
- கே.ஜி. ராமலிங்கம்
அனைவருக்கும் இனிய அட்சய திருதியை காலை வணக்கங்கள் வாழ்த்துக்கள். அட்சயம் பலமாப்னோதி ஸர்வஸ்ய…அட்சய திருதியை!*
இளம் வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர் தமது துறவு நெறிக்கேற்ப நாள்தோறும் இறைவழிபாடு முடிந்து உஞ்சவிருத்தி எடுத்து மற்றவர் இட்டதை உண்டு தம் இறைப்பணியைத் தொடருவார்.
அப்படி ஒரு நாள் ஸ்ரீசங்கரர் சோமதேவர் என்பவருடைய இல்லத்திற்குச் சென்று “பவதி பிஷாந்தேஹி” என மும்முறை உச்சரித்தார். சோமதேவர் அப்போது இல்லத்தில் இல்லை. அவருடைய துணைவியார் தருமசீலை இருந்தார், அவருக்கு வியப்பு மூண்டது.
பாலசங்கரரைப் பார்த்தவுடனே, சிவபெருமானே பிச்சைக்கு வந்துவிட்டாரோ என்று அதிசயித்தார்.
ஆம் ஆதிசங்கரரின் முகத்தில் அப்படியொரு லஷ்மி கடாக்ஷம். ஆனால் அவரிடத்தில் பிச்சை இடுவதற்கான பொருள்கள் ஏதும் இல்லை.
வேதத்தில் தேர்ச்சி பெற்றிருந்த சோம தேவர் வறுமையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவரும் சங்கரரைப் போலவே பிச்சை கேட்க சென்றிருந்தார்.
வீட்டில் ஒன்றும் இல்லை. எனவே, மிகுந்த வருத்தத்துடன் அம்மையார் சங்கரரைப் பார்த்து, “நான் கொடிய பாவம் செய்தவளப்பா. நீங்கள் பிச்சைக்கு வந்திருக்கும் போது, கொடுப்பதற்கு ஒன்றுமில்லையே என ஏங்குகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்” என இறைஞ்சினார்.
ஆனால் சங்கரரோ, “அன்னையே! அடியேனுக்குக் கொடுக்க ஏதும் இல்லை எனக் கலங்க வேண்டாம். அன்னமிட வழியில்லை என்றால் பரவாயில்லை. அன்னத்திற்குத் துணையாக இருக்கும் உண்ணக் கூடிய எதுவானாலும், சிறிதளவேனும் அன்போடு தாருங்கள்” என வேண்டினார்.
உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்த அம்மையாருக்கு ஒன்றும் கிடைக்காமல் ஒரு பழைய பாத்திரத்தில் நெடு நாட்களுக்கு முன்பு செய்த நெல்லிக்காய் ஒன்று மீதமிருந்தது.
அந்த நெல்லிக்காயை மிகுந்த மனத் தயக்கத்துடன் மகான் சங்கரரின் பிச்சைப் பாத்திரத்தில் அம்மையார் இட்டார்.
இதனால் மனம் மகிழ்ந்த ஆதிசங்கரர், “தாயே! அன்புடன் தாங்கள் எனக்களித்த இந்த நெல்லிக்காயைவிடச் சிறந்த பொருள் இவ்வுலகில் எதுவும் கிடையாது.
இது என் தாயாருக்கு மிகவும் பிடித்த உணவாகும். அதிதிக்கு அளித்த இந்த உணவால் உங்களைப் பிடித்திருந்த வறுமை இன்றோடு அழிந்துவிட்டது. இனிமேல் உங்கள் கணவர் பிச்சைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை” எனக்கூறி விட்டு, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமஹாலஷ்மி தேவியை மனதால் நினைத்து தியானம் செய்து அங்கம் ஹரே புளக பூஷணே என்று தொடங்கும் இந்த “கனகதாரா” ஸ்தோத்திரத்தைப் பாடி ஸ்ரீலட்சுமி தேவியை வழிபட, அவர் முன் தோன்றிய மகாலட்சுமி, வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் குபேர சம்பத்தைப் பெற்றனர்.
வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களையும், ஆசார அநுஷ்டானங்களையும் மறந்துவிட்டனர். எனவே, அப்பாவ வினையின் பயனாக, இந்த யுகத்தில் அவர்கள் இங்கு வறுமைப் பிடியில் சிக்கித்தவித்து வாழ்கின்றனர் என்ற உண்மையை ஸ்ரீ சங்கரரிடம் ஸ்ரீமஹாலஷ்மி தேவி கூறினார்.
