ஸ்ரீ ராமானுஜருக்கு காஞ்சி வரதன் அருளிய ஆறு வார்த்தைகள்
ராமானுஜர் தன் இல்லத்திற்குக்கூட எப்பொழுதாவதுதான் செல்வது என்று தன்னை மாற்றிக் கொண்டிந்தார். காரணம், தன் மனைவியான தஞ்சம்மாளே பாகவதர்களை மதிக்க வில்லையே! அதனாலேயே சதாகாலமும் காஞ்சி வரதனுக்கே தன்னை ஆட்படுத்திக்கொண்டு அங்கேயே தொண்டு செய்து தனது காலத்தைக் கழித்து வந்தார். இப்படி காலத்தைக் கழித்துக்கொண்டிருந்த ராமானுஜர் திருக்கச்சி நம்பிகள் மூலமாக தன் தூது விஷயத்தைச் உரைத்தார். எம்பெருமாள் பேரருளாளனும் நம்பிகள் மூலமாக ஆறு வார்த்தைகளை அனுக்கிரகமாகப் பொழிந்தார்.
அஹமேவ பரம் தத்வம்
க்ஷேத்ரங்ஞ ஈச்வரயோர் பேத:
மோக்ஷ உபாய: ந்யாஸ ஏவ
ந அந்திம ஸ்ம்ருதிரிஷ்யதே
தேஹாலஸானே பரமம் பதம்
பூர்ணாசார்யம் ஸமாச்ரய
என்று ஆறு நல் வார்த்தைகளை அருளினார். இவற்றின் தேரிய பொருள் வருமாறு:
நானே உலகிற்குக் காரணமான தத்துவங்களுக்கும் காரணமான பரதத்துவமாவேன்.
அறிவாளியான நம்பிகளே! ஜீவனுக்கும், ஈசுவரனுக்கும் வேற்றுமை (எல்லா பிரமாணங்களாலும் தேறியே நிற்கிறது)
மோட்சத்தை விரும்பும் ஜனங்களுக்கு என்னை சரணமாக (உபாயமாக) அடைவதாகிற ந்யாஸமே மோட்ச உபாயமாகும்.
இப்படி என்னை உபாயமாகக் கொண்ட பக்தர்களுக்கு அந்திம ஸ்ம்ருதி என்கிற கடைசி நினைவு அவசியமில்லை.
இத்தகைய பக்தர்களுக்கு இந்த ஜென்மத்தின் முடிவிலேயே பரமபதத்தை நானே அருளுகிறேன்; மேலும்,
நற்குணநிதியான மஹாபுருஷரான பெரிய நம்பியை அடைவீர்.
இங்ஙனம் என்று நான் கூறிய ஆறு வார்த்தைகளை ராமானுஜருக்கு தெரிவிப்பீர் என்று காஞ்சி வரதன் அத்திகிரிப் பெருமாள் தெரிவித்தார். பகவானால் இங்ஙனம் அருளப்பட்ட அந்த வாக்கியங்களைக்கேட்ட திருக்கச்சிநம்பியும், வரதனால் சொல்லப்பட்ட அந்த ஆறு வார்த்தைகளையும் ராமானுஜருக்கு கூறினார். இவ்வாறு கூறக்கேட்ட ராமானுஜரோ “நாம் ஏற்கனவே ஆராய்ந்து முடிவு கண்ட அர்த்தங்களோடு இதுவும் ஒத்திருக்கிறதே!’’ என்று வியப்புற்றார். அதன் பிறகு ராமானுஜர், தேவப் பெருமாளையும், திருக்கச்சி நம்பியையும் மிகவும் பக்தியுடன் சேவித்து விட்டு பெரிய நம்பியைக் காண விரும்பி காஞ்சியை விட்டு ஸ்ரீரங்கத்தை நோக்கிச் சென்றார் ராமானுஜர்.
இதற்கிடையே திருவரங்கத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூற விழைகிறேன். ஸ்ரீரங்கத்தில் பரமபதமடைந்த பரமாத்மாவான, தம், ஆசார்யரான ஆளவந்தாருக்கு கடைசி சரம கைங்கர்யங்களை (கடைசி கருமங்களை) பெரிய நம்பிகள் முதலிய அந்தணர் தலைவர்களான முக்கிய வைணவ சிஷ்யர்கள் பரம பக்தியோடு நன்றாக செய்து முடித்தனர். அந்த யாமுனாசார்யரின் (ஆளவந்தாரின்) பெருமைகளையும், அருமைகளையும், கல்யாண குணங்களையும் அடிக்கடி பேசிக் கொண்டே இருந்தனர். அவரது பிரிவுக் கடலில் மூழ்கி கரையேற முடியாமல் தவித்தனர். அழுத கண்ணீரும் கம்பலையுமாக, சோகமே உருவாகக் காணப்பட்டனர்.
