
பக்தியில் நவவித பக்தி என்று ஒரு விரிவாக்கம் உள்ளது. பக்தி பற்றி பக்தி சாஸ்திரங்களில் பலவித வழிமுறைகளை அளித்துள்ளார்கள் ருஷிகள்.
பதினோருவித பக்தி பூமிகைகள் மற்றும் நவவித பக்திகள். இந்த இரண்டு பிரிவுகளும் பரஸ்பரம் ஒன்றோடொன்று அனுபந்தம் கொண்டவையே! பக்தியை சாதனை மார்க்கமாக செய்து கொள்வதற்கு ஏதுவாக இவ்விதம் எண்ணிக்கையைக் கொண்டு விவரித்துள்ளார்கள். ஒன்பது வித பக்தி பற்றி பாகவதத்தில் விவரித்துள்ளார்கள். எந்த பக்திக்கு யார் உதாரணம் என்பது பற்றி இன்று நாம் அறியப் போகிறோம்!
நவவித பக்தி வழிமுறைகள் என்னென்ன? ஸ்ரவணம், கீர்த்தனம், விஷ்ணோ: ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்.
முதலில் பெரியவர்களிடமிருந்து இறைவனைப் பற்றிக் கேட்டறிவது ஸ்ரவணம். அவ்வாறு கேட்டறிந்த இறைவனின் லீலைகளையும் தத்துவத்தையும் மகிமையையும் குணத்தையும் அன்போடு திரும்பச் சொல்வது கீர்த்தனம். சுவாமியை நினைப்பது ஸ்மரணம்.
இந்த மூன்றும் த்ரிகரணங்களால் செய்யப்படுபவை. ஸ்ரவணம் உடல் உறுப்பான செவியால் கேட்கப்படுகிறது. கீர்த்தனம் வாக்கினால் செய்கிறோம். ஸ்மரணம் மனத்தால் செய்கிறோம். நவவித பக்தியில் முதல் மூன்றும் முக்கரணங்களை விஷ்ணு மயமாக்குவதில் ஈடுபடுத்துவதைக் காண முடிகிறது.
அதன்பின் செயல்வடிவில் பக்தி எவ்விதம் கடைபிடிக்கப்படுகிறது என்பதை நான்காவது பக்தி முறையிலிருந்து விவரிக்கிறார். நான்காவது பாத சேவனம். இறைவனின் பாதங்களை வணங்குவது என்பது இதன்பொருள். பாதங்களை வணங்குவது என்றாலே அகங்காரத்தை சமர்ப்பணம் செய்வது என்று பொருள். இறைவனின் பாதங்களில் நம் தலையை குனிந்து வணங்கி அகங்காரத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பதுதே பாத சேவனம்.
ஐந்தாவது அர்ச்சனம். நம் சகல இந்திரியங்களையும் கொண்டு ஷோடசோபசார பூஜை முதலியவற்றைச் செய்வதன் மூலம் நாம் உபயோகிக்கும் திரவியங்கள் சுத்தமாகின்றன. இறைவனுக்கு உரிய உபசாரங்களில் தூபம், தீபம், கந்தம், புஷ்பம், நெய்வேத்தியம் முதலானவற்றை சமர்ப்பிப்பது வழக்கம். அவை நம் தினசரி வாழ்க்கையில் அனுபவிக்க கூடிய, பஞ்சபூதங்களின் குணங்களோடு கூடிய பதார்த்தங்களே! அவற்றை இறைவனுக்கு அர்ப்பணிக்கும்போது அவை பவித்திரமாகின்றன. அதன் பின் அவற்றை நாம் ஏற்கும் போது நாமும் பவித்திரமாகிறோம். அதனால் அர்ச்சனை என்னும் கிரியை நம் உடலை இறைவன் முன் உட்கார வைக்கிறது. இறை அநுபூதி பெறுவதற்குக் காரணமாகிறது. அதனால் அர்ச்சனை உன்னதமான செயலாக கூறப்படுகிறது.

