ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களில் தலையாயது சிவராத்திரி விரதம்.
எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மைக்
கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்
என்று சிவபெருமான் கூறியதாக, சிவராத்திரி புராணத்தைச் சொல்லும் ‘வரதபண்டிதம்’ என்னும் நூல் கூறுகிறது. ‘எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி; அன்பு கொண்டவர்களாக இருந்தாலும் சரி; சிவராத்திரி அன்று சிவபெருமானைத் தரிசித்தவர், விரதம் இருந்தவர், வழிபாடு செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும்’ என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.
சிவராத்திரியைப் பற்றி, நம் ஞான நூல்கள் விரிவாகவே கூறுகின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
பிரம்மாவும் மஹாவிஷ்ணுவும் சிவபெருமானின் திருமுடியையும் திருவடியையும் தேடிய வரலாறு, நம் அனைவருக்குமே தெரியும். இது நிகழ்ந்தது மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி அன்று. அந்த நாளே சிவராத்திரி. இத்தகவலை ஸ்காந்த மஹா புராணம் கூறுகிறது.
மாக க்ருஷ்ண சதுர்தஸ்யாம்
அனலாசலம் அத்புதம்
-ஸ்காந்த மஹாபுராணம்
சிவராத்திரியின் தோற்றத்தைப் பற்றிய மற்றோர் அற்பதமான வரலாறும் உண்டு. அது:
“பிரளயகாலம். அனைத்தும் ஒடுங்கி விட்டன. இரவு நேரம்; எங்கு பார்த்தாலும் இருள் சூழ்ந்திருந்தது. அந்த இரவு நேரத்தில் நான்கு ஜாமங்களிலும், அம்பிகை உமாதேவி ஆகம முறைப்படி சிவபெருமானைப் பூஜை செய்தார். மறுநாள் பொழுது விடிந்தது. அம்பிகை, சிவபெருமானை வணங்கி, “ஸ்வாமி! தங்களை நான் பூஜித்த இந்த இரவை எல்லாரும் சிவராத்திரி என உங்கள் பெயராலேயே அழைக்க வேண்டும். அத்துடன் சிவராத்திரி அன்று சூரிய அஸ்தமனம் முதல் மறுநாள் காலை சூரிய உதயம் வரை, தேவர்கள் உட்பட எல்லாரும் உங்களைப் பூஜை செய்ய வேண்டும். அப்படிப் பூஜை செய்பவர்களுக்குச் சர்வமங்கலங்களும் தந்து, முடிவில் முக்தியையும் தாங்கள் அருளவேண்டும்” என வேண்டினார்.
“அப்படியே ஆகும்!” என சிவபெருமான் அருள் புரிந்தார்.
அம்பிகை பூஜை செய்த அந்த நாளே (மாசி மாதத் தேய்பிறை சதுர்தசி) மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.
நமது ஞான நூல்கள் சொல்லும் முறைப்படி, பகற்பொழுது என்பது சிவபெருமானுக்கும், இரவுப்பொழுது அம்பிகைக்கும் உரியது. அம்பிகை தனக்குரிய, இரவுப்பொழுதை சிவபெருமான் பெயரால் ‘சிவராத்திரி’ என வழங்கச் செய்தார். நவராத்திரி நாயகி நமக்காகத் தந்தது-சிவராத்திரி.
நமக்கெல்லாம் தெரிந்தது ஒரு சிவராத்திரிதான். ஆனால், ஐந்து வகையான சிவராத்திரிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்யசிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, மாத சிவராத்திரி என்பவையே அவை.
1. மாக சிவராத்திரி: மகா சிவராத்திரி என்பது இதுவே. மாசி மாதத் தேய்பிறை சதுர்தசியான இந்த மகா சிவராத்திரிக்கு ‘வருஷ சிவராத்திரி’ என்ற பெயரும் உண்டு.
2. யோக சிவராத்திரி: யோக சிவராத்திரியில் நான்கு வகைகள் உண்டு. அத்தகவல்கள்: 1.திங்கட்கிழழை அன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும், அதாவது பகல்-இரவு சேர்ந்த 60நாழிகையும் (24மணி நேரமும்) அமாவாசை இருந்தால், அன்று யோக சிவராத்திரி. 2.திங்கட்கிழமை அன்று சூரிய அஸ்தமனம் முதல் இரவு 4ஜாமங்களும் (மாலை 6மணி முதல் மறுநாள் காலை 6மணி வரை) தேய்பிறை சதுர்தசி இருந்தால், அதுவும் யோக சிவராத்திரி. 3.திங்கட்கிழமை அன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3மணி முதல் 6மணி வரை) அமாவாசை அரை நாழிகை அதாவது பன்னிரண்டு நிமிடங்கள் இருந்தாலும் அன்று யோக சிவராத்திரி. 4.திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தால், அன்றும் யோக சிவராத்திரி. திங்கட்கிழமையன்று வரும் இந்த நான்கு யோக சிவராத்திரிகளில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரியன்று விரதம் இருந்தாலும் அது மூன்றுகோடி சிவராத்திரி விரதம் இருந்த பலனைத்தரும்.
மார்கழி மாத வளர்பிறை சதுர்தசி, திருவாதிரை நட்சத்திரத்துடன் சேர்ந்து வந்தாலும், மாசி மாதத் தேய்பிறை சதுர்தசி, செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலும் அந்த சிவராத்திரியும் மூன்று கோடி சிவராத்திரிக்கு சமமாகச் சொல்லப்படுகிறது.
3. நித்ய சிவராத்திரி: வருடத்தில் 12 மாதங்களிலும் வரும் வளர்பிறை, தேய்பிறை சதுர்தசி திதி இடம் பெறும் 24 நாள்களும் நித்ய சிவராத்திரி.
4. பக்ஷசிவராத்திரி: தை மாதத் தேய்பிறை பிரதமையன்று தொடங்கி 13நாள்கள் தினந்தோறும் ஒரு வேளை உணவு உண்டு, பதினான்காம் நாளான சதுர்தசியன்று முறைப்படி விரதம் இருப்பது பக்ஷசிவராத்திரி எனப்படும்.
5. மாத சிவராத்திரி: இது வரை நாம் பார்த்த சிவராத்திரி எல்லாம் பொதுவாக, அமாவாசை அல்லது சதுர்தசியை அனுசரித்தே வரும். ஆனால் மாதசிவராத்திரி என்பது மாதத்தின் மற்ற திதிகளிலும் வரும். அத்தகவல்கள்:
மாசிமாதத் தேய்பிறை சதுர்தசி, பங்குனி மாத வளர்பிறை திருதியை, சித்திரை-தேய்பிறை அஷ்டமி, வைகாசி -வளர்பிறை அஷ்டமி, ஆனி-வளர்பிறை சதுர்தசி, ஆடி-தேய்பிறைப் பஞ்சமி, ஆவணி -வளர்பிறை அஷ்டமி, புரட்டாசி – வளர்பிறை திரயோதசி, ஐப்பசி – வளர்பிறை துவாதசி, கார்த்திகை -வளர்பிறை சப்தமி + தேய்பிறை அஷ்டமி, மார்கழி -வளர்பிறை சதுர்தசி +தேய்பிறை சதுர்தசி, தை-வளர்பிறை திரிதியை-ஆகிய 14 நாள்களும் மாத சிவராத்திரி எனப்படும்.
காசியில் சிவராத்திரி: சிவத் தலங்களில் முதன்மை பெறுவது காசி. அங்குள்ள சிவன் கோவில்களைக் கணக்கிட முடியாது. காசி நகருக்கு இதயம் போல காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. அங்கு சிவராத்திரி அன்று ஏராளமான வேத விற்பன்னர்களைக் கொண்டு முறைப்படி ஹோமங்களும், சிவனைப் பற்றிய துதிகளின் பாராயணமும் விசேஷமாக நடைபெறும். காசியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அபிஷேகமும் அலங்காரமும் அன்று முழுவதுமே நடத்தப்படும். சிவராத்திரி அன்று காசி விஸ்வநாதர் கோவிலில் லட்ச தீபங்கள் ஏற்றுவார்கள். ஒரே வரியில் சொல்வதானால், காசி முழுவதுமே அன்று ஜகஜோதியாக இருக்கும்.
இராமேஸ்வரத்தில் சிவராத்திரி: இங்கு சிவராத்திரியன்று காலையில் திறக்கும் சந்நிதியை மறுநாள் பிற்பகலில் தான் மூடுவார்கள். அபிஷேகமும் வழிபாடுகளும் விமரிசையாக நடக்கும். தேவாரம், திருவாசகம், ஸ்ரீருத்ரம் ஆகியவை இரவு-பகலாக ஒலிக்கும். இரவின் நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரங்கள் செய்வார்கள். ஒவ்வொரு ஜாமத்திலும் ஸ்வாமி மூன்று பிராகாரங்களிலும் உலா வந்து அருள் புரிவார். ஸ்வாமிக்கு ஆயிரம் குடங்களின் நீராலும் (சஹஸ்ர கலச), ஆயிரம் சங்குகளின் நீரைக் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள். மாலையில் வெள்ளி ரத உலாவும் காலையில் பெரிய ரத உலாவும் நடைபெறும்.
நேபாளத்தில் சிவராத்திரி: இந்நாட்டில் பெரும் விழாவாகவே சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இங்குள்ள பசுபதி நாதர் கோவிலில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், நேபாளத்தின் பல பகுதிகளிலிருந்தும் துறவிகளும் பக்தர்களும் தரிசனம் செய்வதற்குக் குவிவார்கள்.
அன்று அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படும். இதை நேபாள மன்னர் தன் சொந்தச் செலவில் செய்கிறார். கோவிலில் லட்ச தீபம் ஏற்றுவார்கள். எல்லாருமே புத்தாடை அணிவார்கள். பசுக்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்படும்.
ஆந்திர மாநிலம்: ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவில் மண்டபத்தை விஜய நகர மன்னர் ஒருவர் சிவராத்திரியன்று வழங்கியதாகக் குறிப்பு உள்ளது.
திருச்சி கோவில் சிலா சாஸனம் ஒன்று, சிவராத்திரி விழாச் செலவுக்காக சோழ மன்னர், தன் செல்வத்தை தானம் செய்ததாகச் சொல்கிறது.
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11.30 மணி முதல் 1மணி வரை உள்ள காலத்திலாவது சிவதரிசனம் செய்து வழிபட வேண்டும்.
‘சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தேவருமாவார்’
என்னும் திருமூலரின் வாக்குப்படி சிவபெருமானைச் சிந்தையில் நிறுத்தி சீரிய வாழ்வைப் பெறுவோம்.
கட்டுரை: பி.என். பரசுராமன்
வெளியீடு: அம்மன் தரிசனம்


