மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே புனலரங்க மூரென்று போயி னாரே.
அரங்கன் தன் பக்கலில் உள்ளதைக் காட்டி என் பக்கலில் இருந்ததைக் கொள்ளை கொண்டு போனானே என்ன திருமங்கை ஆழ்வார் தலைவியானவளாய்ப் புலம்பித் தவிக்கிறார். இந்தப் பாசுரத்துக்கு ஒரு ரஸமான கதையும் உண்டு.
விக்கிரம சோழன். நல்ல தமிழ் ரசிகன். ஒரு நாள் அவன் அவையில் வைணவ, சைவ பண்டிதர்கள் இரு தரப்பும் தத்தமது பாடல்களைக் கூறி அவனை மகிழ்விப்பராம். அவனுக்கு என்ன மனத்தாங்கலோ..? அரசியைப் பிரிந்து அடுத்த தேசம் கிளம்பினானோ அல்லது, பட்டத்து ராணி பாராமுகம் காட்டினளோ என்னவோ? திடீரென ஒரு கேள்வி கேட்டான். தலைவன் பிரிந்திருந்தபோது, தலைவியின் நிலையை ரசமாகச் சொல்லும் பாட்டு ஏதாவது சொல்லுங்கள்.. என்று! வைணவ அறிஞர் இந்த “மின்னிலங்கு” பாசுரத்தைச் சொன்னாராம். சைவ அறிஞர் ஒரு பாடலைச் சொன்னாராம்.. (என்ன பாடல் என்பதை முன்னோர் சமுதாய நலன் கருதி தவிர்த்திருக்கிறார்கள்… இருந்தாலும், சாம்பல் பூசிய மேனி எனும் உவமையைக் காட்டியிருக்கிறார்கள்..) இரண்டையும் கேட்ட சோழன், “அடடா… மின்னிலங்கு திருவுருவும், பெரிய தோளும் நினைந்து நினைந்து நெஞ்சம் நெக்குருகி, தன் நெஞ்சைக் கொள்ளையிட்டுப் போன தலைவனை நினைந்து உருகும் இவளன்றோ தலைவி..! மற்றவளோ பிணந்தின்னி!” என்றானாம்.
இங்கே ஆழ்வார் பெண் தன்மையிட்டு பெருமாளின் திருவுரு அழகைக் காட்டிய இந்தப் பாசுரத்தை விடவும், எனக்கு என்னவோ மிகவும் பிடித்ததாயும், வசீகரிக்கும் தன்மையதாயும் இன்றுவரை தோன்றுவது நாச்சியாரின் வசீகரத் தமிழே!
என்னமாய் ழ-வும் ள-வும் ல-வும் கொஞ்சி விளையாடுகிறது?! அரங்கன் அழகு காட்டி என் உடல் உருக் குலைத்தானே என்று கைவளை கழல, உடல் மெலிவு கண்டு கதறித் துடிக்குமளவும் இயல்பாய் பெண்ணான கோதை காட்டும் உணர்வுபூர்வமான அந்த அழகு…!
எழிலுடைய அம்மனையீர் என் அரங்கத்து இன்னமுதர் – குழல் அழகர்; வாய் அழகர்; கொப்பூழில் எழு கமலப் பூ அழகர்; எம்மானார்! என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே! என்று கதறுங்காலை நம்முள்ளுணர்வு பக்தியின் பாற் கிளர்ந்தெழுமோ? அல்லையாயின் அன்பின் தன்மை உணரச் செய்யுமோ!? எல்லாம்தான்!!