spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ஸ்பெஷல்: திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்!

ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ஸ்பெஷல்: திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்!

- Advertisement -

-K.G. ராமலிங்கம் –

ஓம் ராமாநுஜாய வித்மஹே ஸ்ரீ தாஸரதாய தீமஹி
தன்னோ சேஷ ப்ரசோதயாத்

ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ஸ்பெஷல் !

இதை அறிந்தோர் பாக்கியசாலிகள். திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ?

ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர் விற்கும் அம்மையார் வைணவ ஆச்சார்யார் ஸ்ரீ ராமானுஜரிடம் தெரிவித்த 81 கருத்துக்கள்தான் இந்த ரகசியம்.

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருத்தலம் திருக்கோளூர். 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்று. தாமிரபரணிப் படுகையில் உள்ள நவ திருப்பதிகளிலும் ஒன்று.

பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரின் ஜென்மஸ்தலம். திருக்கோளூர் என்றாலே ‘தேடிப் புகும் ஊர்’ என்கிறார்கள் ஆச்சார்யார்கள்.

அத்தகைய இந்த ஊருக்கு ராமானுஜர் ஓர் அதிகாலை வேளையில் வருகிறார், அந்த காலை வேளையில் ஒரு மோர் விற்கும் அம்மையார் ஒருவர் வியாபாரத்திற்காக ஊரை விட்டு வந்து கொண்டிருப்பதை கண்ணுற்ற ராமானுஜர், ‘புகும் ஊருக்கு நாங்கள் வரும் போது நீங்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறீர்களே’ என்று கேட்கிறார்.

அதற்கு, ராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறும் தெரிந்த அந்த அம்மையார், வெகு இயல்பாக,

‘அழைத்து வருகிறேன் என்றேனோ அக்குரூரரைப் போலே’, ‘அகல் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே’ எனத் தொடங்கி ‘துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே’ என முடியும் 81 விஷயங்களைக் கூறி, ‘அப்பேர்ப்பட்ட நபர் நான் அல்ல, எனவே வெளியேறிக் கொண்டிருக்கிறேன்’ என்று பாண்டித்யமாக பதில் அளிக்க. அந்த 81 வாக்கியங்களில் அவர் வைணவத்தைச் சாறாகப் பிழிந்து தருகிறார். அதைக் கேட்ட ராமானுஜர், சாதாரண தயிர்விற்கும் பெண்மணிக்கே இந்த ஞானம் இருக்கும் எனில் நிச்சயம் இது புக வேண்டிய ஊர்தான் என அம்மையாரைப் பணிகிறார். பின்னாளில் அந்த அம்மையாரும் ராமானுஜரின் சீடராகிறார். இந்த கதை யாரும் அறிந்ததே.

மேலக்கோட்டை

மைசூரில் இருந்து தும்கூர் செல்லும் வழியில் ஜக்கனஹள்ளி. அதற்கு அருகே உள்ள ஊர் தான் Melkote என்னும் மேலக்கோட்டை.

சோழ அரசன் சொந்த ஊரில் மத வெறி கொண்டு அலைகிறான். இறைப்பணி இடையறாது நடக்க வேண்டுமே என்று இராமானுஜர் திருவரங்கத்தில் இருந்து இந்த ஊர் பக்கம் வருகிறார்.

ஊர்க் கோவில் மண்மேடாய் கிடக்கிறது. மக்களைக் குறை சொல்ல முடியுமா? பாவம், தவிச்ச வாய்க்குத் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்!

பார்த்தார் இராமானுஜர்! அகண்ட காவிரியைப் பார்த்துப் பழகியவர் ஆயிற்றே! முதலில் மக்கள் பணி! பின்பு மாயவன் பணி!!

தொண்டனூர் என்னும் பக்கத்து ஊரில் நீர் தேக்கி வைக்க பெரிய ஏரி ஒன்றை வெட்டு விக்கலாம் என்று ஏற்பாடுகள் செய்கிறார். தொண்டனூர் நம்பி என்ற அவர் சீடர், இதற்குப் பெரிதும் உதவி!

பின்பு இந்த வறண்ட ஊரில், கல்யாணி குளம் என்ற குளம் ஏற்படுத்தி, அடிக் கால்வாய் மூலமாக அதில் நீர் நிறைத்தார். பின்பு நீர் வண்ணனையும் மனக் குளத்தில் நிறைத்தார்!

கோவில் பணிகள் கிடுகிடுவென்று தொடங்கின! மண்ணில் புதையுண்ட மூலவர் விக்ரகம் – திருநாராயணப் பெருமாளைக் கண்டு எடுக்கிறார்.

