தவம் செய்த தவம் – டாக்டர். இரா. நாகசாமி
காஞ்சி மகாபெரியவர்கள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவா
மிகள் 1925 ஆம் ஆண்டு தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்களுக்கு அவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி தாக்ஷிணாத்ய கலாநிதி என்ற பட்டம் அளித்தார்கள். அப்போது ஐயரவர்கள் “அடியேனுக்கு திவ்ய பிரசாதங்களயும் ஸ்ரீமுகத்தையும் ஸன்மானங்களையும் அனுப்பி அனுக்ரஹித்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான கும்பகோணம் ஜகத்குரு ஸ்ரீமத் சங்கராசார்ய சுவாமிகளுடைய பரிபூர்ண கிருபையைச் சிந்தித்து “தாயும் தந்தையும் தவமும் அன்பினான் மேயவான் கடவுளும் பிறவும் வேறு நீ” (கம்பராமாயணம்-திருவவதாரம்) என்பதையே சொல்லித் துதித்து திசை நோக்கி அவர்களை வந்திக்கின்றேன்” என்று எழுதியுள்ளார். தூய தமிழ் உள்ளமான தமிழ்த் தாத்தாவின் மனதிலே பெரியவர்கள் “தாயாகவும் தந்தையாகவும் தவமாகவும் அன்பாகவும் கடவுளாகவும் அவற்றிற்கும் அப்பாற்பட்டவராகவும் காட்சியளித்திருக்கிறார். தமிழ்த் தாத்தாவுக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக பெரியவர்களை தரிசிக்கும் பேறுபெற்ற லக்ஷோபலக்ஷம் ஜனங்கள் மனத்திலும் எற்பட்டுள்ளதை அனைவரும் அறிவர்.
உணவும் வேண்டுமா?
இந்த நாட்டின் சுதந்திரத் தந்தை மகாத்மா காந்தியடிகள் 1927 ஆம் ஆண்டு பெரியவர்களைச் சந்திக்கும் பேறுபெற்றார்கள். இந்தச் சந்திப்பு பாலக்காட்டுக்கருகில் நல்லிச்சேரி என்ற ஊரில் ஏற்பட்டது. இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். மாலை 5:30 மணிக்கு மேலாகிவிட்டது. இரவு வந்துவிட்டால் காந்திஜி உணவு உட்கொள்ளமாட்டார். உடன் வந்திருந்த ராஜாஜி உள்ளே வந்து காந்திஜிக்கு அதை நினைவு படுத்தினார். இந்த மகானிடம் பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் வேறு உணவும் வேண்டுமோ என்று சொல்லிவிட்டு தமது உரையாடலில் மூழ்கினார் காந்திஜி.
தெய்வமே:
99 வயதைக் கடந்து இன்று உலகின் நன்மைக்காக காஞ்சியில் தவம் புரியும் இம்மகானை நாள்தோறும் எராளமான மக்கள் சென்று தரிசிக்கின்றார்கள். அவர் உருவைக் கண்டால் போதும். உச்சிமேல் கரம்கூப்பி உள்ளம் உருக “தெய்வமே” என்று வணங்குகிறார்கள். அவரது பார்வை அவர்களது பக்கம் திரும்பினால் போதும் புளகாங்கிதம் அடைகிறார்கள். தமது மிருதுவான கரத்ததைத் தூக்கி ஆசி வழங்கினால் நம் குடும்பத்தின் குறைகள் எல்லாம் அகன்றன என எண்ணுகிறார்கள். அவரைப் பார்கின்ற ஒவ்வொரு விநாடியும் தம்மைக் கடந்து மூவுலகையும் வியாபித்து நிற்பது போன்ற ஓர் உணர்ச்சியைப் பெறுகின்றனர். இது தானே கடவுள் நிலை என்பது! இந்த மகான் வாழ்கின்ற இந்நாளில் நாமும் வாழும் பேறு கிட்டியதே என மனம் மகிழ்கிறார்கள்.
கி.பி 13 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசு ஆட்டங்கண்டது. மூன்றாம் இராஜராஜ சோழனை கோப்பெருஞ்சிங்கன் என்பவன் சிறையில் அடைத்தான். கலகலத்துப் போன தமிழ்நாட்டு அரசை மீண்டும் நிலைநிறுத்த கர்நாடகத்திலிருந்து “ஹோய்சளர்” என்ற அரசர்கள் உதவிக்கு வந்தனர். சோழ அரசனை மீட்டு மீண்டும் அரியணையில் அமர்த்தினர். அப்போது அவர்களுடன் சில அந்தணர் குடும்பங்களும் தமிழகம் வந்தன. அவர்களை “ஹோய்சள கன்னட பிராமணர்” என்பர். தந்தை வழியில் நமது காஞ்சி பெரியவர்களும் அந்த ஹோய்சள கன்னட பிராமணர் வழியில் அவதரித்தவர்.
விஜயநகர பேரரசன் கிருஷ்ணதேவராயனுக்கு அதிகாரியாக இருந்து திருவண்ணாமலை பெரிய கோபுரத்தைக் கட்டியவன் செவ்வப்ப நாயக்கன். அவனுக்கும் அவன் மகன் அச்சுதப்ப நாயக்கனுக்கும் அவன் மகன் ரகுநாத நாயக்கனுக்கும் அமைச்சராகப் பணிபுரிந்த புகழ்வாய்ந்த கோவிந்த தீக்ஷிதர் என்பவர். கி.பி 16ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த அமைச்சராகத் திகழ்ந்த அவர்தான் தஞ்சையின் இன்றய செழுமைக்கு வழிவகுத்தவர். நீர்பாசனம், சீரான ஆட்சி, இயல் இசை நாடகம், அனைத்தும் மலரச் செயதவர். மிகச் சிறந்த அறிவாளி. அவரும் கர்நாடகத்திலிருந்து வந்தவர். ஹோய்சள கன்னட பிரமாணர் குலத்தைச் சேர்ந்தவர். நமது காஞ்சி பெரியவர்களின் தாய் அந்த கோவிந்த தீக்ஷிதர் வழியில் வந்தவர். தந்தை தாய் இருவழியும் நாட்டுக்கும் சமயத்துக்கும் அரும் தொண்டாற்றிய குடும்பங்கள். இந்த தொல்குடியில் 1894 ஆம் ஆண்டு அவதரித்து 1907 ஆம் ஆண்டு தமது 13 வது வயதிலையே துறவறம் மேற்கொண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதியாக தலைமை ஏற்றவர்கள் நமது பெரியவர்கள். அன்றிலிருந்து நாளது நாள்வரை தொடர்ந்து 85 ஆண்டுகளாக நாட்டின் நலனுக்கும் மக்களின் தெய்வீக வாழ்கைக்கும் பண்டைய பண்பாடு கலை இவைகளின் மறுமலர்ச்சிக்காகவும் தவம் இயற்றி வருகிறார்.
கல்வெட்டு ஈடுபாடு:
காஞ்சி பெரியவர்களுக்கு சமயம் தத்துவம் இசை கலை வரலாறு கல்வெட்டு என எல்லாத் துறைகளிலும் சிறந்த ஈடுபாடு உண்டு. 1924 ஆம் ஆண்டே சித்தன்னவாசல் குடுமியான்மலை நார்த்தாமலை முதலிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள ஓவியம் கல்வெட்டு இவற்றை ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள். 1962 ஆம் ஆண்டு பெரியவர்கள் இளையாத்தங்குடி என்ற இடத்தில் முதன் முதலில் வியாஸ பாரத ஆகம வித்வத் சதஸ் என்ற ஓர் சதஸ் ஆராய்ச்சி நடத்தினார்கள். உலகின் பல நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்களும் கலைஞர்களும் வந்து பங்கேற்றனர். பிரம்மாண்டமான பயனுள்ள கருத்தரங்கு அது. சாஸ்திரீயக் கலை முதல் கிராமியக் கலை வரை அனைத்தும் அதில் இடம் பெற்றன. அந்த சதஸில் ஒரு சிறப்புக் காட்சியமைக்கும் பேறு எனக்கு கிட்டியது. கல்வெட்டுக்களிலிருந்து ஆலயங்களில் வழிபாட்டு முறையைப் பற்றி சில குறிப்புகளை நான் எடுத்துச் சென்றிருந்தேன். அந்தக் காட்சியை பார்வையிடவந்த பெரியவர்கள் கல்வெட்டுக் குறிப்புகளைக் கேட்டு அவை பற்றி நாலரை மணி நேரத்துக்கு மேல் அவற்றின் நுணுக்கங்களை எனக்கு எடுத்துக் கூறியதோடு மட்டுமின்றி அந்த சதஸில் அவை பற்றி பேசவும் பணித்தார்கள்.
பெரியவர்களுக்கு கல்வெட்டில் இருந்த ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும் இன்று நினைத்தாலும் வியப்பாயிருக்கிறது. ஏன் இன்று கூட பெரியவர்களுக்கு அதில் உள்ள ஈடுபாடு அளவு கடந்தது. காஞ்சி சங்கர மடத்தில் பெரியவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கும் பக்கத்தில் ஒரு கோயில் உண்டு. அதில் இரண்டு கல்வெட்டு துண்டுகள் மேலும் கீழுமாக வைத்துக் கட்டப்பட்டிருந்தன. விஜயநகர அரசன் கம்பணன் காலத்தில் மடப்புற இறையிலியாக நிலம் கொடுத்ததை அக்கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டு துண்டாக உள்ளது. அக்கோயிலுக்கு திருப்பணி நடைபெற உத்தேசிக்கப்பட்டது. பெரியவர்கள் சிலநாட்களுக்கு முன்னர் என்னை அழைத்து அக்கோயிலை மேலிருந்து கீழ்வரை பிரித்து மேலும் ஏதாவது கல்வெட்டுகள் இருக்கின்றனவா என பார்த்துவிட்டு முன்போலவே திருப்பிக் கட்டிவிட்டு திருப்பணி செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார்கள். மத்திய தொல் பொருள் ஆய்வுத்துறையின் உதவியுடன் இந்தப்பணி நடைபெற்றது.
வியாஸ பாரதம்:
வியாஸ மாமுனிவர் இயற்றிய மகாபாரதம் வேதத்துக்குச் சமமானது. அதை மக்களிடம் பரப்ப வேண்டும் என்பது பெரியவர்களின் விருப்பம். முற்காலங்களில் ஒவ்வொரு ஊரிலும் பாரதம் வாசிப்பவர்கள் இருந்தார்கள். காஞ்சிபுரத்துக்கு அருகில் கூரம் என்ற ஊர் உள்ளது. அங்கு கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசன் பரமேச்வரவர்மனின் சிற்றரசன் ஒரு சிவன் கோயிலைக் கட்டினான். அதற்கு அரசன் நிலம் கொடுத்ததைக் கூறும் செப்பேட்டு சாசனம் அளித்துள்ளான். அது இன்றும் உள்ளது. அதில் இவ்வூர் நடுவில் ஒரு மண்டபம் இருந்தது என்றும் அதில் பாரதம் வாசிக்க வகை செய்யப்பட்டது என்ற குறிப்பு உள்ளது. இது போல் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் பாரதம் வாசித்ததைக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் குறிக்கின்றன. இவற்றை எடுத்துக்காட்டி பெரியவர்கள் மிகப்பரவலாக இருந்த இந்தப் பண்பு மீண்டும் மலரவேண்டும் என்றும் மகாபாரதத்தில் உள்ள நீதிகளும் பண்பும் கிராமப்புறங்களில் நிறைந்திருந்ததால் இன்று சமுதாயத்தைப் பீடித்துள்ள பல தீமைகள் அழியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.
தவம் செய்த தவம்:
வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் காஞ்சி மாநகர். பண்டைய இந்திய வரலாற்றில் அறிவின் இருப்பிடமாகத் திகழ்ந்தது காஞ்சி. காஞ்சியில் தோன்றிய போதிதர்மர் என்பவர் சீனா ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கு பௌளத்த சமயத்தைப் பரப்பினார் என்பது வரலாறு. அது போல் ஆதிசங்கரர் இந்திய நாடு முழுவதும் சென்று அத்வைத சமயத்தை நிலைநிறுத்தி இறுதியில் காஞ்சியை அடைந்து காமகோடி பீடத்தை நிறுவி பீடத்தை அலங்கரித்தார் என்றும் கூறுவர். கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக காஞ்சியில் திகழ்ந்த தவமுனிவர்களையும் அறவோர்களையும் குறிப்பிடில் எண்ணிலடங்கா என்றே சொல்லவேண்டும். அத்தனை தவமுனிவர்களும் ஆன்றோர்களும் பெற்ற அறிவும் அனுபவங்களும் ஒருங்கே திரண்டு நமது காஞ்சிப் பெரியவர்கள் உருவில் திகழ்கின்றன என்றால் அது மிகையல்ல.
காஞ்சியைப் பற்றி பெரியபுராணத்தில் ஒரு வரலாறு உண்டு. அனைத்துலகையும் படைத்த அன்னை உமாதேவி சிவபெருமானை அடைய வேண்டும் என்று விரும்ப சிவபெருமான் காஞ்சிபுரத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்று தவம் செய்யக் கூறினாராம். தேவியே தவம் செய்த இடம் காஞ்சி. தவமும் தெய்வீகமும் அறிவும் ஆற்றலும் இங்கு நிலைக்க வேண்டுமென அந்த தவமே செய்த தவமாக நமது பெரியவர்களாக அவதரித்துள்ளது எனில் அது கவிதை நயம் அல்ல. உண்மையே எனில் அது மிகையல்ல.
புதுமையிற் புதுமை:
ஆதிசங்கர பகவத்பாதர் “புராணம்” என்ற சொல்லுக்கு பொருள் கூறும்போது “புரா அபி நவம்” பழமையே ஆயினும் புதுமையானது என்பார். அது போல காஞ்சிப் பெரியவர்கள் ஸநாதனதர்மத்தில் புதுமையைக் காண்பவர். காண்பிப்பவர் எனலாம். இதனை கவிகளுக்கெல்லாம் கவிஞன் ஆன மகாகவி சுப்ரமண்யபாரதியே கூறியிருக்கிறான்.
1916 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் ஸ்ரீமடத்தில் நவராத்திரி விழா கொண்டாட பெரியவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அழைப்பு சுப்ரமண்யபாரதிக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அந்த அழைப்பைப் பற்றி பாரதி ஒரு கட்டுரையே எழுதினான். சங்கர மடத்திலிருந்து பாரதிக்கு தந்தி வந்தது. அதைப் பற்றிக் கூறுகிறான்.
“சங்கர மடத்திலும் எனக்கு ஒருவித ஆவல் உண்டானதால் தந்தியை வாசித்துப் பார்த்தேன். அந்த தந்தியிலே பாதி சாஸ்திரம். வர்த்தமான தந்திக்குள்ளே சாஸ்திரத்தை நுழைத்தது ஒரு விநோதம். ஆனால் அதில் கண்ட சாஸ்திரம் உண்மையாக இருந்தது. நான் எதிர்பார்க்கவில்லை. எனவே தந்தியைப் படித்தபொழுது எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று” என்று புதுமையைப் போற்றும் பாரதியே போற்றினான் எனில்
நாம் என்னே!



