ஆறு கேள்விகளைக் கேட்கிறான் தருமன்.
1) கிம் ஏகம் தைவதம் லோகே?
2) கிம் வா அபி ஏகம் பராயணம்?
3) ஸ்துவந்த கம் ப்ராப்நுயுர் மாநவா: சுபம்?
4) கம் அர்ச்சந்த: ப்ராப்நுயுர் மாநவா: சுபம்?
5) கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:?
6) கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜந்ம ஸம்ஸார பந்தநாத்?
*
கிம் ஏகம் தைவதம் லோகே?
லோகத்தில் ஒரே தெய்வம் எது? – இது என்ன கேள்வி புரியவில்லை. லோகத்தில் ஒரே தெய்வம் என்றால்? லோகத்தில் எவ்வளவோ நாடுகள், மக்கள், பண்பாடுகள், மதங்கள், அந்தந்த மதங்களில் தெய்வங்கள். லோகத்தில் ஒரே தெய்வம் என்றால் என்ன சொல்வது?
லோகம் லோகம் என்றால் கடல் சூழ்ந்த இந்தப் பரந்த பூமி என்று பொருளன்று. லோகம் என்றால் இங்கு பொருளே வேறு.
Statistics என்னும் துறையில் universe என்று ஒரு சொல்லைப் பயன்படுத்துவார்கள். அங்கு உடனே ஆஹா கலாக்ஸி எல்லாம் இருக்குமே, வானவெளி மண்டலம், மில்கி வே என்றெல்லாம் அந்தத் துறையில் அந்த வார்த்தை வந்ததும் பொருள் செய்துகொள்ளக் கூடாது. அங்கு யுனிவர்ஸ் என்றால் ஸ்டாடிஸ்டிகள் ஆய்வுக்கு நிர்ணயிக்கப்படும் தகவல் பரப்புக்குப் பெயர் யுனிவர்ஸ் என்பது.
அது போல் இங்கு ’லோகம்’ என்றால் கண்ணுக்குப் புலப்படாத அதீந்திரிய விஷயங்களைப் பற்றிச் சாத்திரங்களால் நிர்ணயிக்கப்படும் பொருள் நிச்சயங்களால் ஆன அறிவுத்தளம் என்று பொருள். அதாவது கடவுளைப்பற்றிய அறிவை ஏற்படுத்தும் பிரமாண நூல்களின் லோகம் என்பது அர்த்தம்.
‘அறிவை ஏற்படுத்தும் பதினான்கு வித்யா ஸ்தானங்கள்’ என்று பொருள் சொல்லுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ‘அறிவுக்குக் காரணமான பதினான்கு வித்யா ஸ்தாங்களிலும் சிறந்தவராக நிர்ணயிக்கப்படும் அந்த ஒரே கடவுள் யார்?’ என்று ஸ்ரீ ஆதிசங்கரர் விளக்கமாக இந்தக் கேள்வியைப் புரியும்படி உரையில் எழுதிகிறார்.
‘சாத்திரங்களில் சொல்லப்பட்ட ஒப்புயர்வற்ற கடவுள் யார்?’ என்பது ஸ்ரீபராசர பட்டரின் உரையில் இந்தக் கேள்வியின் வடிவம்.
பதினான்கு வித்யா ஸ்தானங்கள் என்று ஸ்ரீ ஆதிசங்கரர் சொன்ன கணக்கு என்ன என்ன?
நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், மீமாம்ஸை, நியாய் சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், புராணம் ஆக மொத்தம் பதினான்கு. இந்தப் பதினான்காலும் ஒட்டு மொத்தமாக அர்த்த நிர்ணயம், தாத்பர்யம் என்றபடிச் சிறந்தவராகக் கூறப்பட்ட அந்தக் கடவுள் யார்? என்று கேட்கிறான் தருமன் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
இப்பொழுது இந்தக் கேள்வி தெளிவாகப் புரிகிறது.
ஐந்தாவது கேள்வியில் ‘பவத: பரமோ மத:’ என்று ஒரு சொல் கோவை இருக்கிறது. அதற்கு ’தாங்கள் உங்களுக்கென்று உயர்ந்தது என்று கொண்டிருக்கும் கருத்து’ என்று பொருள்.
அதாவது தெய்வத்தன்மை பூரணமாகவும், தத்வ சாத்திரங்களால் மிகச் சிறந்த தெய்வம் என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பது என்று தாங்கள் எந்தத் தெய்வத்தை உங்கள் கருத்து முடிவாகக் கொண்டிருக்கிறீர்கள்? என்பது ஸ்ரீபராசர பட்டரின் உரை விளக்கும் கேள்வியின் வடிவம்.
’பவத: பரமோ மத:’ என்னும் பகுதியை எல்லாக் கேள்விகளும் சேர்த்து படிக்க வேண்டும் என்று சொல்கிறார் ஸ்ரீபராசர பட்டர்.