இருப்பினும் இப்படிபட்ட வறுமையிலும் திடமனதுடன் ஆதி சங்கரருக்காக நெல்லிக்காயைப் பிச்சையாக இட்ட காரணத்தினால், ஸ்ரீலஷ்மி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை பொழிந்த தினம் தான் “அட்சய திருதியை”. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறை மூன்றாம் நாளை (திரிதியை) கொண்டாடுகிறோம்.
அட்சயம் என்ற சொல்லுக்கு – அள்ள அள்ளக் குறையாமல் இருக்கும் – என்று பொருள். அட்சய திருதியை நாளில் எந்த நற்செயல் செய்தாலும் அது குறைவில்லாமல் பெருகும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
கோயில்களுக்குச் செல்வது, ஜபதபங்கள் செய்வது போன்ற புண்ணியச் செயல்களுக்கெல்லாம் அன்று வழக்கத்தை விடப் பல மடங்கு பலன் கிட்டும்.
சூதாட்டத்தில் நாட்டை இழந்த பஞ்ச பாண்டவர்கள் துரியோதனன் விதித்த நிபந்தனையின்படி வனவாசம் மேற்கொண்டார்கள். நாட்டைத் துறந்து பாஞ்சாலியோடு வனம் நோக்கி அதன் எல்லையை அடைந்தவுடன் அவர்கள் வயிற்றுப் பசியை உணர்ந்தார்கள். துன்பம் வரும்போதெல்லாம் அவர்களைக் காக்கும் கண்ணனை நினைத்தார்கள், உணவோடு அவர்கள் முன் தோன்றி அவர்களின் பசியைத் தீர்த்து வைத்தான் பரந்தாமன்.
வனவாசத்தில் அவர்கள் வயிற்றுப் பசி போக்கும் வழியையும் எடுத்துச் சொல்லி சூரிய பகவானை உபாசனை செய்து வற்றாமல் உணவளிக்கும் அட்சய பாத்திரத்தை வேண்டிப் பெற்றுக் கொள்ளும், சூரிய உபாசனைக்கான மந்திரத்தையும் பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்கும் அவனே உபதேசித்தான்.
அந்த மந்திரத்தை உச்சரித்து உபாசனை செய்தார்கள் அவர்கள் முன் தோன்றி அவர்கள் வேண்டியபடி அட்சய பாத்திரத்தை அருளினான். வனவாச காலத்தில், அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் தரும் அட்சய பாத்திரத்தால் வந்த விருந்தினர்க்கெல்லாம் அமுது படைத்து மகிழ்ந்தாள் பாஞ்சாலி என்கிறது மகாபாரதம்.
அட்சய பாத்திரத்தை சூரியனிடம் தர்மபுத்திரர் பெற்றது இதே அட்சய திருதியை நன்னாளில்தான். எனவே அட்சய திருதியை அன்று அன்னதானம் செய்வது சிறப்பு அன்று செய்யும் அன்னதானத்தின் புண்ணிய பலன் பல மடங்கு கிட்டும்.
காயசண்டிகை மணிமேகலைக்கு அமுதசுரபி என்கிற அட்சய பாத்திரம் வழங்கியதும் இந்நாளே என்றும் கூற கேள்விப்பட்டு இருக்கிறேன். அட்சய திருதியை அன்று வழக்கமாக உள்ளதை விட அதிகமாக இறைச் சிந்தனையில் ஈடுபட வேண்டும்.
அட்சய திருதியை போலவே கிரகண காலத்திலும் எது செய்தாலும் அது வளரும் என நம்பப்படுகிறது. இத்தகைய எண்ணற்ற சிறப்புகள் உள்ள நாளில் அதிகமாக மந்திர ஜபம் செய்தும் இறைச் சிந்தனையில் ஈடுபட்டும் நம் மனத்தை மாசில்லாததாக ஆக்கிக் கொள்வோம்…
பின் குறிப்பு : அட்சய திருதியை என்றாலே கடைக்குப் போய் ஏதேனும் சிறிய அளவிலாவது தங்கம் வாங்க வேண்டும் என்பது சமீப காலத்தில் பெருகிப் போய்விட்டது. புத்தியை பிளக்கும் சக்தி விளம்பரத்திற்கு உண்டு. விளம்பரத்தில் வீழும் புத்தி மக்களுக்குண்டு.
எப்படியும் விளம்பரம் செய்து எந்த வகையிலாவது வியாபாரம் செய்ய முனைவோரை தடுக்க வழியே கிடையாது. சிக்கியவன் கூக்குரலிட்ட செய்தி கிடைத்தால் அதை முடிந்த வரை நட்பு சுற்றம் வட்டாரத்திற்கு பகிர்ந்து விட்டு அதே கடையிலே அடைக்கலமாகும் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.
சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!





