சைவ சமயத்தின் தலைமை பீடம் என்று சொல்லத் தக்க பெருமைகளை உடையது சிதம்பரம். பன்னிரு திருமுறைகளும் பாடும் தலம் இது. இக்கோயிலில் மூலவரே உற்சவர் உற்சவரே மூலவர்!
கோயிலின் மூல மூர்த்தியான நடராசருக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் தான் நடக்கும் நடராசர் தினம் ஆறு வேளை பூஜை கண்டாலும் ஆண்டுக்கு ஆறு முறைதான் அபிஷேகம் காணுவார் தேவர்களின் ஒருநாள் என்பது நமக்கு ஒரு வருடம் என்பார்கள்
ஒரு வருடத்தில் வரும் ஆறு பருவங்களும் தேவர்களுக்கு ஆறு வேளைகளாக இருப்பதால் நடராசருக்கு தேவர்களே வந்து அபிஷேகிக்கிறார்கள் என்கிற படி ஆண்டுக்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடக்கிறது இறைவன் மூன்று விதமாக தில்லையில் அருள் புரிவான் என்பார்கள் உருவமாக நடராசர் அருவுருவமாக படிக லிங்கம் அருவமாக சிதம்பர ரகசிய அறை என்பவை அவை இந்த அருவுருவ படிக லிங்கம் என்பது உள்ளங்கை அளவில் இருக்கும்
தினம் தினம் ஆறுகால பூஜையின் போதும் நடராசருக்கு நடக்க வேண்டிய அபிஷேகங்கள் இந்த படிக லிங்கத்துக்கு நடக்கும் ஆராதனை சோடச உபசாரங்கள் முதலானவை நடரசருக்கு நடக்கும் அதாவது நடராசருக்கு தினம் நடக்க வேண்டிய அபிஷேகத்தை படிக லிங்கமாக நடராசர் ஏற்கிறார்
ஆனால் ஆண்டுக்கு ஆறுமுறை நடக்கும் அபிஷேகம் நடராசர் திருமேணிக்கே நடக்கும் தில்லை அம்பலத்தில் தினம் நித்திய பூஜை செய்ய ஒரு தீக்ஷிதர் இருப்பார் அவருக்கு பணி என்னவென்றால் பொற்பேழையில் இருக்கும் உள்ளங்கை அளவு படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து மீண்டும் பேழையில் வைத்து நடராசர் அருகே வைத்து விட்டு சோடச உபசாரங்களையும் நடராசர் திருமேணிக்கு செய்வது மட்டுமே ஒரு கால பூஜை இடைவேளையில் சிறிது நேரம் மட்டும் அவருக்கு கிடைக்கும் அதில் பக்தர்களுக்கு சிறிது நேரம் திருநீறு கொடுப்பார் பிறகு மீண்டும் படிக லிங்க அபிஷேகம் செய்வார்
அம்பலத்தின் தென்கிழக்கு மூலையில் அனைவரும் பார்க்கும் வண்ணம் இந்த அபிஷேகம் நடக்கும் நடராசருக்கு ஆண்டுக்கு ஆறுமுறை நடக்கும் அபிஷேகங்களில் இரண்டு அபிஷேகம் ஆயிரங்கால் மண்டபத்திலும் மற்ற நான்கு அம்பலத்திலேயும் நடக்கும் இறைவன் திருமேணியை எந்நேரமும் அலங்காரங்கள் மறைத்திருப்பதால் இந்த ஆறு அபிஷேகங்களின போது மட்டுமே நடராசரை முழுமையாக கண்ணார கண்டு இரசிக்கலாம்
மார்கழி மாதம் திருவாதிரையும் ஆனிமாத உத்திரமும் தில்லையின் இரு பெரும் திருவிழா நாட்கள் இவ்விரு நாட்களிலும் பத்து நாள் திருவிழா கொடிஏற்றத்துடன் நடக்கும் கொடியேற்றத்தில் இருந்து எட்டு நாட்கள் பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் ஒன்பதாம்நாள் சாக்ஷாத் சிற்றம்பலமுடைய நடராசரும் சிவகாம சுந்தரியும் வீதியுலா வருவார்கள் ஒன்பதாம் நாள் அன்று நடராசரும் சிவகாம சுந்தரியும் சித்சபையில் இருந்து ஆரவாரமாக தேருக்கு எழுந்தருளுவார்கள் தில்லையின் நான்கு தேரோடும் வீதிகளும் வலம் வந்த பின் பேரம்பலம் என்று சொல்லக்கூடிய ஆயிரங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளுவார்கள் (இங்குதான் சேக்கிழார் பெரியபுராணம் அரங்கேற்றினார்)
அன்று இரவு நடராசர் திருமேணி சுற்றி திரையிட்டு மறைக்கப் பட்டிருக்க சிவனடியார்கள் இறைவன் திருமேணியை காண உடலெங்கும் விழியாக இரவு முழுவதும் காத்து கிடக்கும் காட்சிகள் மேனி சிலிர்க்க வைப்பது அதிகாலை இரண்டு மணிக்கு மேல் மூன்று மணிக்கு மேல் மாார்கழியில் திருவாதிரை மீனும் ஆனியில் உத்திரம் மீனும் கூடும் சுப வேளையில் திரை விளக்கி அபிஷேகத்துடன் நடராசர் காட்சி அளிப்பார்
அச்சமயம நமசிவாய நமசிவாய என்று பக்தர்கள் ஆஹாகாரம் செய்வதை கேட்கும் போது சைவத்தின் பெருமை புரியும் தொடர்ந்து கூடைகூடையாக திருநீறு குடம் குடமாக பால் தேன் தயிர் திரவியங்கள் பழங்கள் என்று இறைவனுக்கு காலை எட்டு மணி வரை அபிஷேகம் நடக்கும்
அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டி திரையிட்டு விடுவார்கள் இரண்டு மணியளவில் நடராசரும் சிவகாம சுந்தரியும் ஆனந்த தாண்டவம் ஆடிய படி மீண்டும் சிற்றம்பலத்துக்கு எழுந்தருள்வது தரிசனக்கட்சி எனப்படும் இதனோடு திருவிழா நிறைவடைகிறது “திருச்சிற்றம்பலம்”!
- குட்டி வேணுகோபால்