ஶ்ரீரங்கம் அத்யயன உற்ஸவ தொடக்கம்

அரங்கனின் அத்யயன உற்சவம்.(வைகுண்ட ஏகாதசி)
(இன்று அரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் தொடக்கம்)
திருமங்கையாழ்வார் தொடங்கிய திருவிழா…
தமிழ்மொழிக்கு என்றே ஏற்பட்ட ஒருபெருவிழா…
அரையர்ஸ்வாமிகளால் அரங்கன் நடத்தும் பெருவிழா….

தமிழ் மொழிக்கு ஒரு விழாவா? என்றால் ஆம் அதுவும்
ஸ்ரீ ரங்கம் பெரிய கோவிலில் என்றால் ஆச்சர்யமாக உள்ளதா? எட்டாம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் காலத்தில் ஏற்பட்டது “அத்யயன உற்சவம்” இது தமிழ் பாசுரத்துக்கான விழா தமிழ் மொழிக்கான விழா. நம்மாழ்வார் அருளிய “திருவாய்மொழி”
என்னும் திவ்ய ப்ரபந்ததிற்கான உற்சவம்.

அரங்கனின் பெரிய திருநாளும்,முக்கிய திருவிழாவுமான,
தமிழ் மொழியில் ஆழ்வார்களால் பாடப்பட்ட பாசுரங்களை,
அரங்கன் கேட்டு மகிழும் திருவிழா,ஸ்ரீவைகுண்ட ஏகாதசி
திருவிழா ஆகும்.இந்த உற்சவத்தை “அத்யயன உத்சவம்” என்றும்அழைப்பர்.

அரங்கன் தமிழ் வேதமாம் “நாலாயிர திவ்ய பிரபந்தம்”
கேட்டருளும் சிறப்பான திருநாளாகும்.தமிழில் உள்ள
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 247.
அரங்கனுக்கு ஆழ்வார்களால் பாடப்பட்ட பாடல்களும் 247.

“பகல்பத்து” மற்றும் “இராப்பத்து” நாளை தொடங்குவதை
முன்னிட்டு, இன்று மாலை அரங்கனின் முன்பு “திருமங்கையாழ்வாரின்” “திருநெடுந்தாண்டகம்”
தொடங்கப்படும்.

திருவரங்கத்தில் நடைபெறும் திருநெடுந்தாண்டகம், பகல்பத்து, இராப்பத்து, இயற்பா சாற்றுமறை பற்றி இன்றுமுதல் பதிவிட முயற்ச்சிக்கிறேன்…

இந்த திருநெடுந்தாண்டகம் திருமங்கையாழ்வாரால் பாடப்பட்டது.திருமங்கையாழ்வாராலேயே,திருவரங்கத்தில்
இந்த “அத்யயனஉத்சவம்” தொடங்கப்பட்டது.அதன்
வரலாற்றை நாமும் கொஞ்சம் அனுபவிப்போம்..

பெரிய திருநாள் என்று அழைக்கப்படுகின்ற,பகல் பத்து,
இராப்பத்துதிருநாட்கள்,தமிழ் மொழிக்கு ஏற்றம் அளித்திடும்
ஒரு மாபெரும் சிறப்பான விழாவாகும். ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,நித்ய சூரிகள்,முமுக்ஷுக்கள் ஆகியோர்
புடைசூழ,பரம பதத்தில் எம்பெருமான் ,நாலாயிர
திவ்ய பிரபந்தத்தை கேட்டு மகிழும் விழாவே ,அரங்கத்தில் நடைபெறுகின்ற இந்த வைகுண்ட ஏகாதசி திருவிழா என்னும் “அத்யயன உத்சவம்” ஆகும்.

திருமங்கையாழ்வார் தம்முடைய வாழ்நாளின் பிற்பகுதியில்,திருவரங்கத்தில்,திருவரங்கனுக்கு சிறப்பான பல கைங்கர்யங்களை செய்துகொண்டு எழுந்தருளி இருந்தார்.

ஒரு கார்த்திகைத் திருநாளில்,நம்பெருமாள் உபய நாய்ச்சிமார்களுடன் திருமஞ்சனம்கண்டருளிய பிறகு,திருமங்கையாழ்வார் ,திருநெடுந்தாண்டகம் என்கின்ற பிரபந்தத்தை தேவகானத்தில் பாடி நம்பெருமாளை
மகிழ்வித்தார்.அதன் பிறகு திருவாய்மொழி
பாசுரங்களைக்கொண்டு பாடி நம்பெருமாளை உகப்பித்தார்.

இதனால் பெரும்மகிழ்ச்சிகொண்ட நம்பெருமாள்,
“ஆழ்வாரே நாம் உமக்கு என்ன செய்ய வேண்டும்” என்று வினவினார். அதற்கு திருமங்கையாழ்வார் “மார்கழிமாதம்
சுக்லபக்ஷ ஏகாதசி தொடங்கி கொண்டாடப்படும்
வேதத்திற்க்கான ஏற்றமிகு விழாவில்,அந்த வேதங்களுடனே நம்மாழ்வார் அருளிச்செய்த,”திருவாய்மொழியையும்”கேட்டு, வடமொழி வேதத்திற்கு நிகரான பெருமையை ,நம்மாழ்வார் தமிழில் அருளிச்செய்த,”திருவாய்மொழிக்கும்” தந்தருள
வேணும் என்று விண்ணப்பித்தார்.

நம்பெருமாளும் பெரிதும் உகந்து,தேவகானத்தில் பாடிய திருமங்கையாழ்வார் “திருமிடர் நோவும்” என்று, திருமங்கையாழ்வாரின் தொண்டையிலே,தைலக்காப்பை
தடவச் செய்து,ஸ்வாமி நம்மாழ்வாரை “ஆழ்வார்திருநகரியில்” இருந்து,அழைத்து வருவதற்கான, ஸ்ரீமுகப்பட்டயம், மாலை,பரியட்டம்,சந்தனம் ஆகியவற்றை அனுப்பி
கௌரவித்தார்.

(இந்த அத்யயனஉத்சவத்திற்க்காக ,ஆழ்வார் திருநகரியில் இருந்து,திருவரங்கத்திற்கு ,ஒவ்வொரு வருடமும்,
நம்மாழ்வார் எழுந்தருளினார் என்று அரங்கன்
ஆலய வரலாறு கூறுகிறது.தற்பொழுது, நம்மாழ்வார்
ஆழ்வார் திருநகரியில்இருந்து எழுந்தருளுவது இல்லை..).

திருமங்கையாழ்வார் ,நம்மாழ்வாருடைய நான்கு பிரபந்தங்களாகிய,திருவிருத்தம்,பெரிய திருவந்தாதி,திருவாசிரியம்,திருவாய்மொழி ஆகியவற்றிற்கு அங்கங்கள் போல,ஆறு திவ்ய பிரபந்தங்களை அருளிச்செய்துள்ளார்.அவற்றில் ஒன்றுதான் இந்த திருநெடுந்தாண்டகம்…

இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள்” பனுவல்” என்று கூறப்படுகின்றன. இந்த ஆறு பிரபந்தங்களுள் சிகரமாக
விளங்குவது திருநெடுந்தாண்டகம்.

இவர் திருவரங்கத்தில் இருந்தபோது இதனை அருளியுள்ளார். “தாண்டகம்” என்பது மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கும்
ஒரு ஊன்றுகோல். மனித ஆன்மாவின் கடைத்தேற்றத்துக்கு கடவுள் ஒருவர் தான் ஊன்றுகோல் என்பதை, இப்பாசுரங்கள்
விளக்குகின்றன . திருநெடுந்தாண்டகம் முப்பது பாசுரங்கள் கொண்டது.

தாண்டகம் என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது “திருநெடுந்தாண்டகம்” என்றும் அழைக்கப் படுகிறது.

திருநெடுந்தாண்டகத்தில் முதல் 10 பாசுரங்கள், ஆழ்வார்
தாமான தன்மையிலும்,அடுத்த 10 பாசுரங்கள்,
ஒரு தாய் தன்னுடைய மகளைப் பற்றி சொல்வது போலவும். மூன்றாவது 10 பாசுரங்கள்தலைமகள் என்னும் நிலையில், திருமங்கையாழ்வார், பெண்ணான தன்மையில் பாடிய
சிறப்புமிக்க பாசுரங்களாகும்.

திருநெடுந்தாண்டகம் வேதக்கருத்துக்களை கொண்ட,
வேதத்திற்கு ஒப்பான பாசுரங்கள் ஆகும்.

இந்த திருநெடுந்தாண்டகத்தின் 21 வது பாசுரமான,

“மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்
கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அதே,
அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ.
அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே.”

என்ற பாசுரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ,ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் ,மிகவிரிவானதொரு விளக்கவுரையினை அருளிச்செய்துள்ளார்.

ஸ்ரீ பராசர பட்டரின் காலத்தில்,இன்றைய கர்நாடக மாநிலத்தின் மேல்கோட்டையில் இருந்த”வேதாந்தியான மதவாச்சாரியாரை”
இந்த திருநெடுந்தாண்டகத்தின் விளக்கவுரை கொண்டு,
ஸ்ரீபராசர பட்டர் வெற்றிகொண்டு,அந்த வேதாந்தியை
தம்முடைய சீடராக்கிக்கொண்டார்.இந்த வேதாந்தியே
“நஞ்சீயர்” என்று அழைக்கபடுகிறார்.

ஸ்ரீபராசர பட்டர்,”வேதாந்தியான மதவாச்சாரியாரை”இந்த திருநெடுந்தாண்டகத்தின் விளக்கவுரை கொண்டு, திருத்திப்பணிகொண்ட நிகழ்ச்சியே இன்றும்,அரங்கன் முன்பு ,
இந்த பகல்பத்து மற்றும்இராப்பத்து திருவிழாவின் முதல் நாள்(இன்று) “அரையர் ஸ்வாமிகளால்” ,அரங்கன் முன்பு
அபிநயித்துக் காட்டப்படுகிறது.

இயல் இசை நாடகம் என்னும் மூன்று கூறுகளைக் கொண்டது நம்முடைய தமிழ் மொழியாகும்.அந்த தமிழில் ஆழ்வார்கள்
பாடிய பாசுரங்களே” நாலாயிர திவ்ய பிரபந்தமாகும்”.

இந்த நாலாயிர திவ்ய பிரபந்தங்களை,நாதமுனிகளின் வழித்தோன்றல்களான,அரையர்கள் கைகளில் தாளத்தோடும்,இசையோடும் திவ்ய பிரபந்த பாசுரங்களை,
பெரிய பெருமாளின் திருமுன்பு இசைத்து,தமிழுக்கு ஏற்றம் அளிக்கும்,பகல் பத்து இராப்பத்து விழாவை,”அத்யயன உத்சவத்தினை” இந்த திருநெடுந்தாண்டக தினத்தன்று” (இன்று)
தொடங்குவார்கள்.
(தொடரும்)

கட்டுரை: மாலு, ஶ்ரீரங்கம்