spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ருஷி வாக்கியம் (69) – சிவனுக்கும் கேசவனுக்கும் இடையே வேறுபாடு பார்க்கலாமா?

ருஷி வாக்கியம் (69) – சிவனுக்கும் கேசவனுக்கும் இடையே வேறுபாடு பார்க்கலாமா?

rv2 7

வேதவியாச பகவான் அஷ்டாதச புராணங்களை எழுதியுள்ளார். இந்த பதினெட்டு புராணங்களையும் அவர் பிரித்துள்ள விதம் எத்தனை அழகாக உள்ளதென்றால் ஒரு புறம் சிவன் தொடர்பான புராணங்கள் பல காணப்படுகின்றன. அதேபோல் விஷ்ணு தொடர்பானவை, சக்தி தொடர்பானவை, கணபதி, சூரியன், சுப்பிரமணியன் என்று ஒவ்வொரு தெய்வத்தோடும் தொடர்புடைய புராணங்கள் பல உள்ளன.

ஒரு புராணத்தைப் பார்க்கையில் அது இன்னொரு புராணத்தை கண்டித்து மறுப்பது போல் தோற்றமளிக்கும். ஆனால் நல்ல கருத்தொற்றுமை கொண்ட சமன்வய சூத்திரத்தை வியாசர் கூறுகிறார். எனவே எந்தத் தெய்வம் தொடர்பான புராணத்திலும் அபேதம் அதாவது வேறுபாடற்ற பாவனையை கட்டாயமாக தெளிவுபடுத்துகிறார் வியாசர்.

அப்படிப்பட்ட அபேத வாக்கியங்களை ஒரே இடத்தில் எடுத்து வந்து சேர்த்து ஆராய்ந்தால் ருஷி வாக்கியங்களின் தொகுப்பை நாம் அறியமுடியும். நம்மில் இஷ்ட தெய்வ நிஷ்டையோடு கூட இதர தெய்வங்களின் மேல் துவேஷமற்ற பார்வை ஏற்படும்.

பிற தெய்வங்களை நிந்திக்காமல் இஷ்ட தெய்வத்தை வழிபடும் ஆரோக்கியமான பழக்கத்தை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இஷ்ட தெய்வத்தின் மேல் நிஷ்டை ஏற்பட்ட உடனே, “என் தெய்வத்தை மிஞ்சிய தெய்வம் இல்லை!” என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பே! அது நல்லது கூட! ஆனால் தன் தெய்வத்தை விட மிஞ்சியது எதுவும் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டதால் பிற தெய்வங்களைக் குறைவாக எண்ண வேண்டும் என்பது இல்லை.

உதாரணத்திற்கு வைணவர்களுக்கு பிரமாண நூலான விஷ்ணு புராணத்தில் முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தில் சிவனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் கூறும் வாக்கியத்தில் அற்புதமான கருத்து உள்ளது.

“அவித்யா மோஹிதாத்மான: புருஷா பின்ன த்ருஷ்டய: !
வதந்தி பேதம் பச்யந்தி சாவயோரந்தரம் ஹரா !!”
இங்கு விஷ்ணு கூறுகிறார் சிவனிடம், “ஓ ஹரா! அவித்யையால் மோகம் அடைந்தவனும், வேறுபட்ட பின்னப் பார்வை கொண்ட மனிதனும் உனக்கும் எனக்குமிடையே வேற்றுமையைக் காண்பான்!” என்கிறார்.

அதாவது அவர்களுக்கு இடையில் வேறுபாடு காண்பவர்களுக்கு விஷ்ணு அளித்துள்ள விருதுகளை பாருங்கள்! ஒன்று ‘அவித்யா மோகம் கொண்டவன்’. அடுத்தது பின்ன திருஷ்டி கொண்டவன்’ என்கிறார்.

அதேபோல் விஷ்ணுவோடு தொடர்புடைய மகாபாரதத்தில் ஹரி வம்சத்தில் பவிஷ்ய பர்வம் என்ற இடத்தில் 87 ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ணரிடம் சிவன் கூறுகிறார்,

“ஹராய ஹரி ரூபாய நமஸ்தே திக்ம தேஜசே !
சிவத்வாம் சத்ய ரூபேண கோனுஸ்தோதும் பிரஸுக்னுயாத் !!
க்ஷமஸ்வ பகவன் தேஹா சக்தோஹம் த்ராஹிமாம் ஹர !
ரக்ஷ தேவ ஜகன்னாத லோகான் சர்வாத்மனா ஹர !!”

