
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ஆத்மநாத சுவாமி கோயிலில் ஐந்தாம் சோமவார விழாவை முன்னிட்டு பல்லாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் பிரசித்தி பெற்ற, திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான, திருவாசகம் பிறந்த, ஆத்மநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் சோமவார சங்காபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி 24 ஆவது குருமகா சன்னிதானம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைபடி நடந்த சோமவார விழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள விநாயகர், சுப்பிரமணியர், குதிரைச்சாமி, ஆத்மநாதர், யோகாம்பிகா, ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து நிறைவாக திருவாசகம் பிறந்த இடமான குருந்தமூலம் முன்பாக ஹோமம் செய்து சங்காபிஷேகம் குருந்த மூலத்திற்கு செய்து தங்க கவசம் சாற்றி தீப ஆராதனை நடந்தது.
இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி கோயில் கண்காணிப்பாளர் கதிரேசன் செய்தார்.




