
இராஷ்ட்டிரிய ஸ்வயம் சேவக சங்கத் தலைவா் மோகன் பகவத் காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் இன்று காலை வழிபாடு நடத்தினார்.
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பாக நடைபெறும்
அத்திவரதர் நிகழ்வு இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதனைதொடா்ந்து தினமும் வெளி மாவட்டங்களில் உள்ள பக்தர்கள், மற்றம் பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசித்துச் செல்கின்றனர்.
48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவத்தின் 25வது நாளான இன்று அத்திவரதர் தங்க சரிகை பதியப்பட்ட மஞ்சள் நிற பட்டு உடுத்தி மல்லிகை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, நைவேத்தியம் செய்யப் பட்டு அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
காலை 5 மணி முதலே பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அத்திவரதருக்கு மகிழம் பூ மாலை, செண்பக பூ மாலை அணிவிக்கப்பட்டு, நெய்வேதியம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்து வந்தாலும், அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று வரை அத்திவரதரை சுமார் 32 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக தினமும் நூற்றுக்கணக்கான முக்கிய அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அத்திவரதரை தரிசனம் செய்தார். அவருடன் தமிழக பாஜக உறுப்பினர்கள் பலரும் சென்றனர்.
இந்த கோயிலில் இன்று முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதிவரை ஆடிப்பூரம் உற்சவம் நடைபெற உள்ளது.
இதனால் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