ஒரு காலத்தில் சிறப்பாய் விளங்கிய ஆலயம் இப்படிக் கவனிப்பார் இன்றி ஆகி விட்டது! பேசாமல் விட்டு விட்டு வேறு செழிப்பான கோவிலுக்குப் போய் வசதியாகச் சாப்பிட்டுக் கொண்டே பணி செய்யலாமே! அவருக்கு வயது வேறு 80ஐ நெருங்குகிறது! ஆனால் உடையவர் இராமனுஜருக்கு மனசு வருமா?

புதிதாக ஆயிரம் ஆலயங்கள் எழுப்பவதற்கு முன், சிதிலமானவற்றைச் சீரமைக்கலாம் இல்லையா? கோவில் சீரமைப்பு முழு வீச்சில் நடக்கிறது.

மூலவரைப் போல் உற்சவர் ஒருவர் இருக்க வேண்டுமே! எங்கே அந்தத் திருவுருவம்?

பிஜப்பூர் சுல்தான் முன்னொரு படையெடுப்பில் வந்து பல செல்வங்களையும் சிலைகளையும் கவர்ந்து கொண்டு போய் விட்டான் ஐயா. இனி கேட்டாலும் அந்த ராமப்ரியன் என்ற தங்க விக்ரகம் கிடைக்காது – மக்கள் எல்லாரும் சொல்ல, இராமானுஜர் ஒரு கணம் சிந்தித்து, தாமே சுல்தானிடம் போய் உற்சவரைப் பெற்று வருவதாகச் சொல்கிறார். வயதான காலத்தில் கால் கடுக்க நடந்து சுல்தானின் மாளிகையை அடைகிறார்.

சுல்தான் முதலில் சற்று ஏளனமாகப் பேசினாலும், பின்பு இராமானுஜரின் அன்பையும் அறிவுக் கூர்மையும் கண்டு சற்றே மனம் மாறுகிறான். வேறு எந்தப் பொருளும் தரமாட்டேன். இந்தப் பொம்மையை மட்டும் தான் தருவேன்! சம்மதமா நாமக்காரப் பெரியவரே?

மன்னா, மற்ற செல்வம் எல்லாம் கேட்க மாட்டேன். செல்வத்துள் செல்வம் மட்டுமே எனக்கு வேண்டும். செல்வப் பிள்ளை அவன். சம்பத்குமாரன் என்பது தான் அவன் முழுப் பெயர். இருந்தாலும் செல்வப் பிள்ளை என்று தான் ஆசையாய் அழைக்கிறோம்! அவனை மட்டும் தாருங்கள் அரசே….

ஆகா….என்ன? ஆட்கள் எவ்வளவு தேடியும் எங்கும் கிடைக்கவில்லையா! எங்கே போய் இருக்கும்? நான் களவாடிய பொருளையே களவாடிய களவாணிப் பயல்கள் யார்?….ஞாபகம் வந்து விட்டது. என் ஆசை மகள் லச்சமார் சுல்தானி தான் அதை விளையாட எடுத்துப் போனாள்?

இராமானுசருக்கு கண் கலங்கி விட்டது.

பருவ மங்கை சுல்தானி, தந்தையின் சபைக்கு வருகிறாள். இராமானுஜரின் கண்கள் எல்லாம் கரியவன் மேலேயே உள்ளது.

ஆனால்…அப்பா, இது என் ஆசை பொம்மை மட்டும் இல்லை; இதன் அழகைப் பாருங்களேன்! இதழில் எப்படி குறுஞ்சிரிப்பு சிரிக்கிறது! நான் எங்கு சென்றாலும், இதை எடுத்துக் கொண்டு தானே செல்வேன். இதை எப்படி வாப்பா என்னால் தர முடியும்? போங்க வாப்பா! தர முடியாது! தூங்கும் போது கூட, இதை கட்டிக் கொண்டு தானே தூங்குவேன்!

நடந்த திருக்கோலம் என்பார்களே! இது தானா உலகளந்த உன் பராக்கிரமம்?

இராமானுசர் எவ்வளவு கேட்டும், விக்ரகத்தைத் தர மாட்டேன் என்று அடம் பிடித்தாள் சுல்தானி. சின்ன வயசுப் பெண் தானே! அரசனுக்கோ தர்ம சங்கடம். தருகிறோம் என்று ஜம்பமாய் சொல்லி விட்டோமே! ஆசை வார்த்தைகள்,வேறு பொம்மைகள் என்று காட்டினான் – எதற்கும் மசியவில்லை சுல்தானி. பெண்ணை மிரட்டினான்! உறுமினான்!

வேண்டாம் என்றார் உடையவர். “குழந்தாய்….! சரி, நீ தர வேண்டாம். உன் கையிலேயே வைத்துக் கொள்! ஆனால் அதுவாக என்னிடம் ஓடி வந்தால் நான் எடுத்துக் கொள்ளட்டுமா?”