ஆறாவது வந்தனம். வந்தனம் என்பது கைகளால் வணங்குவது, தலையால் வணங்குவது, சாஷ்டாங்க நமஸ்காரம், பெண்களுக்கான பஞ்சாங்க நமஸ்காரம் என்று பல உள்ளன. இறைவனுக்கு வந்தனம் செய்வதால் அனேக வித பாவங்கள் நீங்குகின்றன.
ஏழாவது தாஸ்யம். தாஸ்யம் என்றால் ‘அனுகூல ஆசரணை’. இறைவனுக்கு அனுகூலமாக நடந்து கொள்வது. தர்மமே இறைவனுக்கு அனுகூலம்! அத்தகைய தர்மத்தைக் கடைப்பிடிப்பதே தாஸ்யம்.
இனி எட்டாவது சக்யம். “இறைவன் என் நண்பன். என் மேன்மையை விரும்புபவன்” என்ற எண்ணம் நமக்கு ஏற்பட வேண்டும். நமக்கு எது நடந்தாலும் நம் நலம் விரும்பியான இறைவன் நம்முடைய நன்மைக்காகவே அளித்துள்ளார் என்ற பாவனை ஏற்படுமானால் அது சக்ய தர்மம் எனப்படுகிறது.
ஒன்பதாவது ஆத்ம நிவேதனம். இந்த ஒன்பதாவதோடு பூர்த்தியாகி விடுகிறது. இனி பத்தாவது இல்லை. அதாவது நான், என்னுடையது என்ற எண்ணத்தை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே ஆத்ம நிவேதனம்!
இந்த ஒன்பது வித பக்திக்கும் ஒவ்வொருவரை உதாரணமாக காட்டுகிறார்கள்.
“கதா ஸ்ருதேஹி பரீக்ஷித்ச கதா கானான்ச நாரத: !”
பகவானின் கதையை கேட்பதில் பரீட்சித்து மகாராஜா உதாரணமாக உள்ளார். இறைவனின் குண நலன்களை கீர்த்தனம் செய்வதில் நாரதர் உதாரணமாக உள்ளார்.
“நாம ஸ்ம்ருதேஸ்ச ப்ரஹல்லாதோ !” – நிரந்தர நாமஸ்மரணம் செய்வதில் பிரகலாதன் உதாரணம். பிரகலாதன் நாமஸ்மரணம் செய்வது மட்டுமல்ல. இறைவனின் தத்துவத்தையும் நினைத்து வந்தான். அதாவது இறைவன் நிரந்தரம் அவன் மனதில் இருந்தான். மனதில் இருப்பதே ஸ்மரணம்.
“கருத்மான் வந்தனேன ச !” – கருடன் வைகுண்டத்தில் நிரந்தரம் சுவாமிக்கு வந்தனம் சமர்ப்பித்து கொண்டிருப்பார். கருட சேவை என்று பிரத்யேகமாக பகவானின் வழிபாடுகளில் பார்த்து வருகிறோம். வேங்கடபதிக்கு கருட வாகனம், கருட சேவை உள்ளது. காஞ்சி வரதராஜ சுவாமி கருடசேவை பற்றி கூறவே வேண்டாம். அத்தனை உயர்ந்தது! அதனால் கைங்கரியத்தில் கருடனை பிரதானமாகக் கூறுவார்கள். சுவாமியை எப்போதும் கவனித்துக் கொண்டு அவர் எங்கே கிளம்பினாலும் வாகனமாக இருப்பது போன்ற வழிகளில் கருடன் இறைவனை வணங்கி வருகிறார். அதனால் வாகன சேவையில் மட்டுமின்றி வந்தன பக்தியிலும் கருடன் சிறந்தவர்.
இனி, “பாத சேவேன சௌமித்ரி !” –ஐந்தாவது பக்தியான பாத சேவைக்கு இலட்சுமணன் சிறந்த உதாரணம். ராமச்சந்திரமூர்த்தி அழைக்காமலே இலட்சுமணன் வனவாசத்திற்குக் கிளம்பினான். வனவாசம் விதிக்கப்பட்டது ராமனுக்குத்தானே தவிர லட்சுமணனுக்கு அல்ல. ஆனாலும் ராமனுக்கு சேவை செய்ய வேண்டும்… ராமனின் பாதத்தை சரணடைய வேண்டும் என்ற உத்தேசத்தோடு கிளம்பிச் சென்றான் லட்சுமணன். சேவா தர்மத்தில் சௌமித்ரியான லட்சுமணனை மிஞ்சியவர் யாருமில்லை! ஏதோ பலவந்தமாக நியமிக்கப்பட்ட பணி அல்ல அது. தானே விரும்பி பகவானின் சேவையில் ஈடுபட்டான். அத்தகைய சேவையை மிக அற்புதமாக கடைபிடித்தான். பிரேமையோடு ஆசைப்பட்டு செய்தான்.
அடுத்து, “அம்பரீஷ: அர்ச்சனேன ச !” – அர்ச்சனை பக்திக்கு அம்பரீஷர் உதாரணம். அம்பரீஷர் சிறந்த பாகவத உத்தமர். ஞானி. அவருடைய அர்ச்சனை விதானம் எப்படி இருந்தது என்பதை பாகவதத்திலும் ஸ்காந்த புராணத்தில் விவரித்துள்ளார்கள். அம்பரீஷர் அரச்சனையை இறை அர்ப்பண புத்தியோடும் இறைமய பாவனையோடும் செய்து வந்தார். ஞான ரூப, பிரேம ரூப அர்ச்சனைக்கு அம்பரீஷரே மிகச் சிறந்த எடுத்துக் காட்டு. ஒன்பது வித ஏகாதசி விரதங்களைச் செய்து, அதன்பின் வந்த ஏகாதசி விரதமும் செய்து மொத்தம் பன்னிரண்டு ஏகாதசி விரதங்களைக் பூர்த்தி செய்துகொண்டு இறுதியில் கார்த்திகை மாதத்தில் அவர் ஏகாதசி விரத உத்தியாபனம் செய்யும் விதத்தை பாகவதத்தில் விவரித்துள்ளார்கள். அதனால் அர்ச்சனையில் பலவித விரதங்களைக் கடைப்பிடிப்பது காணப்படுகிறது.
ஏழாவது, “தாஸ்யேஸ் ச ஹனுமான் !” – தாச பாவனையில் ஹனுமான் உதாரணம். அனுமனின் பக்தியைப் பற்றி வால்மீகி ராமாயணம் யுத்த காண்டம் தொடக்கத்தில் ராமரே கூறுகிறார். “சொன்னால் சிலர் செய்வார்கள். சொல்லாமலே புரிந்து கொண்டு சிலர் செய்வார்கள். ஆனால் உபகார புத்தியோடு எந்த பலனையும் எதிர்பார்க்காமல் அரசரின் இதயத்தைத் தெரிந்துகொண்டு பணி செய்யும் தாச பக்தி குணம் அனுமனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை!” என்று இராமரே கூறுகிறார். அவ்வாறு இறைவனுக்கு அனுகூலமாக நடந்து கொள்வதும், பகவத் காரிய சித்திக்குப் பிரயத்தனம் செய்வதும் ஹனுமானிடம் இருந்த உயர்ந்த தாச பக்தி.
இனி, “பக்த சக்யேன தனஞ்சய !” – தோழமைக்கு உதாரணம் அர்ஜுனன். இனி, ஆத்மார்ப்பணத்தில் கோபிகைகள். கோபிகைகளுக்கு தான், தன்னுடையது என்ற எண்ணமே கிடையாது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று வாழ்ந்தவர்கள் கோபிகைகள்.
இந்த ஒன்பது வகைகளில் எதை நாம் ஏற்றுக் கடைபிடித்தாலும் உய்வடைந்துவிடுவோம். இவற்றை ஒன்றோடொன்று இணைத்து ஒன்பதையும் படிகளாக வைத்துக்கொண்டாலும் உய்வடைவோம்.
இவ்விதம் பதினோரு பக்தி பூமிகைகளோடு, நவவித பக்திகளையும் கிரகித்தறிந்து பக்தியில் பரிபூரணம் அடைவதற்கு முயற்சிப்போம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்


