“பெரியவா விரும்பி எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ “…. -(ஸ்ரீசங்கர ஜெயந்தி ஸ்பெஷல் போஸ்ட்)
(“நீ ப்ரியமா பெரியவாளுக்குக் குடுக்கணும்னு மணையைத் தூக்கிண்டு வந்து குடுத்திருக்கே .பதிலுக்கு ஒனக்குத் தரதுக்கு ஒரு ப்ரஸாதங்கூட எங்கிட்ட இல்லையே”) (சொன்னாரே தவிர மணையில் உட்கார்ந்த ஃபோடோ அவருக்கு அனுப்பி வைத்தார்)
கட்டுரை-சிறுவாச்சூர் மதுரகாளிதாஸன்(வீரபத்திரன்)
தட்டச்சு-வரகூரான் நாராயணன். 
(தாம்பரத்தில் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி முகாம் சங்கர ஜெயந்தி முன்னிட்டு 05-05-2016 முதல் 20-05-2016 வரை 16 நாட்கள்-அப்போது அங்கு இந்த கட்டுரை பேப்பரை வினியோகித்து கொண்டிருந்தார்கள் .அதைப் பார்த்து தட்டச்சு.செய்தேன்-வரகூரான்)
ஸ்ரீமகாஸ்வாமிகள் அமர்ந்திருக்கும் படங்களில் ஒன்றில் அவருக்கு இடது பக்கம் ஒரு மணை சார்த்தி வைத்திருக்கும்.மரத்திடமும் அன்புமறத்துப்போகாத மறந்து போகாத அவரது அதிசய குணத்திற்கே அது சான்று.
கதை இதுதான்.
சங்கர பீட சக்ரவர்த்தியாயின்றி அநாமதேய ஆண்டிபோல அவர் அந்த மரத்தடியே வந்தமர்ந்திருந்தார். அடியாரொருவர் அங்கு வந்தார்.பெரியவாள் அமர்வதற்கென்று இந்த மணையைச் செய்து, எடுத்து வந்து, ஸமர்ப்பணம் செய்தார்.
“நீ ப்ரியமா பெரியவாளுக்குக் குடுக்கணும்னு மணையைத் தூக்கிண்டு வந்து குடுத்திருக்கே .பதிலுக்கு ஒனக்குத் தரதுக்கு ஒரு ப்ரஸாதங்கூட எங்கிட்ட இல்லையே” என்றார் ஸ்ரீசரணாள்,அருள் என்ற அமுத ப்ரஸாதத்தை வழங்கியவாறே. பெரியவா அநுக்ரஹமே போதும் என்றார் அடியார்.அப்போது இன்னோர் அடியார் வந்தார், காமிராவும் கையுமாக.
“ஒனக்கு நான் பதில் பண்றதுக்கு வழி கெடச்சுடுத்து” என்று மணையடியாரிடம் ஸந்தோஷத்துடன் சொன்னார் நமது ஆசுதோஷி.
“இந்த மணையும் போட்டோவுல நன்னாத் தெரியறாப்ல வெச்சுண்டு படம் பிடிச்சுக்கப் போறேன்.காப்பி உனக்கு தரச்சொல்றேன். நீ குடுத்த மணையே போட்டோ ரூபத்துல ஒனக்கு நான் பண்ற பதில்” என்று சிரித்தவண்ணம் கூறினார்.
போட்டோ எடுக்கக்கூடாது என்று பெரியவாள் சொல்லும் சந்தர்ப்பம் அநேகம்.இன்று இந்தக் காமிரா அடியார் அதிர்ஷ்டம் செய்திருந்தார்.
நிழற்படம் எடுத்தவரிடம், இவர் அட்ரஸ் கேட்டுண்டு ஒரு காப்பி இவருக்குச் சேத்துடு என்றார்.பிற்பாடு அவர் அவ்வாறே செய்தார்.
பெரியவாள் தமக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட பிரதியைப் பார்த்தபோது சொன்னார்.
“என்னோட தண்டம்,கமண்டலம்,ருத்ராக்ஷம் எல்லாம் அநேக போட்டோல விழுந்திருக்கு. ஆனா ஜபத்துக்கு முக்யமான அங்கமான ஆஸனமாயிருக்கிற மணைக்கு மேலேயே நான் ஒக்காந்துடறதாலே அது ஸரியாகத் தெரியறதே இல்லை. இந்தப் படம் அந்தக் குறையைப் போக்கிடுத்து” என்றார்.
மஹா புருஷனுக்கு ஒரு சிறிய மணை தந்தவரிடம் நன்றி. மணையிடமும் நன்றி.



