர்களின் வசனங்கள் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தேன். ராமானந்த் சாகரின் அந்தத் தொடர் வந்தபோது, துக்ளக் இதழில் வசனங்கள் வெளியானது. மாணவப் பருவத்தில் இருந்த நானும் என் சகோதரியும் டி.வி. வசனங்கள் உச்சரிக்கப்படும் போது, ஹிந்தி வசனங்களுக்கு ஏற்ப தமிழில் அவற்றைச் சொல்லி விளையாடுவோம். இப்படியாக சில பல ஹிந்தி சொற்கள் எங்களிடம் புழங்கின.

மொழிபெயர்ப்புக்கான துவக்கம் அங்கிருந்தே தொடங்கியது என இப்போது உணர்கிறேன். ஆனால், அது ஒருவழி மொழிபெயர்ப்புக் களமாக அமைந்துவிட்டது. இருவழியாக அமைத்துக் கொள்ளத் தவறிவிட்டேன். 

அன்றைய நிகழ்ச்சியில் திடீரென தேவநாராயணன் சார், பாரதியின் ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார். ஏற்கெனவே இவர் சினிமாவில் பாடியதுதான். உடனே நானும் டிஜிட்டல் கேமராவின் ஃபோட்டோ மோடில் இருந்து வீடியோ மோடுக்கு மாற்றி, பாடலை பதிவு செய்து கொண்டேன். இந்த ஃபைல் ப்ராபர்டீஸில் இது பதிவு செய்த நாள் Sunday, September 09, 2007, 8:55:32 PM என்று உள்ளது. 

அவர் குரலில் இந்தப் பாடலைக் கேளுங்கள்…. உருக்கமான அழகு ரசனைக் கவிதை. நமக்கு முன்னோடி பாரதி. எப்படியொரு ரசனை இருந்தால் இந்தக் கவிதை முளைத்திருக்கும்..!

மங்கியதோர் நிலவினிலே
கனவிலிது கண்டேன்
வயது பதினாறு இருக்கும்
இளவயது மங்கை

பொங்கி வரும் பெரும்நிலவு
போன்ற ஒளி முகம்
புன்னகையில் புது நிலவு 
போற்ற வரும் தோற்றம்

தங்க மணி மின்போலும்
வடிவத்தாள் வந்து
தூங்காதே…. 
எழுந்து என்னை பார் என்று சொன்னாள்
அங்கதனில் கண் விழித்தேன்
அடடா….ஓ அடடா
அழகென்னும் தெய்வம் தான்
அதுவென்றே அறிந்தேன்

மங்கியதோர் நிலவினிலே..ஏஏ…ஏஏஏ
கனவிலிது கண்டேன்
வயது பதினாறு இருக்கும்
இளவயது மங்கை
ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்..

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...