காஞ்சி வரதர் கோயில் தேரோட்ட உத்ஸவம் கோலாகலம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

kanchi therottam - 2026

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோத்ஸவ தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரமோத்ஸவ விழா கடந்த 17- ஆம்தேதி தொடங்கியது. 7-ஆம் நாளான நேற்று முக்கிய திருவிழாவான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதலே கோவில் வளாகத்தில் பக்தர்கள் குவிந்தனர்.

காலை 5.30 மணி அளவில் கோயிலில் இருந்து ரங்கசாமி குளம் அருகே உள்ள அலங்கரிக்கப்பட்ட தேரில் வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் காலை 6 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.

பக்தர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் வடம் பிடித்து தேரை இழுத்தனர். வரதராஜ பெருமாளுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து பக்தியுடன் வழிபட்டனர்.

தேரடியிலிருந்து புறப்பட்ட தேர் காந்திசாலை, காமராஜர் வீதி, பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதிகளின் வழியாக தேரடியை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து உள்ளூர், வெளியூர்களிலிருந்து வருகை தந்த 101 பஜனை கோஷ்டிகள் பாடி வர திருத்தேருக்கு முன்னும் பின்னும் பிரபத கோஷ்டிகள் வேத மந்திர கோஷ்டிகள் தொடர முக்கிய வீதிகளில் வலம் வந்து பல லட்சம் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் வரதர்.

தேர் திருவிழாவைக் காண வந்த பக்தர்களுக்கு மக்கள் வழி நெடுகிலும் மோர், குளிர்பானம், இனிப்புகள், அன்னதானம் வழங்கினர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேர் உத்ஸவத்தைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.