அப்போதுதான் ராமானுஜரை எல்லோருமே நினைவு கூர்ந்தனர்.
ஸ்ரீரங்கத்திலுள்ள சில வைணவ பெருமக்கள், ‘‘மஹாபுருஷரான ஆளவந்தார் பரலோகமடைந்தது குறித்து வருந்தாதீர்கள். ஸ்ரீமத் ராமானுஜர் என்று பெயர் பெற்றவராய் நமக்குத் தஞ்சமாயிருக்கும் தலைவர், இப்போது மங்களமான ஸத்ய வ்ரத க்ஷேத்ரமான காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வருகிறார். ஆளவந்தாருக்குப் பிறகு மிகச் சிறந்தவரான ராமானுஜரைத் தவிர வேறு எவரும் நம் வைணவ அருமை பெருமைகளை கட்டிக்காக்கக் கூடியவர் இவ்வுலகில் இல்லை. அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?
திருவுடையவராய், அறிவாளியாய், மிகமிக அழகானவராய், ஆளவந்தாரோடு ஒத்தவராய், சீலம் முதலிய குணங்கள் உடையவராய், அறிவில் ப்ருஹஸ்பதிக்கு (ப்ரஹ்மாவிற்கு) சமானமானவராய், ஒளியில் சூரியனை ஒத்தவராய், பக்தியில் ப்ரஹ்லாதனுக்கு சமமானவராய், பொறுமையில் பூமியை ஒத்தவராய், பிறரை வெல்லும் (வாதங்களில்) திறமை படைத்தவராய், எல்லா ஞானமும் உடையவராய், விவேகமுள்ளவராய் (அதாவது, பகுத்து அறிபவராய்) எல்லா சாஸ்த்ர அர்த்தங்களின் உட்பொருளை உணர்ந்தவராய், கருணை மிக்கவராய், அறத்தில் நிலை நிற்பவராய், உலகினரை காப்பதில் (ரட்சிப்பதில்) வல்லவராயுள்ள இந்த ராமானுஜரே நமது வைணவ மதத்தைக் கொண்டு உலகினரை உய்விக்கத்தக்கவர்’’ என்று மிகவும் விஸ்தாரமாக ராமானுஜரின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தனர்.
பிறகு பெரிய நம்பிகளைப் பார்த்து எல்லா பெரியவர்களும் ஒருமுகமாக பின்வருமாறு கூறினர். “மகா பாக்கியசாலியான பெரிய நம்பியே! மங்களமான காஞ்சிபுரத்திற்கு வெகு சீக்கிரம் சென்றடைவீராக! ராமானுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்கள் (ஐந்து முக்கிய கருமங்கள்) செய்வித்து, சிறப்புடையவராகச் செய்து, சிலகாலம் மகாத்மாவான அவரோடுகூட அங்கேயே வாழ்ந்து சிறுகச்சிறுக வசப்படுத்தி, ஏதாவதொரு உபாயத்தாலே விரைவில் இங்கு அழைத்து வருவீராக’’ என்று கூறி முடித்தனர்.
இப்படி சொன்னதன் கருத்து யாதெனில் பகவத் ராமானுஜர், காஞ்சி தேவப்பெருமாளுக்கு மிகவும் உகந்தவர். தம் பிள்ளையாகவே, பெருந்தேவித்தாயாரும், தேவராஜனும் நினைக்கின்றனர். மேலும் திருக்கச்சிநம்பிகள் உகந்த உத்தம சீலர் ராமானு ஜர். ஆகையால் இவர்களிடமிருந்து தனியே பிரிக்க முடியாது. எனவே, ஏதாவதொரு உபாயத்தாலே அழைத்து வரவேணும் என்று கூறினர். அந்த பெரியவர்களின் வார்த்தைகளைக் கேட்ட கருணைக் கடலான பெரிய நம்பி, பரம புருஷனான ரங்கநாதனிடம் அனுமதி பெற்றவராய், குடும்பத்தோடு காஞ்சிபுரத்தை நோக்கி விரைவாகச் சென்றார். பல கிராமங்கள், மலைகள், நதிகள், காடுகள் ஆகியவற்றைக் கடந்து மதுராந்தகம் வந்து சேர்ந்தார். காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்ட ராமானுஜரும் இத்தலத்தைத் தாண்டிதான் திருவரங்கம் செல்ல வேண்டும்.