“இந்தத் தாத்தாவுக்கு கிறுக்கு பிடித்து விட்டது போலும். வாப்பாவைக் கேட்டாலே மிரட்டி வாங்கிக் கொடுத்து விடுவார். பாவம் தாத்தா, நல்லா ஏமாறப் போகுது”

சிரி சிரி என்று சிரித்துக் கொண்டாள். சரி சரி என்று தன் தலையை சரித்துக் கொண்டாள்!

இராமானுசர், இறைவனை மனதில் துதித்து,
“என்ன திருவிளையாட்டோ இது! இருப்பிடம் ஏகுவீர் பெருமானே”
என்று பிரார்த்தித்தார்.

தன் கருணை பொழியும் கண்களால், பெருமாளையே அன்புடன் பார்த்துக் கடாட்சித்து, எந்தை வருக, ரகுநாயகா வருக, என் கண் வருக, எனது ஆருயிர் வருக! வாரும் செல்வப் பிள்ளாய், வாரும் செல்வப் பிள்ளாய்…என்று அழைக்க….

ஆ…என்ன அதிசயம்!
செல்வப் பிள்ளை விக்ரகம், அவள் மடியை விட்டு நீங்கி, சாவி கொடுத்த பொம்மை போல், சிறு சிறு அடியாய் நகர்ந்து, இராமானுசரின் கரங்களுக்குள் வந்து விட்டது!

நன்றி மன்னா! குழந்தாய், நாங்க வருகிறோம்! – இராமானுசர் சொல்ல, அவருடன் கோஷ்டியும் கிளம்பி விட்டது! இது என்ன, கண் முன்னே கண் கட்டு வித்தையா? சபையில் எல்லாரும் வாயடைத்துப் போய் நிற்க, சுல்தானிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை!

நீங்களே பாருங்கள் செல்வப் பிள்ளையை, அவன் திருமுகத்தை, அவன் பொம்மையாக இருந்து தேய்ந்து போன தழும்புகளை!

அன்று முதல் சுல்தானி, பித்துப் பிடித்தவள் போல் ஆகி விட்டாள்.
ஊண் இல்லை, உறக்கம் இல்லை! கட்டியணைத்து உறங்கிய பொம்மையும் இல்லை! பெற்றோர் என்னென்னவோ செய்து பார்த்தார்கள்! அதை விட விசேடமான பொம்மைகள், ஆட்டம் போடும் பதுமைகள்! – ஹூம்…ஒன்றும் சரி வரவில்லை! பார்த்தான் அரசன்; இராமானுசர் குழாத்தைத் தடுத்து நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டான்!

ஆனால் காலம் கடந்து விட்டது! அவர்கள் எல்லையை விட்டு எப்போதோ போய் விட்டார்களே! “மோசக்காரர்கள், கொள்ளையர்கள், கண்கட்டி வித்தைக்காரர்கள்” – அரசன் சீறினான்!

கொள்ளையடித்த பொருள் கொள்ளை போனால் கொள்ளையர்கள் மற்றவரைக் கொள்ளையர்கள் என்று கூவுவது வாடிக்கை தானே!

“வேண்டாம் வாப்பா, நானே போய் அந்தத் தாத்தாவிடம் கேட்டு வாங்கி வருகிறேன்! என்னுடன் சில ஆட்களை மட்டும் அனுப்புங்கள்” கிளம்பி விட்டாள் சுல்தானி;

அவள் புறப்பட்டு சென்றதை கேட்ட பக்கத்து நாட்டு இந்து இளவரசன் குபேர், அவள் பின்னாலேயே கிளம்பினான் பாதுகாப்பாக! ஏனெனில் அவனுக்கு இவள் மேல் ஒரு காதல்! ஆம்.. காதல்!!

மேலக்கோட்டை நெருங்கும் போது ஒரு சோதனை! வழியில் வழிப்பறிக் கொள்ளையர்கள்! நாமக்காரப் பசங்க, ஆண்டிகள் தானே என்று விட்டுவிட்டனர்; சற்று தொலைவு போனதும் தான் இராமானுசர் கையில், துணி மூடியுள்ள, ஜொலிக்கும் மூர்த்தியைப் பார்த்தார்கள்.
அடடா, பெருமாளைத் துரத்திக் கொண்டு பின்னே செல்ல இத்தனை கொடியவரா, இல்லை இவர்கள், கொடி-அடியவரா?

ஒரு கிராமத்துக் குடியிருப்புக்குள் அந்தக் கோஷ்டி புகுந்தது. அதுவோ ஒரு புலையர் சேரி! உடையவர் ஒரு குடிசையில் உதவி கேட்டு உள்ளே புகுந்தார். உடன் வந்த மற்றவர்க்கோ தயக்கம்! ஆனாலும் உடையவர் பேச்சுக்கு மறு பேச்சு ஏது? சேரி மக்கள் கொள்ளையரைத் திசை திருப்பி அனுப்பி விட்டனர்;

இராமானுசர் வெளியில் வர, துணிக்குள் என்ன சாமீ, என்று ஆர்வமாய்க் கேட்டனர் சேரி மக்கள்!