இங்கு கிருஷ்ணர் சிவனைத் துதிப்பதும் பின் சிவனும் கிருஷ்ணரும் உரையாடுவதும் காணப்படுகிறது. சிவன் கிருஷ்ணரிடம், “உனக்கும் எனக்கும் வேறுபாடு இல்லை. மேலும் எனக்கு மிகவும் பிரியமானவன் நீ மட்டுமே! அக்காரணத்தால்தான் உன் பெயர்கள் எல்லாம் என்னுடையவை! என் பெயர்களெல்லாம் உன்னுடையவை!” என்கிறார். இது ஹரி வம்சத்தில் தெளிவாக காணப்படும் வாக்கியம்.

அதனால்தான் ஹரி நாமங்களில் சிவ நாமங்கள் இருக்கும். ஹர நாமங்களில் ஹரி நாமங்கள் இருக்கும். வேங்கடபதியை நாம் அர்ச்சனை செய்யும்போது கூட சிவநாமங்கள் தென்படும்.

ஈஸ்வரன் என்ற சொல் சர்வ ஜகத்தையும் ஆள்பவன் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. அது சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பொருந்தக்கூடியது. எனவே ‘ஈஸ்வரன்’ என்ற சொல் காதில் விழுந்தவுடன் அது ஏதோ சிவனோடு தொடர்புடையது என்று காதைப் பொத்திக் கொள்வதால் பலனில்லை. அதேபோல் சிவன் என்ற சொல்லை கேட்டதுமே சிலர் காதை மூடிக் கொள்வார்கள். சிவா என்றாலே மங்கள ஸ்வரூபம்! விஷ்ணு சகஸ்ரநாமங்களில் சிவநாமங்கள் உள்ளன அல்லவா? அது விஷயமாக என்ன கூறுவது?

“ஹரி ஹர அபேதேன சாக்ஷாத் சங்கராசார்யேண அனுக்ரஹ்ணீத”

ஹரி ஹர அபேதத்தை வியாசர் எடுத்துக் கூறிய போதிலும் காலக்கிரமத்தில் மீண்டும் பேத பாவனைகள் ஏற்பட்டு கலகங்கள் பெருகின. அப்போது ஆதிசங்கரர் முதலானவர்கள் மீண்டும் அவற்றை முன்னெடுத்து உய்வித்தார்கள். அதனால் எந்த சூழ்நிலையிலும் பேதம் பார்க்கக் கூடாது என்ற கருத்தை புராணங்களின் சான்றுகளோடு நாம் பார்த்து வருகிறோம்.
rv1 11

மேலும் பாஷாண்டிகளின் இயல்பு எவ்வாறு இருக்கும் என்பதைக் கூறும்போது பவிஷ்ய புராணத்தில் ஒரு வாக்கியம் உள்ளது.

“ஞானா தேவத கைவல்யம் இத்யுக்த்வாத்
அத ஏவ பவிஷ்யத் புராணே சிவ கேசவயோ:
பேதாதிக்ய பாவம் பாஷண்ட லக்ஷணமித்யுக்தம் !!”

சிவனுக்கும் கேசவனுக்கும் இடையே வேறுபாடு காண்பது பாஷாண்டிகளின் இலட்சணம் என்கிறார். பாஷாண்டி என்றால் ‘வேதத்தை நம்பாதவன்’ என்று பொருள்.

அதேபோல் ‘கர்ம விபாகம்’ என்ற நூல் உள்ளது. எந்த எந்த வினைகள் செய்தால் எப்படிப்பட்ட தீய நிலை வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது இன்று நாம் தரித்திரம் அனுபவிக்கிறோம் என்றாலோ ஒரு வியாதிக்கு உட்பட்டோம் என்றாலோ எந்த வினை செய்ததால் இது வந்தது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த பரிகாரம் செய்து கொள்ள முடியும். அதற்கென்று ஒரு சாஸ்திரம் உள்ளது. அந்த ‘கர்ம விபாகம்’ நூலில் சிவனுக்கும் கேசவனுக்கும் இடையே பேதம் அதாவது வேறுபாடு பார்த்தால் சில வகையான நோய்கள் ஏற்படும் என்றும் சில தீய நிலைமைகளுக்கு ஆளாக வேண்டி வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதில் ஓரிடத்தில் கூறுகிறார்,

“ப்ரஹ்மாணம் கேசவம் ருத்ரம் பேத பாவேன மோஹிதா: !
பச்யந்த்யேகன் னஜானந்தி பாஷண்டோ பஹதா ஜனா: !!”

“பாஷாண்டி குணத்தினால் சில அவலட்சணங்கள், சில தரித்திரங்கள், சில துக்கங்கள் ஏற்படும். அவர்களின் இயல்பு என்னவென்றால் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ருத்ரனுக்கும் வேறுபாடு காண்பது”.

“யோ ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரானாம் பேதமுத்தம பாவத: !
சாதயேத் உதர வியாதி யுக்தோ பவதி மானவ: !!”

அதாவது “மும்மூர்த்திகளின் இடையே வேற்றுமை பார்த்தால் பயங்கரமான உதர வியாதிகள் வரும்” என்று கூறுகிறார். அதனால் வயிற்று உபாதைகள் நீங்க வேண்டுமென்றால் மும்மூர்த்திகளையும் வேறுபாடு காணாத பாவனையோடு வழிபடுவது மிகவும் அவசியம்.

அதேபோல் அக்னி புராணத்தில் துலா காவேரி மாஹாத்மியத்தில் விசேஷமாக விவரிக்கையில் ஹரிஹரர் இடையே வேறுபாடு காணக்கூடாது என்று குறிப்பிடுகிறார்.

“யோ விஷ்ணு பக்தி வ்யாஜேன சிவ பக்திஸ்ச லேனச !
வேஷ்டி வா சங்கரம் விஷ்ணும் தம் க்ருஹீத்வம் மமாந்திகம் !!”

இது எமன் தன் கிங்கரர்களிடம் கூறும் வாக்கியம். “விஷ்ணு பக்தன் என்று காரணம் காட்டிக் கொண்டு சிவனை நிந்திப்பவனையும், சிவ பக்தன் என்று கூறிக்கொண்டு விஷ்ணுவை தூஷிப்பவனையும் நீங்கள் விஷ்ணு லோகத்திற்கோ சிவலோகத்திற்கோ அன்றி என்னுடைய எம லோகத்திற்கு அழைத்து வாருங்கள்!” என்கிறான் யமன்.
அவர்கள் இருவரிடையே பேதம் காண்பவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்று அக்னி புராணம் கூறுகிறது.

இந்த புராணங்கள் சைவர்கள் வைணவர்கள் இருவருக்குமே பிரமாணமான ஆதார நூல்கள்.

“சிவ ஏவ ஹரி சாக்ஷாத் ஹரிரேவ சிவஸ்வயம் !
த்வயோஸ்து பேதே குர்வாணி பித்ருபிர்நாரகம் வ்ரஜேத் !!”

இது நமக்கு மார்க்கண்டேய மகாமுனி கூறும் வாக்கியம். “சிவன் ஹரி இவ்விருவரிடையே வேறுபாடு காண்பவனோடு சேர்ந்து அவனுடைய பூர்வீகர்கள் கூட நரகத்தில் விழுகிறார்கள்!” என்ற வார்த்தையை கூறுகிறார்.

அதேபோல் மார்க்கண்டேயரிடம் பிரம்மதேவர் கூறுகிறார்,

“சிவாய விஷ்ணு ரூபாய விஷ்ணவே சிவரூபிணே !
யதாந்தரம் ந பஸ்யாமி தேன தா திசதாம் சிவம் !!”

“நான் எப்போதும் நலமாக எதனால் இருக்கிறேன் என்றால் சிவனே விஷ்ணு, விஷ்ணுவே சிவன் என்று நான் உபாசனை செய்து வழிபடுகிறேன்!” என்கிறார் பிரம்மதேவர்.

இதன் மூலம் சிவபக்தர்களானாலும் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பேதமில்லை என்ற எண்ணத்தோடு இருக்க வேண்டும். விஷ்ணு பக்தர்களும் அதே போன்ற பாவனையுடன் வழிபாடு செய்ய வேண்டும்.

அதனால், “அபேத தர்சனம் ஞானம்!” என்ற கருத்து தெளிவாகத் தெரிகிறது. அதேபோல் ஸ்கந்தோபநிஷத்தில்,

“சிவாய விஷ்ணு ரூபாய சிவரூபாய விஷ்ணவே !
சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு: விஷ்ணோஸ்ச ஹ்ருதயம் சிவ: !!” என்ற வாக்கியம் உள்ளது.

ஆனால் இங்கு ஒரு கேள்வி எழுகிறது விஷ்ணுபுராணத்தில், “விஷ்ணுவே முதன்முதலில் தோன்றினார். அவரிடமிருந்து பிரம்மாவும் சிவனும் தோன்றினார்கள்!” என்று எழுதி இருக்கும். அதே போல் சிவ புராணத்தில், “சிவன் தான் முதலில் தோன்றினார். அவரிடமிருந்து பிரம்மாவும் விஷ்ணுவும் வந்தார்கள்” என்று காணப்படும். சிவனை கீழ்மைப்படுத்தும் சில உதாரணங்களும் காணப்படும். விஷ்ணுவைக் குறை கூறும் சில உதாரணங்களும் காணப்படும்.

எதனால் புராணங்களில் இந்த வேற்றுமைகள் காணப்படுகின்றன? ஒருபுறம் அபேதம் என்ற வேற்றுமையற்ற கருத்தை போதித்துக் கொண்டே பேதத்தை ஏன் காட்டுகிறார்கள்? என்று கேள்வி எழுகிறது. அதற்கு பதிலாக ருஷிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe