
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருவூடல் உற்சவம் வெள்ளிக்கிழமை இன்று நடைபெறுகிறது. அதன் வரலாறு…
“கோபப்பட்ட அம்பிகையை குளிர்வித்த அக்னிமலையான்”
“திருவூடல்”: & “மறுஊடல்”
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருவூடல் உற்சவம்…
மனிதனின் இல்லற வாழ்வில் ஊடலுக்கு பின், கூடல் தத்துவத்தை விளக்கும் வகையில், அண்ணாமலையார் கோவிலில், அன்று இரவு திருவூடல் உற்சவம் நடைபெறும் .
கிரிவலப்பாதையில் பிருங்கி மகரிஷி என்ற முனிவர், பராசக்தி அம்மனை வழிபட மறுத்து, சிவனை மட்டும் நினைத்து தவம் இருந்து வந்தார். அவருக்கு காட்சி அளிப்பதற்காக, அண்ணாமலையார் தானே கிரிவலம் செல்லும் போது அவரை தடுத்த பராசக்தி அம்மன், தன்னை வணங்காத பிருங்கி முனிவருக்கு காட்சி அளிக்க கூடாதென, வேண்டுகோள் விடுத்தார். அதனால், ஸ்வாமிக்கும், அம்மனுக்கும் ஊடல் ஏற்பட்டது.
அம்மனின் வேண்டுகோளை ஏற்காமல், பிருங்கி மகரிஷிக்கு அண்ணாமலையார் காட்சி தந்தார். சுந்தரமூர்த்தி நாயனார் சமாதானப்படுத்த முயற்சித்தும், சமாதானமாகாத பராசக்தி அம்மன், குமரக்கோவிலில் இரவு தங்கினார்.
கிரிவலத்தின் போது, அண்ணாமலையார் அணிந்திருந்த நகைகளை, கொள்ளையர்கள் திருடி சென்றனர். நகைகளை பறிகொடுத்த அண்ணாமலையார், பராசக்தி தேவியை சந்தித்து, நடந்தவற்றை கூறினார். தன்னை மதிக்காமல் சென்றதால் தான், நகைகள் பறிபோனதாக, பராசக்தி மீண்டும் கோபமானார்.
ஆனால், தன் தவறால் தான், அண்ணாமலையாருக்கும், பராசக்திக்கும் ஊடல் ஏற்பட்டதாகவும், அண்ணாமலையார் நகைகளை பறிகொடுக்க நேர்ந்தது எனவும், பிருங்கி மகரிஷி தெரிவித்து, பராசக்தியையும் வணங்கினார். இதனையடுத்து, பராசக்தி சமாதானமடைந்ததாக, தல புராணம் தெரிவிக்கிறது.
இந்த அழகிய உற்சவக் காட்சியின் போது , அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனின் உற்சவ மூர்த்திகள் குறுக்கும் நெடுக்குமாக பக்தர்கள் சூழ, சுற்றுவதே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். காண்போரையும் பரவசப்பட வைக்கும்.
அருணாசலேஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் திருவூடல் தெரு என்று உள்ளது. இந்நிகழ்ச்சியை விளக்கிடும் வகையில், ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் நாளன்று அண்ணாமலையார் கோவிலில், ஸ்வாமிக்கும் பராசக்தி அம்மனுக்கும் திருவூடல் உற்சவம் நடைபெறும் .
திருவூடல் உற்சவத்தை முன்னிட்டு சுவாமிக்கு அன்று அதிகாலை மகா தீபாராதனை நடைபெறும் .பின்னர் காலை 6 மணியளவில் கோயிலின் திட்டிவாசலில் நந்திதேவருக்கும், சூரியனுக்கும் அண்ணாமலையார் தரிசனம் தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் . பின்பு கோவில் பிராகாரத்தில் சுவாமி மூன்று முறை வலம் வருவார்.

அதன் பின்பு இரவில் அண்ணாமலையார் கிரிவலம் செல்வார்.. அம்பாள் மட்டும் ஊடல் கொண்டவராக கோயிலுக்கு திரும்பி விடுவார். அப்போது கிரிவலம் வரும் அண்ணாமலையாருடன் அண்ணாமலையை கிரிவலம் நாமும் வந்தால் கிடைக்கும் நற்பலன்களை நாம் அளவிடமுடியுமா என்ன?…
திருஅண்ணாமலையில் நம் ஈசனே அண்ணாமலையாக திருகாட்சி தருகிறார். அதுவும் நம் அண்ணாமலையை நம் அண்ணாமலையாருடன் கிரிவலம் வருவது என்பது நம் முன்வினை தவபயனே. அன்று இரவில் அம்மனுடன் கோபித்துக் கொண்டு வரும் நம் அண்ணாமலையாருடன் நாமும் அண்ணாமலையை கிரிவலம் வந்தால்… பலகோடி முழுமதி நன்நாளில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த பெரும் பாக்கியம் நம் பரம்பரைக்கு கிடைக்கும் .
கெடுவினைகள் தொலைந்து ,நன்மைகளும் ,வாழ்வின் வசந்தங்களும் நம்மையும் ,நம் சந்ததிகளையும் சூழ்ந்து நிற்கும் . மறுநாள் காணும் பொங்கல் அன்று காலை கோயிலில் உள்ள கருவறை மண்டபத்தில் உள்ள உற்சவ மூர்த்தி சன்னதியில் “மறுஊடல்” என்ற உற்சவம் நடைபெறும்.
மனித வாழ்க்கையில் கணவன் மனைவியிடையே நடைபெறும் ஊடலைப் போன்று, இறைவன் மற்றும் இறைவிக்கும் நடைபெறும் ஊடலாகக் கொண்டது இந்த திருவூடல் உற்சவம். மாலை 6 மணிக்கு மேல் திருஅண்ணாமலை திருவூடல் தெருவில் இந்த ஊடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்…
திருமண தடை உள்ள பெண்கள் கணவன் கிடைக்கவும் – திருமண தடை விலகி நல் மனைவி கிடைத்திட திருமண தடை உள்ள ஆண்களும் இந்த திருவிழா நிகழ்வில் கலந்து கொண்டு வழிபட திருமண தடைகள் விலகி நல்வாழ்வு அமையும்!
- எஸ்.ஆர்.வி.பாலாஜி, திருவண்ணாமலை