துணிக்குள் இருக்கும் செல்வப் பிள்ளையைப் பார்த்தவுடன், சேரி மக்களுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை! குடிசைக்குள் ஓடிப் போய், கம்பங்கூழும், வாழைக்காயும் எடுத்து வந்து கண்ணனின் காலடியில் வைத்தனர். இவர்களின் தூய அன்பைக் கண்டு இராமானுசர் கண் கலங்கினார். “வாருங்கள் என்னுடன் கோவிலுக்கு; செல்வப் பிள்ளையை நிறுத்தி வைக்கலாம்” என்று அழைத்தார்.

நடுநடுங்கி விட்டனர் சேரி மக்கள்; இராமானுசர் கூட வந்தவர்கள் சில பேருக்குக் கூட இது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை!

ஆனால் இந்தச் “சீரங்கத்துச் சாமியார்” விடுவதாக இல்லை! கணவன் நாரணனைக் காத்ததால், அவன் மனைவி, லட்சுமியின் வீட்டார் இவர்கள்; திருவின் வீட்டார்! தீட்டுக் குலம் என்பதை மாற்றித், திருக்குலம் என்று ஆக்கினார். திருக்குலத்தார் என்று பெயரும் சூட்டினார்.

800 ஆண்டுகள் பின்பு வந்த காந்தியடிகள் #ஹரிஜன் (ஹரியின் மக்கள்) என்று சொல்வதற்கு முன்பே, சொல்லிவிட்டு செயலிலும் செய்து காட்டிய தீரர் ஆனார் இராமானுசர்.

மேலக்கோட்டை திருநாராயணன் ஆலயத்தில், உற்சவர் செல்வப் பிள்ளையின் விக்ரகம் குடி கொண்டாகி விட்டது! வழிபாடுகளும் தொடங்கி விட்டன!

பின்னால் துரத்திக் கொண்டு வந்த சுல்தானி…அரசனின் செல்வப் பெண், துரும்பாய் இளைத்துப் போய் விட்டாள்; கலைந்த கூந்தலும் ஒட்டிய தேகமுமாய் அவளைப் பார்த்தால் ராஜகுமாரி என்றே சொல்ல முடியாதபடி வந்து சேர்ந்தாள், நொந்து நூலாய்!

கண்ணன்காலடியில்…

உற்சவர் ஆகி விட்ட தன் கண்ணனைப் பார்த்து விட்டுக் கண் கலங்கினாள், சுல்தானி. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று அவளுக்குத் தெரிந்து விட்டது! கத்திக் கலாட்டா செய்ய வில்லை. ஆனால் கண்ணீரும் நிற்கவில்லை!

இரு கை தலை மேல் குவித்தாள்!
மூர்ச்சை ஆனாள். மயங்கி ஒடுங்கி, கீழே விழுந்தாள்! உயிர் பிரிந்தாள்!

அனைவரும் பயந்து விட்டார்கள்! இராமானுசருக்குச் சேதி சொல்லப் பட்டது! கண் கலங்கினார்; அவருக்குத் தெரியும் அவள் கதி என்னவாயிற்று என்று!

கண்ணன் கழலினை எண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே…..
உனைத் தொடர்ந்தாள்; சிக்கெனப் பிடித்தாள்; எங்கு எழுந்து அருளுவது இனியே? புகல் ஒன்று இல்லா அடியாள், அவன் திருவடியின் கீழ் அமர்ந்து விட்டாள்!

அவளுக்கு வேண்டிய மரியாதைகள் குறைவின்றிச் செய்யப்பட்டன. அவளைப் பின் தொடர்ந்து வந்த காதலன் குபேர் கதறி அழ, அவனைத் தேற்றி, மனச்சாந்தி பெற, பூரி ஜெகன்னாதர் ஆலயம் அனுப்பி வைத்தனர்.

அவள் சிறிய உருவத்தினை, மூலவரின் திருவடிகளில் செய்து வைத்தார், இராமானுசர்! இன்றளவும் ஆலயத்தில் ஸ்ரீ பாத தரிசனத்தின் போது, அவளுக்கு ஆரத்தி காட்டுகிறார்கள்!

துலுக்கராய்ப் பிறந்து, துழாய் மாலை வாசனை அறியாத போதும்,
பரந்தாமனிடத்தல் தன்னையே பறி கொடுத்தவள் – அதனால் அவர் வெறும் நாச்சியார் இல்லை! துலுக்க நாச்சியார்!

எம்பெருமானார் திருவடிகளே சரணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe