“அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன்
என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான் என்று
வைத்துக்கொள்ளேன்” என்றான்-சுவாமிநாதன்.
(யானை மாலை போட்டதால் சக்ரவர்த்தி ஆவான் என்று
நினைத்த தாய்க்கு சந்நியாசி பெரியவாளின் பதில் மேலே
)
கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
மடத்திலிருந்து திடீரென்று ஒரு நாள் ஒரு தந்தி வந்தது.
குருநாதர் ஸாரத்தைவிட்டு ஆற்காட்டுக்கு அருகில் உள்ள
கலவை என்ற இடத்துக்குச் சென்று விட்டார்.
அங்கிருக்கையில்,’குழந்தை சுவாமிநாதனை அழைச்சுண்டு
உடனே மடத்துக்கு வரவும்!’ என்றது தந்தியின் வாசகம்.
அந்த சமயம் சுப்ரமண்யம் ஊரில் இல்லை.’மடத்திலிருந்து
தந்தி என்றால்,உடனே கிளம்புங்கள்!’ என்று மாதா
மகாலட்சுமியை ஊரார் தூண்டினர்.அவரும் எல்லாக்
குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்று,
அங்கிருந்து கலவைக்குச் செல்ல நினைத்தார்.
அதற்குள் தந்தி கொடுத்த பரமகுரு ஸித்தியாகி விட்டார்.
அவர் ஏன் தந்தி கொடுத்தார்? தான் மறையப்போவது தெரிந்தும்
அதற்குள் சுவாமிநாதனை அந்த பீடாதிபதியாக்க
வேண்டுமென்று அவசரப்பட்டார் போலும்! அது நடக்கவில்லை.
எனவே, மடத்துக்காரர்கள் சுவாமிகள் இல்லாமல் மடம்
இருக்கமுடியாது என்று,கைங்கரியம் பண்ணிக் கொண்டிருந்த
லக்ஷ்மிகாந்தன் என்ற வேத வித்துக்கு சந்நியாசம் கொடுத்து
67-வது பீடாதிபதியாக நியமனம் பண்ணிவிட்டனர்.
‘சுவாமிநாதன் மடாதிபதியாக்க வேண்டும்!’ என்ற குருவின்
ஆசையைத் தெரிந்து வைத்திருந்த இந்த 67-வது பீடாதிபதி,
தான் அந்த இடத்துக்கு வந்துவிட்டாலும், குரு நினைத்த அதே
சுவாமிநாதன் தான் இந்த இடத்துக்கு உரியவர் என்று
நினைத்ததுபோல் எட்டாம் நாளே ஸித்தியாகிவிட்டார்.அதற்கு
முன்,”சுவாமிநாதனை உடனே அழைத்து வாருங்கள்” என்று
சொல்லி வண்டியுடன் ஆள் அனுப்பினார். மடத்துக்காரர்கள்
காஞ்சிபுரம் சென்று சுவாமிநாதனை அழைத்துக்கொண்டு
வந்தனர்.
பின்னாலே பெற்றோர் கலவைக்குச் சென்று நிலைமையை
அறிந்தார்கள்.செல்லப் பிள்ளையைக் கொடுக்க எந்த அப்பா,
அம்மா சம்மதிப்பார்கள். அதனால் அம்மாவை
சமாதானப்படுத்தவே முடியவில்லை. பெற்றெடுத்த
அம்மாவை சுவாமிநாதனே சமாதானப்படுத்தினார்.
சில நாட்களுக்கு முன் இந்த அதிசயக் குழந்தைக்கு ஒரு
யானை வந்து மாலை போடுவதுபோல் சொப்பனம். யானை
பெரிய சக்ரவர்த்திகளுக்குத்தானே மாலை போடும்?
பிள்ளையின் கனவைப் பற்றிக் கேள்விப்பட்ட அன்னை
அப்படித்தான் நினைத்துப் பூரித்தாள். “என் கண்ணே…”
என்று சுற்றிப் போட்டாள் குழந்தை அம்மாவுக்கு அந்தக்
கனவை நினைவூட்டினான்.
“அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன்
என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான் என்று
வைத்துக்கொள்ளேன்” என்றான்.பெரியவாளிடம் பேசி
ஜெயிக்க முடியுமா என்ன? பெற்றோர் மௌனமாகச்
சம்மதம் கொடுத்தனர்.
பராபவ வருடம் மாசி மாதம் 2-ம் தேதி அதாவது 1907-ம்
வருடம் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி, ஸ்ரீமத்
சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன்
அவருக்கு சந்நியாச ஆசிரமம் கொடுக்கப்பட்டது. பிறகு
தன் குரு,பரமகுரு இருவருக்கும் செய்ய வேண்டிய
காரியமெல்லாம் கிரமமாகச் செய்து முடித்த பின்
கும்பகோணம் சென்றார். அங்கு அவருக்கு காஞ்சி
காமகோடி பீடாதிபதியாகப் பிலவங்க வருடம் சித்திரை
மாதம்,27-ம் தேதி, குருவாரம் பட்டாபிஷேகம்
செய்யப்பட்டது.



