
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
90. முன்னுரிமை எதற்கு?
ஸ்லோகம்:
சதம் விஹாய போக்தவ்யம் சஹஸ்ரம் ஸ்நானமாசரேத் !
லக்ஷம் விஹாய தாதவ்யம் கோடிம் த்யக்த்வா ஹரிம் பஜேத் !!
– ஆரிய தர்மம்
பொருள்:
நூறு வேலைகள் இருந்தாலும் நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். ஆயிரம் வேலைகள் இருந்தாலும் நேரத்திற்கு குளிக்க வேண்டும். லட்சம் செலவுகள் இருந்தாலும் தான தர்மத்திற்கு பணம் ஒதுக்க வேண்டும். கோடிக்கணக்கான வேலைகள் இருந்தாலும் கடவுளை வணங்குவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
விளக்கம்:
வேலைகளில் அழுத்தம் அதிகமாகி நம் முன்னுரிமைகள் தாறுமாறாகும் இந்த நாட்களில் அனைவருக்கும் உபயோகப்படும் இந்த சுலோகம் சிந்திக்க வைக்கிறது. இதன் கருத்து முன்னுரிமைகளின் மீது கவனம் கொள் என்று எச்சரிக்கை செய்கிறது.
எந்தப் பணியில் இருப்பவர் ஆனாலும் தலைமுழுகிப் போகும் வேலையில் இருந்தால், அசட்டை செய்வது உணவைத்தான். நேரம் கிடைக்காமல் பசியை அடக்கிக் கொள்பவர்களிடம் இந்த ஸ்லோகம் நூறு வேலைகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நேரத்துக்கு சாப்பிடு என்கிறது.
பசியோடு வேலை செய்தால் அதில் கவனக்குறைவு ஏற்படும். ஆர்வம் குறையும். பொறுமை இழப்போம். சரியான நேரத்திற்கு உணவு ஏற்காவிடில் உடல் நலம் கெடும். அதனால் நூறு வேலைகளை நிறுத்திவிட்டாவது நேரத்திற்கு சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்குக் கூட கொடுத்து வைக்காவிட்டால் அந்த செல்வம் எதற்காக?
சுலோகத்தின் இரண்டாவது முன்னுரிமை குளிப்பதற்கு அளிக்கப்பட்டுள்ளது. குளிப்பது என்றால் சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம். ஆயிரம் வேலைகள் இருந்தாலும் காலையிலேயே குளித்து விட வேண்டும். அடுத்தது தானம் பற்றி கூறுகிறார். லட்சம் செலவுகள் இருந்தாலும் தானம் செய்வதற்கு பணம் எடுத்து வைத்து விடவேண்டும்.
இந்தப் பிறவியில் நாம் வயிறு நிறைய சாப்பிடுகிறோம் என்றால் முற்பிறவிகளில் நாம் தானம் செய்ததால்தான் என்கிறது சாஸ்திரம். இறுதியாக கோடி வேலைகள் இருந்தாலும் கடவுளை வணங்க வேண்டும் என்கிறது சுலோகம்.
வேலை இருக்கிறது என்று கூறி இறைவழிபாட்டை ஒதுக்கி விடக் கூடாது. கடவுளுக்கு நன்றி செலுத்தும் பண்பு தினசரிக் கடமையாக வேண்டும்