அப்படி செல்ல எத்தனிக்கையில், யாரைத் தேடிச் சென்று பார்க்க நினைத்தாரோ அவரே மதுராந்தகத்தில் எழுந்தருளியுள்ளார் என்று கேள்விப்பட்டு அவரை வணங்கி வழிபட உடனே ஆயத்தமானார். இப்படி இருவரையும், (பெரிய நம்பியையும், ராமானுஜரையும்) மேலே, முறையே காஞ்சிபுரம், திருவரங்கம் செல்ல விடாமல் கட்டிக்காத்தமையாலே ஏரி காத்த ராமர் என்றும் மதுராந்தக எம்பெருமானுக்கு பெயர் வழங்கலாயிற்று. இருவருமே ஞானத்திலே பெரிய ஏரிக்குச் சமமானவர்கள். அப்படியாகில் இந்த ஏரி அளவே ஞானமா என்று கேள்வி கூடாது. அதாவது, இதற்கு நியாய சாஸ்திரத்தில் லக்ஷித வக்ஷணை என்று பெயர். அதாவது, சிறிய விஷயங்களைக் காட்டி பெரியவற்றை புரிய வைத்து நிரூபித்தல் என்று அர்த்தம். இருவருமே ஞானத்தின் கொள்கலங்கள் என்றால் மிகையாகாது.
ஸ்ரீராமானுஜர் பெரிய நம்பிகளை தரிசித்தார். அவர் திருவடிகளை உகப்புடன் வணங்கி பணிவுடன், ‘‘ஸ்ரீரங்கம் என்னும் க்ஷேத்திரத்தையும், போக மோக்ஷங்களை அளிக்கும் மங்களமான ரங்கநாதனுடைய சேவையையும் விட்டு குடும்பத்தோடு எங்கு செல்கிறீர்? பேரறிவாளரான பெரிய நம்பியே! அதன் காரணத்தை எனக்குக் கூறுங்கள்’’ என வினவினார். இந்த வார்த்தையைக் கேட்ட வைணவப் பெரியவரான பெரிய நம்பி தாம் புறப்பட்டு வந்த காரணத்தை ஒன்று விடாமல் திருவரங்கத்தில் நடந்த விஷயங்களை கூறினார். உடனே, ‘‘நீவிர் எங்கு புறப்பட்டுச் செல்கிறீர்’’ என்று பெரிய நம்பிகள் வினவ, ராமானுஜர், காஞ்சிபுரத்தில் நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் கூறவே, பெரிய நம்பிகள் பொல பொலவென்று கண்ணீர் உகுத்தார். காரணம் காஞ்சி பேரருளாளன் இதயத்தில் எனக்கு ஒரு இடமா? பகவான் ஆணையாகில் அப்படியே செய்வோம்.’’ என்று கண்களில் நீர் பொங்க கூறினார்.
‘‘ராமானுஜரே! இன்றே உமக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்விப்போம்.’’ (கைகளில் சங்கும், சக்கரம் என்கிற திருவிலச்சினை பொறிக்கப் பெறுதல், பன்னிரு நாமங்கள் உடம்பில் பகவத் திருநாமங்களோடு சாற்றும்படி செய்தல், தாஸ்ய நாமம் பெறுதல், திருமந்திர உபதேசம் பெறுதல், சரணாகதி செய்துவித்தல் என்பது ஐந்து வகையான ஸம்ஸ்காரங்கள் ஒவ்வொரு வைணவனுக்கும் இன்றும் நடைபெற்று வருகிறது.) ‘‘பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்வித்து ஸம்ஸாரமாகிய கிணற்றில் விழுந்திருக்கும் அடியேனைக் கைதூக்கி விடவேண்டும்’’ என்று கூறிய ராமானுஜரைப் பார்த்து கூறியருளினார். ‘‘புண்ணியமான காஞ்சிபுரத்திலேயே உமக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்யப் பெறும்’’ என்றார்.
உடனே ராமானுஜரும், தெளிந்த சிந்தையராய், புன்சிரிப்புடன் கூறத் தொடங்கினார். ‘‘பேரறிவாளரே, அறிவாளிகளில் தலைவரே, சரீரம் நிலையற்றது, என்று அறியும் அடியேன் இன்று திடீரென்று உம்முடைய நியமனப்படி எப்படி நடக்க விரும்புவேன்? முன்பு ஆளவந்தாரைக்காண விரும்பி உம்மோடு காஞ்சிபுரத்திலிருந்து வந்தேன். ஆனால், நடந்தது என்ன? அவர் பரமபதித்து விட்டார் (காலகதியடைந்தார்) பொதுவாகவே, தூங்கும்போதும், உண்ணும்போதும், வழி நடக்கும்போதும், வாலிபனாய் இருக்கும்போதும், குழந்தையாய் இருக்கும்போதும் விதியானது மனிதனை மரணமடையச் செய்து, தன் வசப்படுத்துகிறது. இன்று இந்த காரியம் (இவனால்) செய்யப்பட்டது; அல்லது (இவன்) நாளை வேறொரு காரியத்தைச் செய்யப் போகிறான் என்று யமன் காத்திருப்பதில்லை.
