“இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை”

(பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பி
கொட்டையும், அஸ்ஸாமிலிருந்து வரவழைத்த
ஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி, அவற்றை ‘ஸ்வாமிஜி மஹராஜ்’ காலை எழுந்தவுடன் உப்யோகித்துக் கொண்டால் தமக்கு பரம பாக்கியம் என்று கூறினார்)
கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
காஞ்சிக்கும்,ஸ்ரீபெரும்பூதூருக்கும் இடையேயுள்ள
சந்தவேளுரில் அவர் முகாமிட்டிருந்த சமயம்.
பக்கத்து ஊர் மார்வாரி ஒருவர், கூடை கூடையாகவும் தட்டு தட்டாகவும் மடத்திற்கு வேண்டிய மளிகைச் சரக்குகள் அனைத்தும் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.
அங்கணம் போதாமல் பரப்பப்பட்டிருந்த அவற்றில்
எங்கோயிருந்த ஒரு தட்டைப் பெரியவாள் குறிப்பிட்டுக் காட்டி அருகே எடுத்துவரச் சொன்னார்.அதில் நன்கு பாக்கிங் செய்த பொட்டலங்கள் இருந்தன.
தெரிந்தே அந்த தட்டைக் கொண்டுவரச் சொன்னவர்
தெரியாதவர் போல, ‘அதில் என்ன இருக்கிறது’ என்று
மார்வாரி பக்தரைக் கேட்டார்.
பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பி
கொட்டையும், அஸ்ஸாமிலிருந்து வரவழைத்த
ஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி, அவற்றை ‘ஸ்வாமிஜி மஹராஜ்’ காலை எழுந்தவுடன் உபயோகித்துக் கொண்டால் தமக்கு பரம பாக்கியம் என்று கூறினார்.
“கிரஹசாரம்! இப்படிச் சொல்கிறானே”
என்று மடத்துச் சிப்பந்திகள் பேசிக் கொண்டனர்.
அன்புள்ளத்தையே நோக்கும் ஸ்ரீசரணரின் திரு முகத்தில் புன்னகை பொன் பூசியது.
“இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை” என்று குறும்பாகச் சொன்னார்.தம்மையே எகத்தாளம்
செய்து கொள்ளும் குறும்புதான்! ஆசாரத்தின் கடும்
காவலர் என்று நாம் அவரைக் கருதினாலும், அவரோ
தாம் அதில் முழு மார்க் வாங்கவில்லை என்றும்,
நாளுக்கு நாள் முந்தைய மார்க்கை விடக் குறைவாகவே வாங்கிக் கொண்டிருப்பதகாவும்தான் சொல்லிக் கொண்டார்.அதனால்தான் ‘இன்னும்’ என்ற அந்த அர்த்தபுஷ்டியுள்ள பதப்பிரயோகம்.
“பெரியவா இதெல்லாம் சேத்துக்க மாட்டா,
எங்களையும்..” என்று சிப்பந்தியொருவர் மார்வாரியிடம் தொடங்க, பெரியவாள், சொடக்குப் போட்டு அவரை அடக்கி விட்டு “போய் பாராக்காரனையெல்லாம் அழைச்சுண்டு வா” என்று உத்தரவிட்டார்.
ஸ்ரீமடத்தில் ‘பாரா’ என்ற காவல் செய்யும்
தொழிலாளிகள் அழைத்து வரப்பட்டனர்.
“ஸேட்ஜி நெறய்யக் கொண்டு வந்திருக்கார்.
ஒங்களுக்கேதான் எடுத்துக்கோங்கோ!” என்றார்.
அவர்கள் பரம சந்தோஷமாக காப்பி, டீ
பொட்டலங்களை அள்ளிக் கொண்டு போனார்கள்.
“ஒன்னால் இவாளுக்கு ரொம்ப உபகாரம்” என்று
ஸ்ரீசரணர் ‘ஸேட்ஜி’யைப் பார்த்துச் சொன்னார்.
அதில் அங்கீகார முத்திரை பூர்ணமாகத் தொனித்தது.
குற்றம் செய்து விட்டோம் போலிருக்கிறதே என்று
இடையே துவண்டு போன ஸேட்ஜிக்குப்
பரம சந்தோஷம்.



