spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: நெச்சுப் பிச்சி – திருவேங்கடம்

திருப்புகழ் கதைகள்: நெச்சுப் பிச்சி – திருவேங்கடம்

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் 342
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நெச்சுப் பிச்சி – திருவேங்கடம்

            அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி ஐம்பதாவது திருப்புகழான “நெச்சுப் பிச்சி” எனத் தொடங்கும் திருப்புகழ் திருவேங்கடம் தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “திருவேங்கட முருகா, எல்லாவற்றையும் தரும் உமது திருவடியையே வழிபட்டு உய்ய அருள்வாயாக” என வேண்டுகிறார். கரடுமுரடான சந்தக் கட்டு உடைய திருப்புகழ் இது. இனி திருப்புகழைக் காணலாம்.

நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்

   கச்சிக் கச்சுற் றறன்மேவி

நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய

   நிரைதரு மருமலர் செருகிடு பரிமள

      நிறையுறை மதுகர …… நெடிதாடி

நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற்

   றொப்புக் கொப்புக் குயர்வாகி

நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை

   நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு

      நிகழ்புழு கொழுகிய …… குழன்மேலும்

வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட்

   டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல

வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன்

    மதசிலை யதுவென மகபதி தனுவென

       மதிதில தமும்வதி …… நுதன்மேலும்

மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப்

   பொற்பக் கத்திச் சையனாகி

 மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத

     மலரல திலைநிலை யெனமொழி தழியமெய்

       வழிபட லொழிவனை …… யருள்வாயே

நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத்

   துட்டக் கட்டத் தசிகாண

நடத்தி விடத்தை யுடைத்த படத்தினில்

   நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில்

      நகைமுக திருவுறை …… மணிமார்பன்

நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத்

   தைக்கைப் பற்றிப் பொருமாய

னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற

   நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த

      நரகரி யொருதிரு …… மருகோனே

கச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப்

   பட்டுக் குட்பட் டமுதாலுங்

கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு

   கனதன பரிமள முழுகுப னிருபுய

      கனகதி வியமணி …… யணிமார்பா

கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப்

   பட்சிக் கக்கொட் டசுராதி

கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு

    கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு

       கடவட மலையுறை …… பெருமாளே.

            இத்திருப்புகழின் பொருளாவது – நஞ்சினை உண்ட பீமன் அந்த விஷத்தால் அழியாது நலம் பெறவும், நதியில் நாட்டியிருந்த ஈட்டிகளை அவன் கண்டு அதனின்றும் தப்பித்து அவன் பிழைக்க அருளியும், விஷம் கக்குமாறு காளிங்கன் என்ற பாம்பின் படத்தின் மீது நடித்தும், சமுத்திரத்தின் மீது கணையைச் செலுத்தியும் அருளிய நீலமேக வண்ணரும் புன்னகையுடைய திருமுகம் தாமரை போன்ற கரங்களில் ஏந்திப் போர்புரியும் மாயா வல்லபரும், நரிகட்கும் வாளுக்கும் நெருப்புக்கும் அரக்கர்களின் குடலை உணவாக இட்டவரும் நரகாசுரனைக் கொன்றவருமாகிய ஒப்பற்ற திருமாலின் திருமருகரே;

            வள்ளிநாயகியின் நறுமணத்தில் முழுகும் பன்னிரு தோள்களையுடையவரே; பொன்னில் பதித்த சிறந்த மணிகளை அணிந்த திருமார்பினரே; கைவேல் ஆரவாரஞ் செய்தும் முற்றும் உண்ணுமாறு வாத்திய ஒலிவுடன் வந்த அசுரர் தலைவனாம் சூரனை கருநிறமுடைய அரக்கர் குலத்துடன் கோபித்து அழித்த இளம் பூரணரே; வழியுடன் கூடிய காடுகள் சூழ்ந்த திருவேங்கடமலையில் வாழும் பெருமிதம் உடையவரே;

            தேன் பொருந்திய பிச்சி மலரின் குளிர்ச்சியைக் கொண்டதாய், கச்சிதமாக முடிந்ததாய், கருமணலை ஒத்ததாய், சுருண்டு மணமுள்ளதும் இருளை அச்சுறுத்தியும் வாசனை மலர்களை வரிசையாகச் சொருகியுள்ளதாய் நறுமணத்தில் வாழ்கின்ற வண்டுகள் மொய்த்து மகிழவும், இரவை பயப்படுத்திச் சிக்கலில்லாததாய், அலங்காரத்தில் மென்மேலும் உயர்ச்சி அடைந்ததாய், நெளிவும் சுருளும் உற்றதாய், விருப்பத்தைத் தந்து அழைப்பதாய், அஞ்சன மைக்கு ஒப்பு கமழ்கின்றதாய் விளங்கும் கூந்தலின் மீதும், பச்சைப் பொட்டு இட்டு அதன் நடுவில் சிவந்த பிரபை போல வளைத்த செழிப்புள்ள பிறைக்கு ஒப்பாக உறைவதாய் மன்மதன் வில்லையும் வானவில்லையும் ஒத்து சந்திரனை நிகர்ந்த திலகம் அமைந்துள்ள நெற்றியின் மீதும், உடம்பிலுள்ள மச்சங்களின் மீதும் அழகிய அதிசயமான சிவந்த உடம்பின் பக்கத்திலும் ஆசையுற்று, மனதில் நினைத்ததை யாவும் தருகின்ற உமது திருவடி மலரன்றி வேறு நிலையான பொருள் இல்லையென்று சொல்லுகின்ற மொழிகளைத் தழுவிய உண்மையான வழிபாடு செய்வதை விடுத்த அடியேனுக்குத் திருவருள் புரிவீராக – என்பதாகும்.

இத்திருப்புகழில் வீமனின் கதை, கிருஷ்ணபரமாத்மாவின் சில கதைகள், முருகப் பெருமான் சூரனை வதைத்த கதையும் இடம்பெறுகிறது. இவற்றை நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe