
இந்தியா – தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் போட்டித்தொடர்
இந்தியா தொடரை வென்றது
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் இடம்பெற்றிருந்தனர். பும்ரா, ஜதேஜா இடம்பெறவில்லை. இந்திய அணி முதலில் விளையாடி எட்டு விக்கட் இழப்பிற்கு 349 ரன் எடுத்தது. விராட் கோலி 135 ரன் எடுத்தார். இரண்டாவதாக ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 332 ரன் எடுத்து ஆட்டத்தில் தோல்வி அடைந்தது.
இரண்டாவது ஆட்டம் ராய்ப்பூரில் நடைபெற்றது. இந்திய அணி முதலில் விளையாடி ஐந்து விக்கட் இழப்பிற்கு 358 ரன் எடுத்தது. விராட் கோலி 102 ரன்னும் ருதுராஜ் கெய்க்வாட் 105 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 362 ரன் எடுத்து வெற்றி பெற்றது. எய்டன் மர்க்ரம் 110 ரன், ப்ரீஸ்டேக் 68 ரன், டிவால்ட் ப்ரிவிஸ் 54 ரன், பவுமா 46 ரனூம் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஷதீப் சிங் 5.4 ரன்ரேட்டிலும், ஜதேஜா 5.85 ரன்ரேட்டிலும் பந்துவீசினர். மீதமுள்ள பந்துவீச்சாளர்கள் ரன்களை அள்ளிக்கொடுத்தனர்.
மூன்றாவது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 6, 2025இல் நடைபெற்றது. முதலாவதாக ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன் எடுத்தது. க்விண்டன் டி காக் 106 ரன், பவுமா 48 ரன் எடுத்தனர். இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா 4/66, குல்தீப் யாதவ் 4/41 விக்கட்டுகள் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணியில் யசஷ்வீ ஜெய்ஸ்வால் (ஆட்டமிழக்காமல் 116 ரன்), ரோஹித் ஷர்மா (75 ரன்), விராட் கோலி (ஆட்டமிழக்காமல் 65 ரன்) எடுத்தனர். இந்திய அணி 39.5 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 271 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா ஒருநாள் ஆட்டங்களில் 20000 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று விதமான ஆட்டங்களிலும் சதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் ஆனார். இவ்வாறு இந்திய அணி இந்தத் தொடரை 2-1 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிபெற்றது. தொடர் நாயகனாக விராட்கோலி அறிவிக்கப்பட்டார்.
அடுத்து டி-20 தொடர் நடைபெறவுள்ளது. மொத்தம் ஐந்து டி-20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல் ஆட்டம் கட்டாக்கில் 9ஆம் தேதியும் இரண்டாவது ஆட்டம் சண்டிகரில் 11ஆம் தேதியும் மூன்றாவது ஆட்டம் 14ஆம் தேதி தர்மசலாவிலும், நான்காவது ஆட்டம் லக்னோவில் 17ஆம் தேதியும், ஐந்தாவது ஆட்டம் அகமதாபாத்தில் 19ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்திய அணியில் சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (அணித் தலைவர்), திலக் வர்மா, அக்சர் படேல், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.