ஆகையால் நன்மையை விரும்புகிறவன் நல்ல காரியத்தை தாமதித்துச் செய்வது எப்படிப் பொருந்தும்?’’ என்று விரிவாக உரைத்தார். ராமானுஜருக்கு இருக்கும் ஆர்வத்தைக் கண்டு, ‘‘உமக்கு இப்பொழுதே சக்ராங்கனம் பஞ்ச சம்ஸ்காரங்களை செய்கின்றேன். இங்கேயுள்ள குளத்தில் நீராடி வாரும். நாமும் நீராடி பரிசுத்தமாக ஆகி உமக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களை செய்விக்கிறோம்’’ என்றார். ராமானுஜரும் அவ்வாறே செய்தார். பெரியநம்பிகளும் காலையில் செய்ய வேண்டிய கர்மங்களைச்செய்து, அங்குள்ள வைணவ பெருமக்களோடுகூட மங்களமான விஷ்ணுவின் கோயிலையடைந்து, அக்னி பிரதிஷ்டை செய்து, முறைப்படி ஹோமங்களை அன்போடு செய்தார். அங்குள்ள, சக்ரத்தாழ்வாரையும், பாஞ்ச ஜன்யத்தையும் முறைப்படி ஆராதனம் செய்தார்.
கோதண்டத்தையும், அம்பையும் ஏந்தியவரான ராமபிரானின் சந்நதியில், சிஷ்யர்களிடம் அன்புடைய கருணைக்கடலான பெரிய நம்பி, முறைப்படி ஹோமம் செய்த அக்னியில் காய்ச்சிய சங்கு, சக்ரங்களைக் கொண்டு, எல்லா லக்ஷ்ணங்களும் பொருந்திய ராமானுஜருடைய தோள்களில் அடையாளம் செய்து, (அதாவது வலது தோளில் சக்கரப்பொறியும், இடதுதோளில் சங்குப் பொறியும்), மேலும், அந்த இளையாழ்வார்க்கு சம்ஸார ஆபத்தை அடைந்தவர்களை ரக்ஷிக்கும் த்வயம் என்னும் மந்திரத்தையும் அதன் உட்பொருளையும், தாஸ்ய நாமம் முதலியவற்றையும் அளித்தார். ஆசார்யரான பெரிய நம்பியால் இப்படி பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யப்பெற்ற ஸ்ரீமானான ராமானுஜர் சரத்கால சந்திரனைப்போல் பிரகாசித்தார்.
ஆசார்யரான பெரிய நம்பிகள், ராமானுஜரை ஸ்ரீவைஷ்ணவச் செல்வம் நிரம்பியவராகச் செய்து, எம்பெருமாளின் தாஸ்ய ஸாம்ராஜ்யத்தில் நாயகனாகப் பட்டாபிஷேகம் செய்வித்தார். பிறகு, அவரைக் குறித்து பெரிய நம்பி நல்வார்த்தைகளை அருளினார். ‘‘வைணவர் தலைவரே! இவ்வுலகில் யாமுனாசார்யருக்குப் பிறகு (ஆளவந்தாருக்குப் பிறகு) வைணவ தரிசனத்தை உருவாக்கும் ஆசார்யரான நீர் அனைவருக்கும் எல்லா விதத்திலும் ரட்சகராக விளங்கப் போகிறீர். அந்தந்த தேசங்களில் ஏற்பட்ட அவைதிக மதங்கள் (வேதத்தை ஒத்துக்கொள்ளாத மதங்கள்) பலவற்றையும் கண்டித்து, பகவானை ஸர்வ சேஷியாக நிலை நிறுத்துவதற்கு உமக்கே சக்தி உண்டு. உமது அதி ஆச்சர்யமான தேஜஸைக் கண்டதாலேயே நான் இவ்வாறு கூறுகிறேன். நீரே நம் வைணவ குல ரட்சகர்’’ என்று பலவாறு கூறியருளினார் பெரிய நம்பிகள்.



