நாச்சியாரின் திருமொழி கூறும் உட்பொருள்

ஆண்டாளின் திருப்பாவை அநுபவம் நாச்சியார் திருமொழி என்னும் மற்றொரு பிரபந்தத்திலும் தொடர்ந்தது. திருப்பாவையிலே, எம்பெருமானே உபாயம் என்றும், அவன் உகப்புக்கான அடிமை செய்வதே தாம் வேண்டும் பறை என்றும் தன் உறுதியை அறுதியிட்ட பின்பும், தன் விருப்பப்படி அவனைப் பெறாமையாலே, அவனைப் பெற வேண்டும், என்ற ஆவல் ஏற்பட்டவளாய், அறிவு கலங்கி, பிரிந்தாரைக் கூட்டும் இயல்புடைய காமதேவனை, ‘‘அனங்கதேவா! வேங்கடற்கென்னை விதிக்கிற்றியே’’, என்று ஆஸ்ரயித்தாள், நாச்சியார் திருமொழியின் முதற்பதிகமான ‘‘தையருதிங்களில்’’.

இது கண்டு பொறாத எம்பெருமான் விரைந்து வந்து முகம் காட்ட ஊற்றில் இழைத்துக் கொண்டிருப்பதையும், அவன் இவளைப் பற்றி மெய்ப்பினக் கிட்டதையும் (அணைத்தையும்) பேசினாள் இரண்டாம் திருமொழியான ‘‘நாமமாயிரத்தில்’’

இப்பதிகத்தில் ஏற்பட்ட அவனோடான இணைப்பு தொடர்ந்ததால் ஆனந்த மிகுதியால் இவளுக்கு உயிர்தியாகம் ஏற்படும் என அஞ்சிய உறவினர்கள் கண்ணனையும், இவர்களையும் பிரித்து நிலவறைகளிலே அடைத்தனர், அப்பிரிவாற்றமையாலும் இவர்களுக்குப் ப்ராணஹாநீ உண்டாகும் நிலை ஏற்பட, அது கண்ட உறவினர்கள், ‘‘பெண்கள் நல்ல கணவனைப் பெறுவதர்குச் செய்யும் பனி நீராடுதல் என்றும் நோன்பைச் செய்வதற்காக இவர்களை வெளியில் விட, இவர்களும் கண்ணனோடு சேர்ந்தும் பிரிந்தும் படும் வருத்தங்களைத் தவிர்ப்பதற்காக அவன் அறியாதபடி ஒரு பொய்கைக்குச் சென்று ஆடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு விரஹதபம் ஆறும்படி அங்கு வந்து இவர்களின் ஆடையை எடுத்துக் கொண்டு கரையில் இருந்த குருந்தில் ஏறி வீற்றிருந்ததையும் இவர்களும் குளித்துக் கரையேறியவுடன் ஆடை ஆபரணங்களைக் காணாமல், இவனை மரத்தின் மேலே கண்டு இவனிடம் இரந்து கேட்பதாய் வாழ்த்துவதாய், கோபமாய் சீறுவதாய் பலவிதமாகக் கெஞ்சிக் கேட்க அவனும் ஆடை ஆபரனங்களைக் கொடுத்து அருளியதையும் பேசினான் மூன்றாம் திருமொழியான ‘‘கோழியதைப்பதில்’’

இந்தக் கூட்டு பிரிவிலே முடிய ‘‘மறுபடியும் கண்ணபிரானோடு கூடவல்லானோ?’’ என்று கூடல் இழைத்ததைப் பேசினாள் நாலாம் திருமொழியான ‘‘தெள்ளியாரில்’’.

உயிரற்றதான கூடல் மறுமொழி கூறாமையாலே உயிருள்ள குயிலைப் பார்த்து எம்பெருமான் வரும்படிகூவ பிராத்திக்கிறாள் ஐந்தாம் திருமொழியான ‘‘மன்னு பெரும் புகழில்’’,

குயில் கூவி அவன் வராதிருக்கவே மிகவும் வருத்தமுற இவளை உயிர்தரிகச் செய்வதற்காக, இவளின் விருப்பபடி ஒன்றும் குறையதபடி பாணிக்கிரஹணம் வரை கனவிலே ஆண்டாளை கண்ணபிரான் அனுபவிக்கச் செய்ய, அவ்வனுபவத்தைத் தோழிக்குச் சொல்லுகிறாள் ஆறாம் திருமொழியான ‘‘வாரணமாயிரத்தில்’’<

கனவிலே கண்ணனோடு ஏற்பட்ட உறவு நீட்டிக்கப் பெறமையாலே, அவனோடு எப்போதும் சேர்ந்திருக்கும் ஸ்ரீபாஞ்சஜன்யத்தைப் பகவதனுபவம் இருக்கும்படியைப் பலவாறு கேட்கிறாள் ஏழாம் திருமொழியான, ‘‘ கற்பூரம் நாறுமோ’வில்.

அவன் வருவதாகச் சொன்ன மழைக்காலத்தில் அவன் வராதது கண்டு, மேகங்களை திருவேங்கட முடையானுக்குத் தூதாக விட்டதைப் பேசினாள். எட்டாம் திருமொழியான ‘‘விண்ணீல்மேலப்பில்’’.

மேகங்களும் தூது செல்லாமல், நின்ற விடத்திலே நின்று மழைபொழிய, அதனாலே மழைக்காலத்தில் உண்டாகும் இந்திர கோபங்கள், முல்லைகள், காயா முதலிய மலர்கள், களங்கனி முதலான கனிகல், வண்டினங்கள், பூஞ்சுனைகள் முதலானவை உண்டாகி எம்பெருமானுடைய திருமேனி அவயங்களை நினைவுபடுத்தித் தனை நலிவ்தைப் பேசினாள். ஒன்பதாம் திருமொழியான ‘‘சிந்துரச் செம்பொசி‘யில்.

இவ்வாறு மனம் வருந்தியவளாய் ‘‘நமக்கு உயிர்தரிக்க வழி உண்டோ?’’ என ஆராய்ந்து ‘‘மற்றவையெல்லாம் தப்பினாலும் பெரியாழ்வாரோடு நமக்குண்டான உறவு தப்பாது. அவனுக்கான சுதந்திரந்திரத்தையும் மாற்றி, நம்மை அவன் திருவடிகளில் சேர்த்து விடும்’’ என்று உறுதி பூண்டமையைப் பேசினாள் பத்தாம் திருமொழியான ‘‘கார்கோட‘‘லில்,

இவள் உறுதியோடு இருந்த பின்பும், கண்ணபிரான் தமக்கு முகம் கொடுக்காததாலே மிகவும் நோவுப்பட்டு இருக்கும் நிலையைக் கண்டு, தாய்மார், தோழிமார் முதலானவர்கள் இவளைக் காண வந்து திரண்டு நிற்க, ‘‘ அவன் நம்மை வைத்த நிலையைப் பார்த்தீர்களா’ என்று வெறுத்து வார்த்தை சொல்லி, பின்பு, ‘‘நம்மௌஇப் போன்ற சில பெண்களுக்கு உதவினவன் பெரியாழ்வார் பெற்றெடுத்த நமக்கும் கட்டாயம் உதவாமல் இருக்க மாட்டான்’’, என்று தேறுதலாயாப் பேசினாள் பதினோராம் திருமொழியான ‘‘தாமுகக்குக் தம்கை’’யில்.

இப்படி உறுதி பூண்டிருந்தும் அவன் வராமையாலே நடக்கவும் இயலாத நிலையை அடைந்து, அருகில் இருப்பாரைப் பார்த்து ‘‘அவன் இருக்கும் தேசத்திலே என்னைக் கொண்டு சேருங்கள்’’ என்கிறாள் பன்னிரண்டாம் திருமொழியான மற்றிருந்தீர்களில்.

இப்படி இவளின் வேண்டுகோளை ஏற்று அவன் இருக்கும் தேசத்திலே இவளைக் கொன்டு சேர்க்க இயலாமையாலே, ‘‘அவ்னோடு தொடர்புள்ள ஏதாவதொன்றைக் கொன்டு வந்து என்னைத் தொடச்செய்து உயிர் தரிக்கச் செய்யுங்கள்’’ என்று பிராத்திருக்கிறாள். பதிமூன்றாம் திருமொழியான ‘‘கண்ணனென்றும் கருந்தெய்வத்தில்’’

இவளுக்கு பரம பக்தியை விளைவிக்கச் செய்யும் பொருட்டு, அவன் முகம் காடாமல் இருக்க, அதனால் இவளின் ஆற்றாமை கரைபுரண்டு, அவனைப் பெறாமல் உயிர்தரிக்க மாட்டாத நிலை ஏற்பட, ஆட்கொண்டான், ‘‘பட்டி மேய்ந்து’’ என்னும் இப்பதினாலாம் திருமொழியில், ஒவ்வொரு பாட்டிலும் முன்பாதியில் ‘‘கண்டீரே’’ என்று கேட்கிறவர்கள் பேச்சாகவும், பின்பாதியில் ‘‘கண்டோம்’’ என்று பதில் சொல்கிறவர்கள் பேச்சாகவும் முறையே தமக்குப் பிறந்த பரம பக்தியையும், பெற்ற பேரின்பத்தையும் இருவர் பேச்சாகப் பேசி நாச்சியார் திருமொழியாகிய இப்பிரபந்ததை நிறைபடுத்துகிறாள் ஆண்டாள்.