திருப்புகழ்க் கதைகள் 109
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
தோலொடு மூடிய – திருச்செந்தூர்
சிறிய திருவடி
அனுமன் தன் தோள்களின் மீது ஏறிப் போர் புரியுமாறு வைத்த வேண்டுகோளை ஏற்று இராமன் அவர் தோள்மீது ஏறினான். இதனை கம்பர்,
‘நன்று, நன்று!’ எனா, நாயகன் ஏறினன், நாமக்
குன்றின்மேல் இவர் கோள் அரிஏறு என; கூடி,
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர்; ஈன்ற
கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான்.
எனக் கூறுவார். அதாவது – தலைவனாகிய இராமபிரான் நல்லது நல்லது என்று சொல்லி அனுமன் வேண்டலையேற்று ஏறியமர்ந்தனன். புகழ் மிக்க மலையின் மேலே ஏறி நிற்கும் கொல்லும் வன்மை மிக்க சிங்க ஏறு என்று கூறி அப்போது தேவர்கள் வாழ்த்துக் கூறினர். ஈன்ற கன்றினைத் தாங்கிய பசுவைப் போல அனுமன் உளம் களி கூர்ந்தான்.
மாணியாய் உலகு அளந்த நாள், அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்;
காணி ஆகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும், தலை நடுக்குற்றான்.
மாவலிக்காக வாமனப் பிரம்மச்சாரியாய் மூன்று உலகங்களையும் (ஈரடியால்) அளந்த நாளில் அந்தப் பரம்பொருளின் வடிவத்தை சிறப்பாக உணர்ந்துள்ள அனுமன் வியப்பினையடைந்தான். திருமாலின் வடிவினைத் தாங்கும் பேற்றினை காணியாட்சியாக முன்பே பெற்றிருந்தவனாகிய ஒப்பற்ற கருடன் அப்பெருமை அனுமனால் பங்கிடப்பட்டதறிந்து) வெட்கமுற்றான். இறைவனைத் தாங்கும் மற்றொருவனாகிய ஆதிசேடனும் தலை நடுக்கம் கொண்டான்.
ஓங்கி உலகளந்த பெருமான் வடிவமதனை, தான் தாங்க நேர்ந்த செயலை எண்ணி அனுமன் வியப்புற்றான். “பத்துடையடியவர்க் கெளியவன்; பிறர்களுக்கரிய வித்தகன் நம் அரும்பெறல் அடிகள்” என்னும் இறைவனின் அன்பைச் சிறப்பாக உணர்ந்துள்ள அறிஞன் மாருதியாதலின், “அவனுடை வடிவை ஆணியாய் உணர் மாருதி” என்றார்.
உலகளந்த நாளில். இவ்வுலகம் முழுதும் அவன் ஒரு திருவடிக்கு உள்ளடங்கினதாக, இன்றோ அவன் திருவடிவம் முழுதும் தன் தோள்களுக்குள் அடங்கி நிற்பது கண்டு, “அதிசயம் உற்றான்” என அழகுறக் கூறினார்.
பரம்பொருளின் திருவடிவைத் தாங்கும் பேற்றைப் பரத்திலும் வியூகத்திலும் பெற்றுள்ள திருவனந்தாழ்வானும், கருடனும், இந்த அவதாரத்தில் பெருமானைத் தாங்கும் பேற்றினை அனுமன் பெற்றமை குறித்து நிலை குலைந்தனர் என்பார்; “கலுழன் நாணினன்;” “அனந்தன் தலை நடுக்குற்றான்” என்றார். திருவடி தாங்கும் பேற்றால் கருடன் “பெரிய திருவடி” என்றும், அனுமன் “சிறிய திருவடி” என்றும் வைணவர்களால் போற்றப்படுவது மரபாயிற்று.
ஓதம் ஒத்தனன் மாருதி; அதன் அகத்து உறையும்
நாதன் ஒத்தனன் என்னினோ, துயில்கிலன் நம்பன்;
வேதம் ஒத்தனன் மாருதி; வேதத்தின் சிரத்தின்
போதம் ஒத்தனன் இராமன்; வேறு இதின் இலை பொருவே.
அனுமன் பாற்கடலை ஒத்தான்; அக்கடலிடத்தே அறிதுயில் கொண்டு தங்குகின்ற திருமாலை இராமபிரான் போன்றான் என்றால் தலைவனாம் அந்த இராமபிரானோ (அனுமன் மேல்) உறங்குகின்றான் இல்லை. பின் எந்தவுவமை கூறலாம் எனில் அநுமன் நான்கு வேதங்களைப் போன்றவன் ஆனான். இராமபிரானோ வேதத்தின் சிரம் என்று புகழப்படும் வேதாந்த ஞானத்தின் தெளிவைப் போன்றவன் ஆனான் என்று கூறலாம். இதனை விடச் சிறந்த உவமையே கூறுவதற்கில்லை.
அனுமன் கற்றுள்ள கல்வியின் ஆழமும் பெருமையும் அனுமனுக்கு நான்கு வேதங்களையும் இராமனுக்கு வேதங்களின் சாரமாய்த் திகழும் பரம்பொருளையும் உவமித்தார் கவிஞர் பிரான். வேதங்களின் ஞானத்தைச் சாரமாய்ப் பிழிந்து தன் வாழ்வால் உலகுக்கு வாழ்ந்து காட்டியவன் இராமபிரான். ஆதலின், “வேதத்தின் சிரத்தின் போதம் ஒத்தனன்” என்றார்
தகுதியாய் நின்ற வென்றி மாருதி தனிமை சார்ந்த
மிகுதியை வேறு நோக்கின், எவ் வண்ணம் விளம்பும் தன்மை?
புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுறப் புலத்து நோக்கும்
பகுதியை ஒத்தான்; வீரன், மேலைத் தன் பதமே ஒத்தான்.
இராமபிரானுக்குத் தக்கதொரு ஊர்தியாக நின்ற வெற்றி பொருந்திய அனுமனின் தனித்தன்மை மிகுந்த சிறப்பினை எவ்வண்ணம் விளக்குவது?; பிறிதொரு வகையாக அச்சிறப்பை) நோக்குவோம் ஆயின், ஞானம் மிக்கோர்க்கு உதவுவதாகிய வேதமானது பொதுவாகத் தன் அறிவால் நுழைந்து நோக்கிக் கூறுகின்ற மூலப் பகுதியை ஒத்தான் (அனுமன்) வீரனாகிய இராமன் அம்மூலப் பகுதிக்கும் மூலமாய் மேலே உள்ள தன் பரம பதத்தினையே ஒத்து விளங்கினான் எனலாம்.
இத்தகைய சிறப்புடைய சிறிய திருவடியான அனுமனை அருணகிரியார் இத் திருப்புகழில் பாடியுள்ளார்.