ஆக பீஷ்மர் மரபு சார்ந்த அறிவனைத்தும் திரண்ட பெருங்கடல் என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்கிறார். பீஷ்மர் மறைந்துவிட்டால் அவருக்குத் தெரிந்த மரபுச் செல்வங்கள் அனைத்தும் மறைந்துவிடும். எனவே அந்த செல்வங்களை பின்வரும் சந்ததிகள் இழக்காவண்ணம் காக்க நீ விரும்பினால் போ போய் பீஷ்மரிடம் சென்று அனைத்தையும் கேள் என்பது ஸ்ரீகிருஷ்ணனின் அறிவுரை தருமனுக்கு.
அச்சுதன் உரைத்தவண்ணமே அறப்புதல்வன் கேட்கிறான். இவ்வளவு படித்த பாட்டன் தன் நிச்சயமாக எந்தக் கருத்தை, எந்த நிச்சயத்தைக் கொண்டிருக்கிறார் என்று அறிய வேண்டும் என்பது தருமனின் வேட்கை.
இதை நன்கு விளக்கிக் காட்டுகின்றனர் உரையாசிரியர்களாகிய ஸ்ரீஆதிசங்கரரும், ஸ்ரீபராசர பட்டரும். முன்னவர் அத்வைத ஆசாரியர். பின்னவர் விசிஷ்டாத்வைத ஆசாரியர். பரம தத்துவ நிலையைப் பற்றிய சித்தாந்த முடிவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு. ஆனால் வேத வேதாந்த சாத்திரங்களின் அடிப்படையில் உயர்ந்த மோக்ஷத்திற்காக வேண்டி வழிபடத்தக்கதாக நிர்ணயிக்கப்பட்ட அந்தச் சிறந்த தெய்வம் எது? என்னும் விஷயத்தில் இருவருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை போலும்!
இவர்கள் என்ன? சங்கப் புலவர்களே கூட இந்தக் கருத்தைத்தான் மோக்ஷம் என்னும் உயர்ந்த இலட்சியத்திற்கு அருள் செய்யும் தெய்வம் என்னும் விஷயத்தில் கொண்டிருந்தார்களோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. பரிபாடலில் ‘நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்?’ என்றல்லவா கேட்கின்றனர்!
வீறுபெறு துறக்கம் — மீண்டும் பிறவிச் சுழலில் திரும்பி வந்து சிக்காத உயர்ந்த மோக்ஷம்.
ஸ்ரீமத்வாசாரியரின் துவைத சித்தாந்தப்படி இந்த ஸஹஸ்ர நாமத்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள். அவை என்னிடம் இப்பொழுது இல்லை. எனவே ஒப்பீட்டுக்கு அந்தக் கருத்துகளை என்னால் அளிக்கமுடியவில்லை. மேலும் இந்த இழையில் என் மனம் போன போக்கில் நான் ரசித்துப் படிப்பது என்பதுதான் என் நோக்கம். எனவே அனைத்து உரைக் களஞ்சியம் என்று ஆக்கும் நிர்பந்தம் எனக்கும் இல்லை.
அத்வைதம் என்னும் பார்வையில் ஒருவர் பார்க்கிறார். விசிஷ்டாத்வைதம் என்னும் பார்வையில் ஒருவர் பார்க்கிறார். எவற்றை? ஒரே கடவுளின் ஆயிரம் நாமங்களை.
இரண்டுமே அத்வைதம்தான். ஒன்று அத்வைதம் அப்படியே. மற்றொன்று சித் அசித் ஆகிய இரண்டையும் என்றும் தன்னைவிட்டுப் பிரியாத உடலாகக் கொண்ட அத்வைதம்.
ஸ்ரீமத்வரின் கருத்து நேர் எதிரானது. துவைதம். அபேதம் என்பது சரியில்லாத கருத்து. உயிருக்கும் கடவுளுக்கும் இடையே பேதம், கடவுளுக்கும் உலகத்திற்கு இடையே பேதம். உயிர்களுக்குள் பேதம். உயிர்கள், உயிரற்ற பொருள் இவற்றிடையே பேதம்.
இவற்றைத் தவிர சுத்தாத்வைதம், பேதாபேதம், அசிந்த்ய பேதாபேதம் என்று பல.
எனக்கு பாரத நாட்டின் மெய்ப்பொருள் ஆய்வுகளில் மிகவும் பிடித்ததே இந்த மாதிரியான பார்வைகளின் பன்மைதான். எவ்வளவு சித்தாந்தங்கள்! எவ்வளவு ஆகமங்கள்! எவ்வளவு கடவுள்இயல் ஆய்வுகள்!
’யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்’ என்று ஸ்ரீ தாயுமானவர் சொன்னபடிதான் வாழ்வு போகிறது என்றாலும் இவற்றில் ஆழும் போது அமர வாழ்வின் அடுப்பில் உலை கொதிக்கத்தான் செய்கிறது.
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்



