October 26, 2021, 4:24 pm
More

  ARTICLE - SECTIONS

  திருப்புகழ் கதைகள்: பழம் நீ அப்பா, ஞானப்பழம் நீ அப்பா!

  இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு.

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ் கதைகள் பகுதி 72
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  அனைவரும் மருண்டு – திருச்செந்தூர்
  பழம் நீ அப்பா, ஞானப்பழம் நீ அப்பா

  கலகத்திற்கு பெயர் போன நாரதர் யாருக்கும் கிடைக்காத அரிய மாம்பழத்தை சிவபெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தார். அவரை பார்த்து சிவபெருமான், “என்ன நாரதா, கலகமூட்ட உனக்கு இன்று வேறு இடம் கிடைக்கவில்லையா?” என்றார். பிறகு பார்வதியிடம் பழத்தை கொடுத்து சாப்பிட சொன்னார். அவர் தனக்கு மாம்பழம் வேண்டாம் என்று மறுத்தார்.

  அந்த சமயத்தில் விநாயகரும், முருகப்பெருமானும் அங்கு வந்தனர். “பழம் எனக்குத் தான் வேண்டும்” என்று கேட்டனர். முதல் பிள்ளை என்பாதால் விநாயகரும், செல்லப் பிள்ளை என்பதால் முருகரும் பழத்தைக் கேட்டனர். உடனே பார்வதி பழத்தை ஆளுக்குப் பாதியாக பிரித்துத் தர முயன்றார்.

  அதனை சிவபெருமான் ஏற்கவில்லை. பழத்தை அப்படியே முழுமையாக சாப்பிட வேண்டும் எனக் கூறினார். பின்னர் அவர் “விநாயகா, குமரா, உங்களில் இந்த உலகை யார் முதலில் சுற்றி வருகிறீர்களோ… அவர்களுக்கு தான் இந்த ஞானப்பழம்” என்றார். மறுவினாடியே “உலகத்தை தானே… இதோ ஒரு நொடியில் சுற்றி வருகிறேன்” என்று முருகப்பெருமான் புறப்பட்டார். தனது வாகனமான மயில் மீது ஏறிப் பறந்தார்.

  Palani
  Palani

  ஆனால் பதற்றமின்றி நின்ற விநாயகர் சற்று யோசித்தார். பிறகு நாரதரைப் பார்த்து, “உலகம் என்றால் என்ன? அப்பன், அம்மை என்றால் என்ன?” என்று கேள்வி கேட்டார். இதைத்தான் எதிர்பார்த்திருந்து காத்திருந்த நாரதர் மகிழ்ச்சி அடைந்தார். “உலகம் என்றால் அம்மை, அப்பன். அம்மை-அப்பன் என்றால் உலகம் என்று அர்த்தம்” என்றார். நன்றாக சொன்னீர். அப்படியானால் என் தாய், தந்தையை சுற்றி வந்தால் இந்த உலகை சுற்றியதாக தானே அர்த்தம்? என்று விநாயகர் கேட்டார்.

  அதற்கு நாரதர், “ஆமாம். அதில் என்ன சந்தேகம்” என்றார். இதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த விநாயகர் சிவபெருமானையும், பார்வதி யையும் சுற்றி வந்தார். “உலகை சுற்றி வந்துவிட்டேன். பழத்தை எனக்கேத் தாருங்கள்” என்றார். அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமான், அவருக்கு பழத்தை வழங்கி ஆசீர்வதித்தார்.

  அந்த சமயத்தில் உலகை சுற்றி முடித்து விட்டு முருகப்பெருமான் மயிலில் இருந்து வந்து இறங்கினார். விநாயகர் கையில் பழம் இருப்பதைப் பார்த்ததும் முருகர் அதிர்ச்சி அடைந்தார். அவரது கோபம் அதிகமாயிற்று. கோபம் குறையாத முருகப் பெருமான் உடைகளைத் துறந்து, ஒரு முழுக் கோவணத்துடன் குன்றின் மீது வந்து அமர்ந்தார். முருகன் வந்து அமர்ந்த இடம்தான் பழனி என கூறப்படுகிறது.

  மாம்பழம் கிடைக்காமல் அவன் வந்து அமர்ந்த இடம் இது. முருகனை சமாதானப் படுத்த முயன்ற பார்வதி, முருகா நீயே ஞானப்பழம் உனக்கு எதற்கு பழம். பழத்தின் காரணமாக பழமான நீ வந்த அமர்ந்த இடம் இனி பழம் நீ என அழைக்கப்படும் என அருளினார்.

  பழம் நீ என்பதுதான் மருவி பழனி என்றாகிவிட்டது. மேலும் முருகன் கோபம் கொண்டு குன்றின் மீது அமர்ந்ததால் இனி குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும் என பார்வதி கூறினாள். இன்றும் தமிழகம் எங்கும் குன்றிருக்கும் இடமெல்லாம் முருகனை காணலாம்.

  பழனிமலை சில ஆர்வமூட்டும் தகவல்கள்

  பழனிமலையில் உள்ள தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. அவையாவன – நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகியவையாகும். பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது.

  இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

  ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

  இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

  தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

  தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம். அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும். இந்தச் சிலையை செய்ய போகர் ஒன்பது ஆண்டுகள் எடுத்துக்கொண்டார்.

  bhogar navapashanam
  bhogar navapashanam

  அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயாரித்தனர்.

  இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.

  அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இடும்பன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.

  bhogar murugan

  போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

  கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம். தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது.

  அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது. பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-