spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்நாளை வைகுண்ட ஏகாதசி... பக்தர் வெள்ளத்தில் ஸ்ரீரங்கம்!

நாளை வைகுண்ட ஏகாதசி… பக்தர் வெள்ளத்தில் ஸ்ரீரங்கம்!

- Advertisement -

வைணவ சமயத்தை உரமிட்டு பயிராக வளர்த்து காத்த ஆழ்வார்களில் கடைக்குட்டியான திருமங்கையாழ்வார் காலத்திலேயே, ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித் திருவிழாவை சிறப்பாக நடத்திக் காட்டினார்.

ஆழ்வார்களில் தலையாயவர் என்று போற்றப்படும் ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாடல்களை இசையுடன் ஓதி பத்து நாட்கள் விழா எடுக்கச் செய்தனர். அதற்காக திருமங்கையாழ்வார் நெல்லைச் சீமையில் உள்ள தாமிரபரணிக் கரையில் உள்ள ஆழ்வார்திருநகரியில் கோயில் கொண்டுள்ள நம்மாழ்வார் திருமேனியை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளச் செய்து மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடினார்.

பின்னாளில் ஆசார்யர்கள் ஸ்ரீரங்கத்தில் அந்த விழாவை மேலும் விரிவாக்கி, நம்மாழ்வாருக்கு மட்டுமின்றி, இந்த விழாவை சிறப்பாக நடத்தி வந்த திருமங்கையாழ்வாரின் திருமொழிக்கும் சேர்த்து கௌரவத்தையும் மதிப்பையும் கொடுக்கும் வகையில் திருமொழித் திருநாளாகவும் கொண்டாடத் தலைப்பட்டனர். ஸ்ரீராமானுஜர் காலத்துக்கு முன்பே நாதமுனிகளின் காலத்தில் இயல் இசையுடன் கூடிய அரையர் சேவையாக பிரபந்தப் பாசுரங்கள் பரவத் தொடங்கின. 

இப்படி சுமார் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக, வழிவழியாக, இந்த வைகுண்ட ஏகாதசித் திருவிழாவின்போது ஆழ்வார்களின்  தண்டமிழ்ப் பாசுரங்களை ‘அரையர் சேவை’யாக நடத்தி வந்தனர் ஆசார்யர்கள் . ‘அரையர்’ என்ற சொல் முத்தமிழ் வித்தகர்களான அறிஞர்களைக் குறிக்கும். ‘அத்யயன உத்ஸவம்’ என்பது ‘முத்தமிழ் விழா’ என்றே சொல்லலாம்!

இப்போது – திருநெடுந்தாண்டகம் தொடங்கி பத்து நாட்கள் பகல்பத்து எனவும், நம்மாழ்வாரின் திருவாய்மொழித் திருநாள் இராப் பத்து எனவும் கொண்டாடப்படுகிறது.

பகல் பத்துக்கும் இராப் பத்துக்கும் இடையே உள்ள நாளே வைகுண்ட ஏகாதசியாக போற்றப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள் திருவாய்மொழி ஓதி இறுதி நாளில் நம்மாழ்வார் பரமபதம் எய்தும் காட்சி நடைபெறும்.

ஆக, திருவரங்கத்தில் திவ்வியப் பிரபந்த அத்யயனத் திருவிழாவின் நடுநாயக நாளாக அமைவதே வைகுண்ட ஏகாதசி! தாம் வைகுந்தம் புகுந்த செய்தியை ‘சூழ்விசும்பணி முகில்’ என்று தொடங்கும் பத்து பாசுரங்கள் மூலம்  வெகு அழகாக  விளக்குகிறார் ஸ்வாமி நம்மாழ்வார்.

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்த தமர் என்று எமதிடம் புகுதென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

என்று ‘திருவாய்மொழி’ புகல்கிறார். அப்படி வைகுந்தம் புகுவதற்கு  அடிப்படையான ஏகாதசி நாளை, வைகுந்த ஏகாதசியாகக் கொண்டாடி, அரங்கனின் அருளைப் பெறுகிறோம்!

எத்தனையோ தலங்களில் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் நடந்தாலும், திருவரங்கத்தைப் போல் வராது. வைகுந்த ஏகாதசிக்கான முதல் தலமாக ஸ்ரீரங்கமே போற்றப் படுகிறது. ஆழ்வார்களும் ஆசார்யர்களும் அமர்ந்து ஆழ்ந்து அனுபவித்த அரங்கன் சேவை இங்கே! 

அதனால் தான் காவிரிககரை வாழ் அனைத்து பக்த ஜனங்களும் பரிஜனங்களுமாய் அரங்கன் ஆலயத்தை முற்றுகையிட்டு விடுகின்றனர். வைகுந்த இருப்பை எமக்கு வழங்கு என்று அந்த அரங்கனை முற்றுகையிடும் அழகுக் காட்சியை இந்த வைகுண்ட ஏகாதசி நன்னாளில் நாம் பார்க்கிறோம். வயல் வேலை செய்து களைத்துப் போன விவசாயிக்கும், கூலிக்கு வேலை செய்து வெறுத்துப் போன ஏழைக்கும் ஏந்தலாய் அமைந்து அருகே அழைத்து அரவணைக்கும் அமுதனாய்த் திகழ்பவன் அரங்கன் என்பதால் திருச்சி சுற்றுப்புற பகுதி மக்களெல்லாம் உயிரினும் மேலான அரங்கனை மொய்ப்பது அதிசயம் இல்லை!

ஆயிரங்கால் மண்டபத்துக்கு எதிரேயும் கோதண்ட ராமர் சன்னிதிக்க்கு எதிரேயுள்ள மணல் வெளியிலும் ஆயிரமாயிரம் கிராமத்து வெள்ளந்தி மக்கள் காலார அமர்ந்து அரங்கன் கதை பேசும் அழகைக் கண்ட கண்களுக்கு, இன்றைய காக்கிச் சட்டைக் காவலர்களின் கெடுபிடிகளையும் கூட்டத்தையும் காணும் போது மனம் வலிக்கத்தான் செய்கிறது!

காலமாற்றம் இன்றைய அரங்கனை காசுள்ளவர்களுக்கான காட்சிப் பொருளாக மாற்றியிருப்பினும், மைல்கள் பல கடந்து தொலைவில் இருந்தெல்லாம் வந்து உள்ளன்புடன் அரங்கனை அணுகும் உழைப்பாள மக்களுக்கு உறவாடும் உன்னதக் கடவுளாய் அவன் திகழ்கிறான்!

அவன் மோஹினியாய் நம்மை மோகத்தில் ஆழ்த்தி தன்னருகில் நம்மை அழைத்துக் கொள்கிறான். அவன் அழகில் மயங்கி நாமும் அவனுடனேயே அவனது வைகுந்தம் புகுகின்றோம். பரமபதத்தின் வாசல் கதவு திறந்து பக்தனாய் அந்தப் பரமன் பின்னே செல்லத் தூண்டும் மோஹினி அலங்கார சேவை இன்று! 

அந்த மோஹினி அலங்காரத்தின் உயர் ரக படத்தின் லிங்க்.. இங்கே! துல்லியமான தெள்ளிய படம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe