வரலக்ஷ்மி விரதம் – விஞ்ஞான விளக்கம்


வருடத்திற்கு ஒருமுறை சிராவண மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக் கிழமையன்று வரலட்சுமி விரதம் கொண்டாடுகிறோம்.

சுமங்கலிப் பெண்கள் ஸ்ரீமகாலக்ஷ்மியை வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமியாக விரத நியமத்தோடு பூஜை செய்து வணங்குகிறோம். அஷ்ட லட்சுமிகளின் சொரூபம் வரலட்சுமி.

இந்த பண்டிகை பலப்பல விஞ்ஞான உண்மைகளை விளக்குகிறது. நம் சம்பிரதாயங்கள் அனைத்தும் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டவை. பிரகிருதி சக்தியின் மீது பக்தியையும் சிரத்தையையும் வளர்க்கும் விதமாக நம் முன்னோர் இவற்றை ஏற்படுத்தியுள்ளனர்.

நம் நாடு விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டது. பருவமழை பெய்யும் ஆடி, ஆவணி மாதங்களில் செல்வத்திற்கு அன்னையான லக்ஷ்மி தேவியின் கருணை வேண்டி பிரார்த்திக்கிறோம். இந்த விரதத்தில் எவ்வளவோ அர்த்தமும் பரமார்த்தமும் நிரம்பி உள்ளன.

பூஜை ஆரம்பிக்கும் முன் வீட்டையும் வாசலையும் சுத்தம் செய்து மாவிலை தோரணம் கட்டுகிறோம். அம்மனின் பூஜை மண்டபத்தையும் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கிறோம். மாவிலைத் தோரணம் பிராண வாயுவை வெளியிட்டு பூஜைக்கு வரும் சுமங்கலிகளின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதமளிக்கிறது.

அடுத்து கலச ஸ்தாபனம். அழகாகக் கோலமிட்ட பீடத்தின் மீது நெல் பரப்பி அதன் மத்தியில் கலசத்தை வைத்து, அதில் அரிசியிட்டு, பொன் அல்லது வெள்ளி நாணயம், வெற்றிலை, முழுப் பாக்கு, மஞ்சள் கிழங்கு, காய்ந்த பேரீச்சை, காதோலை கருகமணி, ரூபாய் நாணயம் போன்றவற்றால் நிரப்புகிறோம். கலசத்தின் மேல் மாவிலை வைத்து, மஞ்சள் பூசிய தேங்காயை அமர்த்துகிறோம். தாழம்பூவால் ஜடை பின்னுகிறோம். அம்மனுக்கு வளையலணிவிக்கிறோம். தேங்காய்க்கு மாவினால் கண், மூக்கு வைத்து அம்மனை அதில் காண்கிறோம். அல்லது வெள்ளி முகத்தை அதில் சொருகி வைக்கிறோம். சிலர் கலசத்தின் மேல் சுண்ணாம்பு, கண் மை இவற்றால் முகம் எழுதி, குங்குமத்தால் வாயும் உதடும் சிவப்பாக வரும்படி வரைவதுண்டு. அவரவர் விருப்பத்திற்கேற்ப கலசத்தின் கழுத்தில் ஆபரணங்களும், அம்மனுக்கு ஆடை அலங்காரமும் இருக்கும்.

இதில் ஈடுபடும் சுமங்கலிப் பெண்களின் மனோ நிலையை நினைத்துப் பாருங்கள்! எத்தனை பரவசம்! பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து, அதனை நடத்துவிக்கும் இயற்கைச் சக்தியைத் தாயாக பாவித்து, “அம்மா!” என்றழைத்து, தன் கையால் அவளை அலங்கரித்து ஆராதிக்கும் நம் கலாசாரத்தில் உள்ள அன்யோன்ய பாவனையின் அற்புதம் விளங்கும்.

தாயின் அரவணைப்பில் கிடைக்கும் அன்பு, பாதுகாப்பு, வாத்சல்யம், தைரியம் போன்றவற்றை இந்த விரதத்தின் முற்பகுதியிலேயே உணரத் தொடங்கி விடுகிறோம்.

“ஸ்ரீ” என்பது ஐஸ்வர்யங்களுக்குச் சின்னம். ‘வரம்’ என்றால் சிறப்பானது, சிரேஷ்டமானது என்று பொருள். நாம் சிறப்பானவற்றையே எப்போதும் அடைய விரும்புகிறோம். அவற்றை அளிப்பவளே வரலட்சுமி.

கலசத்தில் எதனால் இப்பொருட்களை இடுகிறோம்? குழந்தைக்குத் தாய் செய்து மகிழ்வது போல, எதற்காக இப்படி அலங்காரம் செய்கிறோம்? இவற்றின் பொருள் என்ன?

பிரம்மாண்டத்தின் குறியீடான கலசத்தில் செல்வம், பசுமை, நற்பலன், மங்களம் இவற்றை நிரப்பி வழிபடுகிறோம். இவற்றின் மூலம் ஆண்டு முழுவதும் வயிறு நிரம்ப அன்னத்திற்குக் குறைவு வராமல் காக்கும்படி லக்ஷ்மிதேவியை வேண்டுகிறோம். வெற்றிலை, பாக்கு, மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்கள் வீட்டில் ஆண்களின் ஆரோக்யத்தைக் காத்து, பெண்களை சுமங்கலிகளாக வைக்கும்படிக் கோரும் பிரார்த்தனையின் வெளிப்பாடு. பொன், வெள்ளிக் காசுகளும், ரூபாய் நாணயமும் ஐஸ்வர்த்தை நாடும் நம் வேண்டுதலை அம்மனுக்குத் தெரிவிக்கின்றன. அதே போன்று, புதுப் புடவை அல்லது ரவிக்கைத் துணி, நமக்கு வஸ்திரக் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி அம்மனுக்கு நாம் வைக்கும் விண்ணப்பம்.

இவ்விதம் நம் தேவைகளையும் கோரிக்கைகளையும் ஒன்றாகச் சேர்த்து கலசத்தில் இட்டு அம்மனை ஆவாஹனம் செய்கிறோம்.

அதே போல் பூரண எண்ணான ஒன்பது முடிச்சுகள் இட்டு மஞ்சள் சரடு தயார் செய்கிறோம். அதில் பூ முடிகிறோம். ஏன்? இது நவகிரகங்களின், நவ துர்கைகளின் அருளால், நவ தானியங்கள் நன்கு விளைந்து, நோய்களின்றி சமுதாயம் வாழவேண்டும் என்பதற்காக.

ஆரோக்கியம், சௌபாக்யம், ஐஸ்வர்யம் இவற்றை வேண்டிச் செய்யும் பூஜையாதலால் நம்மிடம் இருக்கும் சிறப்பான பொருட்களை அம்மனுக்குச் சமர்பித்து ஆனந்தமடைகிறோம்.

மாலையில், அண்டை அயல் பெண்களை அழைத்து மஞ்சள், குங்குமம், தாம்பூலம், கொண்டைக் கடலை சுண்டல் அளித்து மகிழ்கிறோம். அவர்களை அம்மனாக பாவித்து கௌரவிக்கிறோம்.

மெய்ஞானமும், விஞ்ஞானமும் இணைந்த இப்பண்டிகை சிநேகம், உதவும் குணம், ஒற்றுமை இவற்றை வளர்க்கிறது.

மஞ்சளும், குங்குமமும் சுபத்தைக் குறிக்கும் பொருட்கள். அதோடு ஆரோக்யத்தையும், அழகையும் அதிகரிக்கச் செய்பவை. மஞ்சள் மருத்துவ குணங்கள் நிரம்பியது. கிருமி நாசினியும் கூட. தாம்பூலம் நட்பையும் உறவையும் வளர்க்கும் குணம் கொண்டது. கொண்டைக் கடலை போஷாக்கு நிறைந்த சத்துணவு. இவற்றைப் பெண்களுக்கு அளிப்பதன் உட்பொருள் அனைவரும் சுக சௌக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே. இது சமுதாய நலன் கோரும் நற்செயல்.

வரலட்சுமி அம்மனைப் பூஜித்து மகிழும் நாம், அவள் நம் வீட்டில் நிலைத்து நிற்க வேண்டுமானால் நித்தியமும் சில நியமங்களோடு வாழப் பழக வேண்டும்.

நல்ல பழக்க வழக்கங்கள், சுத்தம், சுகாதாரம், திருப்தி, சிநேகம், வீரம், தைரியம், நன் முயற்சி முதலிய சத்துவ குணங்கள் நிரம்பிய வீடுகளில் லட்சுமி தேவி நிலைத்து வசிப்பாள்.

கலகங்கள் நிகழுமிடம், தீய வார்த்தை பேசுமிடம், பெண்களை அவமதிக்குமிடம், சந்தியா நேரங்களில் உறங்குமிடம், ‘இல்லை, இல்லை’ என்று கூறி தான தர்மம் செய்யாத லோபி வசிக்குமிடம், தாய் தந்தையரை இழிவு படுத்துமிடம், பொய், கோள் உரைக்குமிடங்கள், பயம், திகில் கொண்டோர் வாழுமிடங்கள் – போன்றவற்றை விட்டு விஷ்ணு பத்தினி விலகி விடுவாள்.
பக்தியோடு பூஜிப்போருக்கு வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமியை வணங்கி மகிழ்வோம்.

-ராஜி ரகுநாதன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...